Sleeping problems in Children: உங்க வீட்டு குட்டிஸ் எப்படி தூங்குறாங்க... உடனே செக் பண்ணுங்க... நிபுணரின் பரிந்துரை
எந்த வயதினரானாலும் நல்ல தூக்கம் ஆரோக்கியமான வாழ்விற்கு மிகவும் முக்கியம். அதுவும் குழந்தைகளுக்கு போதுமான அளவு தூக்கம் நிச்சயமாக தேவை.
குழந்தைகளுக்கு தூக்கம் ஏன் முக்கியம்?
மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கும் வளர்ச்சிக்கும் தூக்கம் மிகவும் அவசியமானது. மூளையின் செயல்பாட்டிற்கு போதுமான தூக்கம் தேவை. சரியான அளவிலான தூக்கம் குழந்தைகளுக்கு கிடைக்கவில்லை என்றால் அவர்களின் நடத்தையில் பாதிப்புகளை ஏற்படுத்தலாம். அதிகமாக கோபப்படுவது, அளவுக்கு மீறி துறுதுறுவென இருப்பது, சோர்வு, கவனக்குறைவு போன்ற பல பிரச்சனைகள் ஏற்படலாம். பிற்காலத்தில் அவர்களின் வாழ்வில் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், உடல் பருமன் போன்ற பல சிக்கல்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.
இன்று, ஏன் தூக்கம் முக்கியம் என்று அதிகமாக பேசப்படுகிறது?
சீக்கிரம் படுத்தால் சீக்கிரம் எழுந்திருக்கலாம் என்பது நாம் குழந்தைகளாய் இருக்கையில் வழக்கத்தில் இருந்த பழமொழி. ஆனால் இன்றோ மாறிவிட்ட வாழ்க்கை முறை, மொபைல் போன்கள் மற்றும் கேட்ஜெட்களின் உபயோகத்தால் தூங்குவதில் தாமதம் ஏற்படுகிறது அதனால் எழுவதும் தாமதமாகிறது. இது பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரிடத்திலும் காணப்படும் கெட்ட பழக்கம். சில சமயங்களில் போதுமான தூக்கம் கிடைக்காததால் குழந்தைகள் மனஅழுத்தம், தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளுக்கு ஆளாக நேரிடுகிறது.
வயதிற்கு ஏற்ற தூக்கம் அவசியம்:
பிறந்த குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு சுமார் 15-16 மணி நேரம் வரை தூக்கம் அவசியம். பகல் இரவு அவர்கள் சமமாக தூங்குவர்கள். ஒரு வயதுக்கு மேல் உள்ள குழந்தைகள் இரவு நேர தூக்கத்திற்கு பழகி விடுவார்கள். மழலையர் குழந்தைகள் பொதுவாக 11 - 13 மணி நேரம் தூங்க வேண்டும். ஆனால் இது ஒருவருக்கொருவர் மாறுபடும்.
மனிதர்களின் தூக்கம் எவ்வாறு கட்டுப்படுத்தப்படுகிறது?
தூக்கம் ஒரு சிக்கலான செயல்முறை. உடலில் நிகழும் பல்வேறு செயல்பாடுகளையும் பாதிக்கிறது. சுற்றுசூழல் மற்றும் நம்மை சுற்றி இருக்கும் சமூகத்தின் தாக்கங்களாலும் தூக்கம் பாதிக்கப்படுகிறது. மனித உடலின் முக்கியமான கடிகாரம் மூளையின் ஹைபோதாலமஸிலிருந்து சுரக்கும் மெலடோனின் என்ற ஹார்மோனால் கட்டுப்படுத்தப்படுகிறது.
தூக்கத்துக்கான சிக்கல் : பொதுவான காரணங்கள்:
தாமதமாக படுக்கைக்கு போவது ஒரு பொதுவான காரணமாக இருப்பினும் சில மருந்துகள், டான்சில்ஸ், அடினாய்டுகள் போன்றவையும் தூக்க பிரச்சனைக்கு காரணமாக இருக்கலாம். தூக்கத்தில் நடப்பது, பேசுவது, கெட்ட கனவுகள், இரவு நேர வலிப்பு போன்றவையும் குழந்தைகளின் தூக்க பிரச்சனைக்கு காரணங்களாக இருக்கலாம்.
நரம்பியல் பிரச்சனை:
பொதுவாக நரம்பியல் பிரச்சனை இருக்கும் குழந்தைகள் தூக்க பிரச்சனையால் அவதிப்படுவார்கள். போதுமான தூக்கம் இல்லாததால் சில சமயங்களில் வலிப்பு நோய் வருவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.
சரியான தூக்கத்திற்கு சில வழிமுறைகள்:
நல்ல தூக்க பழக்கத்தை குழந்தைகளிடம் பழகுவது மிகவும் முக்கியம். குறிப்பிட்ட நேரத்தில் தினமும் படுக்கவைத்து குறிப்பிட்ட நேரத்தில் தினமும் எழுப்பவும். இதில் எந்த ஒரு மாற்றமும் இருக்க கூடாது. பள்ளி விடுமுறை நாட்களிலும் ஒரு மணி நேரத்திற்கு மேல் இது அதிகரிக்க கூடாது. தாமதமாய் தூங்குவதை அனுமதிக்காதீர்கள். அவர்களின் படுக்கை அறையை இருட்டாகவும், அமைதியாகவும் வைத்து இருங்கள். தூங்குவதற்கு முன்னர் செல்போன்கள், தொலைக்காட்சி, சர்க்கரை அல்லது காஃபின் கலந்த உணவுகள், ஜீரணமாகாத உணவுகள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். குழந்தைகள் இரவில் எழுந்தால் அவர்களை சமாதானப்படுத்தி அவர்களாகவே தூங்க அனுமதிக்கவும். போதுமான அளவு தூக்கம் குழந்தைகளுக்கு இல்லை என்றாலோ அல்லது மன அழுத்தம், கவலை தென்பட்டாலோ உடனடியாக மருத்துவரை அணுகவும்.