“போகும் பாதை தூரமே வாழும் காலம் கொஞ்சமே ஜீவ சுகம் பெற ராக நதியினில் நீ நீந்தவா…” இப்படி ஒரு பாடலை கேட்டு கொண்டு காரில் ஒரு பயணம் செல்ல பலருக்கும் ஆசை உண்டு. கொரோனா ஊரடங்கு காலமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பலரின் இந்த ஆசைக்கு ஒரு பெரிய தடை இருந்தது. தற்போது இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை சற்று கட்டுக்குள் வந்துள்ளதால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து பல சுற்றுலா தளங்களில் மீண்டும் சுற்றுலா பயணிகள் தங்கள் பயணப்பைகளை தயார்செய்ய தொடங்கியுள்ளனர். 


அந்தவகையில் வட இந்தியாவில் நாம் பார்க்க வேண்டிய ஒரு சுற்றுலா மாநிலம் என்றால் அது ஹிமாச்சலப் பிரதேசம் தான். இமயமலையை கொண்டு உள்ள மாநிலங்களில் இதுவும் ஒன்று. ரம்மியமான மலை சூழலில் நல்ல காற்றுடன் இளையராஜாவின் பாடல் ஒன்றுடன் கையில் ஒரு கோப்பை தேநீரும் இருந்தால் அது தான் சார் சொர்க்கம் என்று தோணும். இப்படி ஒரு காட்சியை நினைத்து பார்த்தாலே அது நமக்கு பயணத்தின் ஆர்வத்தை தூண்டும் வகையில் இருக்கும். 


அப்படி நாம் ஹிமாச்சல பிரதேசத்தில் இயற்கையை இடைவிடாமல் கண்டு ரசிக்க செல்ல வேண்டிய 5 இடங்கள் என்னென்ன?


ஷிம்லா:




 பொதுவாக புதுமண தம்பதியினரை பார்த்துவுடன் அனைவருக்கும் கேட்கும் ஒரே கேள்வி எங்க தேன் நிலவு சென்றீர்கள் என்பதுதான். அப்படி அவர்கள் செல்லவில்லை என்று சொன்னால் அவர்களுக்கு அறிவுறுத்தப்படும் இடங்களில் ஷிம்லாவும் ஒன்று. இந்த மலை பகுதியில் பல முக்கியமான இடங்களை நீங்கள் கண்டு ரசித்து கொண்டே இருக்கலாம். குறிப்பாக கிரீன் பள்ளதாக்கு பகுதி, கைலா வனப்பகுதி, இமயமலை பறவைகள் பூங்கா எனப் பல இயற்கை எழில் சூழ்ந்த இடங்கள் இங்கே உண்டு. 


கசோல்:




இந்தியாவின் அம்ஸ்டர்டெம் என்று அழைக்கப்படும் பகுதிதான் கசோல். ஏனென்றால் அங்கு உள்ளதை போல் பல இயற்கையான பகுதிகள் அமைந்திருக்கும். ட்ரெக்கிங் செல்ல ஏற்றவகையில் இங்கு கீர் கங்கா பகுதி, யான்கர் பாஸ் பகுதி,பின் பார்வதி பாஸ் பகுதி உள்ளிட்ட பகுதிகள் அமைந்திருக்கும். இவை தவிர மூன் கஃபே, ரிவர் வியூ கஃபே உள்ளிட்ட இடங்களும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் அமைந்து இருக்கும்,


கசௌளி:




இது ஒரு கன்டோன்மண்ட் பகுதி. இங்கு பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட சில கட்டடங்கள் இருக்கின்றன. மேலும் ஹவா கர் என்ற சூர்யன் உதயத்தை பார்க்கும் இடம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த இடத்தில் உள்ள உயரமான இடமான மன்கி பாய்ண்ட் இடத்தில் நின்று பார்த்தால் சொர்க்கமே உங்கள் கண்களுக்கு தெரியும். அப்படிப்பட்ட இடத்தை வாழ்நாளில் ஒரு முறையாவது பார்த்தே ஆக வேண்டும். அங்கு இருந்து சட்லஜ் நதி ஓடுவது அவ்வளவு அழகாக தெரியும். 


தரம்ஷாலா:




தரம்ஷாலா என்றவுடன் ஆன்மீக பகுதி என்று தான் நீண்ட நாட்களாக தெரிந்துவந்தது. ஆனால் எப்போது அங்கு ஒரு அழகான கிரிக்கெட் மைதானம் அமைந்ததோ அதன்பின்னர் அந்த மைதானம் இந்த இடத்தின் பெரிய அடையாளமாக மாறியுள்ளது. ரம்மியமான சூழலில் இரண்டு மலைகளுக்கு நடுவே ஒரு கிரிக்கெட் மைதானம் அமைந்திருக்கும். நியூசிலாந்திற்கு பிறகு இந்தியாவில் தான் அப்படி ஒரு கிரிக்கெட் மைதானம் அமைந்திருக்கும். இது தவிர அங்கு கரேரி டால் ஏரி பார்ப்பதற்கு சிறப்பாக இருக்கும். 


ஸ்பிட்டி பள்ளத்தாக்கு மற்றும் குளு மணாலி:


ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள இரண்டு முக்கியமான பள்ளத்தாக்கு பகுதிகள் என்றால் அது லாஹூல் மற்றும் ஸ்பிட்டிதான். டிரெக்கிங் உள்ளிட்ட அட்வென்சர் பிடித்த நபர்களுக்கு இந்த இடம் ஒரு சரியான தேர்வாக அமையும். இது தவிர ரோஹ்டாங் பாஸ் பகுதியில் அமைந்துள்ள மற்றொரு சிறப்பான சுற்றுலா தளம் குளு மணாலி. இங்கும் மலை ஏறுதல் உள்ளிட்ட சில விளையாட்டுகளை செய்ய முடியும். இதுவும் ஒரு ஹனி மூன் ஸ்பாட்தான்.




இப்படி வெறும் படித்து கொண்டு மட்டும் இல்லாமல் படித்த உடன் உங்களுடைய மொபைலை எடுத்து டிக்கெட் புக் செய்து கிளம்பி நேரில் சென்று இயற்கையை ரசித்து கொள்ளுங்கள். பயணம் உங்கள் வாழ்க்கையை, எண்ணத்தை இன்னும் கொஞ்சம் செழுமையாக்கும். 


வாழா என் வாழவே என ப்ளேலிஸ்ட் ஆன் செய்துகொண்டு கிளம்புங்கள்.


மேலும் படிக்க: 'மச்சி ஒரு டிரிப் போலமா?' ( பகுதி - 6) - ஆலப்புழாவில், மிதக்கும் படகு வீட்டு பயணம்..!