கண்களுக்கு கீழ் இருக்கும் கருவளையம் இன்று பலரும் சந்திக்கும் பிரச்சனைகளில் முக்கியமானதாக இருக்கிறது. முன்பு 40 வயதை கடந்த பெண்களுக்கு தான் இவை அதிகமாக இருந்தது. தற்போது ஆண்களுக்கும் கண்களுக்கு கீழ் கருவளையம் தோன்றுவது அதிகரித்துவருகிறது. பருவ வயதை அடையும் பெண்களுக்கும் முன்கூட்டியே இந்த பிரச்சனை அதிகரித்துவருகிறது.


முகத்தில் கண்களுக்கு கீழ் இருக்கும் சதை பகுதி மட்டும் மிக மிக மென்மையாகவே இருக்கும். அத னால் கண்களுக்கு அதிக வேலை கொடுக்கும் போது கண்களோடு இந்த சதைபகுதியும் பாதிப்படை கிறது. இருட்டில் செல்ஃபொன் பயன்படுத்துவது, டீவியின் அருகில் அமர்ந்து பார்ப்பது, இரவு நீண்ட நேரம் விழித்திருப்பது, ஊட்டசத்து குறைபாடு, அதிக மன அழுத்தம் இவையெல்லாமே கண்களுக்கு கீழ் இருக்கும் கருவளையத்தை அதிகப்படுத்தி விடுகிறது.


தொடக்கத்தில் கவனிக்காத போது அதிகப்படியான கருமை உருவாகி முகத்தில் நிரந்தரமாக தங்கி விடவும் வாய்ப்புண்டு. ஆனால் தொடர்ந்து சில பராமரிப்புகளை செய்யும் போது கண்களின் கீழ் இருக்கும் கருவளையம் மறைந்து கண்களும் பொலிவாக இருக்கும். இளமைக்கு அழகுக்கும் குறியீடான கண்களின் கீழ்பகுதியை அழகாக வைத்துக்கொள்ள செய்யவேண்டிய ஐந்து டிப்ஸ்… 



சருமம் பளபளக்கும் கிரீம்களைப் பயன்படுத்துதல்:


கண்களுக்குக் கீழே உள்ள தோல் மெல்லியதாக இருப்பதால், அதற்கு மென்மையான சிகிச்சை தேவைப்படுகிறது. வைட்டமின் சி, ரெட்டினாய்டுகள் மற்றும் ஹைலூரோனிக் அமிலம் நிறைந்த கிரீம்கள் கண்ணுக்குக் கீழே உள்ள கருமையைக் குறைப்பதில் நன்மை பயக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.


கண்களுக்குக் கீழே பயன்படுத்தப்படும் க்ளோ கிரீம்:


கண்களுக்குக் கீழே பயன்பகிடுத்தப்படும் க்ளோ கிரீம் மெல்லிய கோடுகள், கருவளையங்களை குறைக்க உதவுகிறது. அதே நேரத்தில், அதிலுள்ள ஹைட்ரேட்டிங் பொருட்கள் வீக்கத்தைத் தணிக்க உதவுகின்றன. இந்த க்ரீம்கள் தோலினை எப்போதும் ஈரப்பதத்துடன் வைத்திருப்பதால் வீக்கம் குறைவதாக கூறப்படுகிறது. இதில் சிறப்பம்சம் என்னவென்றால், இதனை பயன்படுத்தினால், வெறும் மூன்று முதல் நான்கே வாரங்களில் நல்ல பலனை பெறலாம். ஆனால் இது போன்ற பொருட்கள் பயன்படுத்துவதற்கு முன்பு ஒரு முறை டெர்மடாலஜிஸ்ட்டை அணுகி உங்களுடையது எந்த மாதிரியான சருமம் என்றும், அதற்கு ஏற்றது எது என்றும் கேட்டுக்கொள்வது சிறந்தது.



குளிர் அழுத்தம் தருதல்


கண்களின் கீழ்பகுதியை ஐஸ்கட்டிகளால் குளிர்வித்தல் மிகவும் சிறந்த நன்மைகளை வழங்கக்கூடியது. இது விரிந்த இரத்த நாளங்களைச் சுருக்க உதவுகிறது. ஐஸ் கட்டிகளை துணிக்குள் சுற்றி சுமார் 20 நிமிடங்கள் கண்களுக்கு கீழ் பயன்படுத்தலாம். குளிர்ந்த நீரில் நனைத்த துணியையும் பயன்படுத்தலாம். 20 நிமிடங்களுக்கு இடையில் துணியில் குளிர் குறைந்தாலோ, ஐஸ்கட்டி உருகினாலோ மீண்டும் பயன்படுத்தலாம்.


குளிர்ந்த டீ பேக்


கண்களுக்குக் கீழே குளிர்ந்த டீ பேக் பயன்படுத்துவது கருவளையங்களை எதிர்த்துப் போராட மற்றொரு சிறந்த வழியாகும். தேநீரில் காஃபின் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, அவை இரத்த ஓட்டத்தைத் தூண்டி தோலின் கீழ் பகுதிக்கு நல்ல பலனை தருகின்றன. இரண்டு பிளாக் டீ அல்லது கிரீன் டீ பைகளை ஐந்து நிமிடம் வெந்நீரில் ஊற வைக்கவும். பின்னர் 15 முதல் 20 நிமிடங்கள் குளிர்சாதன பெட்டியில் வைக்கவும். தேநீர் பைகள் போதுமான அளவு குளிர்ந்தவுடன், அவற்றை உங்கள் மூடிய கண்களில் 10 முதல் 20 நிமிடங்கள் வரை வைக்கவும். அதன் பிறகு, உங்கள் கண்களை குளிர்ந்த நீரில் நன்றாக கழுவ வேண்டும். அதன்பிறகு 10 நிமிடங்களுக்கு கண்களை மூடி வைக்கவும், அப்போதுதான் அதன் பலன் நீண்ட நாட்கள் நீடிக்கும்.


நல்ல உறக்கம்


கடைசியாக, கருவளையங்களைக் குறைக்க எளிதான மற்றும் சிறந்த தீர்வு தூக்கம் தான். எவ்வளவு கன்சீலர் பயன்படுத்தினாலும் தூக்கம் இல்லாத கண் எப்போதும் சோர்வாகவே காணப்படும். கரு வளையங்கள் நீங்க சிகிச்சைகள் பயன்படுத்தப்படலாம் ஆனால் ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள்தான் நீண்ட நாட்கள் பலன் அளிக்கின்றன. ஆரோக்கியமான உணவு மற்றும் சரியான அளவு தூக்கம் கண்களுக்கு மிகவும் முக்கியம்.