தோல் நோய் என்பது உடலின் மேற்புறங்களில் வரக்கூடிய நோய்த் தொற்றாகும். அரிப்பு, படை, கொப்பளம் போன்றவை தோல்நோயாக வகைப்படுத்தப்படுகின்றன. மேலும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதும் தோல் நோய் வருவதற்கான காரணங்களில் ஒன்றாகும். இதுமட்டுமின்றி பூஞ்சை மற்றும் அலர்ஜி எனப்படும் ஒவ்வாமையும் வருகிறது.
பிறர் பயன்படுத்திய ஆடை மற்றும் பொருட்களை நாம் பயன்படுத்துதல், பிறர் பயன்படுத்திய சோப்பு, சில கெமிக்கல் சுவாசம் போன்றவையும் அலர்ஜியை ஏற்படுத்தும். இதனோடு, அரிப்பு சொறி, சிரங்கு மற்றும் தேமல் போன்றவையும் நம் உடலில் தோல் நோய்களாக வருகின்றன. இதனை ஆரம்பத்திலேயே கவனிக்காமல் விட்டால் நமது உடலில் பெரும் சிக்கலை எதிர்கொள்ள நேரிடும்.
வறட்சியான தோல், சரும செதில்கள் போன்றவை தோல்நோயாக வரக்கூடும். இவ்வகை தோல் நோய் குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை பாரபட்சமில்லாமல் தாக்கக்கூடியது. தோல் நோய் சில நேரங்களில் பரம்பரை நோயாக மாறுவதாகவும் மருத்துவம் சுட்டிக்காட்டுகிறது. அரிப்பு ஏற்பட்டவுடன் சொறிவதால் அந்த இடம் ரணமாக மாறி தோல் நோயாக உருமாறுகிறது.
குறிப்பாக தாய்மார்களுக்கு கர்ப்பகாலம் தொடங்கி குழந்தை வளரும் வரை தோல் நோய் குறித்த விழிப்புணர்வு முக்கியமாக தேவைப்படுகிறது. சில குழந்தைகளுக்கு தாய்ப்பால் தவிர்த்து மற்ற பாலை கொடுப்பதால் ஒவ்வாமை ஏற்பட்டு, தோல் நோய் ஏற்படுகிறது. எனவே, குழந்தை பிறந்தது முதல் வளரும்வரை தாய்ப்பால் கொடுப்பது குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
குழந்தை பிறந்ததும் கிராமப்புறங்களில் குழந்தைக்கு கழுதைப்பால் கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதை தவிர்க்கவேண்டும். மேலும், குழந்தைகளுக்கு புதிய ஆடைகளும், தோலில் ஒவ்வாமையை ஏற்படுத்தும். எனவே புதிய ஆடையை துவைத்து சலவை செய்து, பின்னர் குழந்தைகளுக்கு அணிவிப்பது நல்ல ஆரோக்கியத்தை தரும். வளர்ந்த குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்து உணவு இல்லாவிட்டாலும், தோல்நோய் வர வாய்ப்புள்ளது. பெற்றோர் குழந்தைகளின் வளர்ச்சிக்கு ஏற்ற சத்துணவை தரவேண்டும்.
தோலில் வெடிப்பு, தோல் சிவத்தல், நிறமாற்றம், தோலில் உணர்ச்சியின்மை போன்றவைகளுக்கு தோலின் மேற்பகுதியில் வளரும் கிருமிகளே காரணம். இந்தக் கிருமிகள் தோலின் உட்புறத்துக்கு சென்று உடலின் மூச்சுப்பாதை மற்றும் உணவுப்பாதையில் பல சிக்கல்களை ஏற்படுத்தி ஆரோக்கியத்தை பாதிக்கின்றன. தோலில் வெண்படை, முகப்பரு போன்றவை வர வாய்ப்புள்ளன.
தோல் நோய்களை போக்கும் சித்த மருத்துவம்:
தோல் நோய்களை சர்வமாக தீர்க்கும் வகையில் நமத்து சித்த மருத்துவம் அதிக மருந்துகளை கொடுத்துள்ளது. குறிப்பாக நமது வீட்டோரங்கள், சாலையோரங்களில் காணப்படும் குப்பைமேனி கொண்டு அளிக்கப்படும் சிகிச்சை சிறந்த தீர்வை கொடுக்கின்றன. இதன் தழையை இடித்து எடுத்து இரும்பு கடாயில் இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெயை விட்டு, இடித்து வைத்த குப்பை மேனி தழையுடன் சேர்த்து வதக்கி ஆறவைத்து சொறி, அரிப்பு உள்ள இடங்களில் தடவிவினால் பத்து நாள்களில் சொறி அரிப்பு சரியாகும்.
கீழாநெல்லி இலையை நன்கு அறைத்து உடலில் அரிப்பு ஏற்படும் இடங்களில் தடவி பிறகு குளித்துவந்தால் அரிப்பு உள்ளிட்ட தோல் பிரச்சனைகள் முழுவதும் நீங்கிவிடும். மேலும் கீழாநெல்லி கொத்தமல்லி தழைகளோடு பால் விட்டு அரைத்து தேமல் இருக்கும் பகுதியில் பூசி 30 நிமிடங்களுக்கு பிறகு குளித்துவர குணம் காணலாம்.
கருந்துளசி மருத்துவம் மூலமும் தோல் நோய்களை குணமாக்கலாம். நல்லெண்ணெயை ஒரு பாத்திரத்தில் விட்டு பூண்டு சிலவற்றை சேர்த்து வதக்கி பிறகு அதனை ஆறவைத்து வடிகட்டி படர் தாமரை உள்ள இடங்களில் தடவிவர தீர்வை காணலாம். வெற்றிலையோடு துளசி இலையை சேர்த்து அறைத்து தோல்நோய்களான அரிப்பு மற்றும் தேமல் மேல் தடவிவர நல்ல பலனை காணலாம். இதோடு நல்ல சத்தான உணவுவகைகளை உண்பது நலம் தரும். தோல்நோய் விழிப்புணர்வை ஒவ்வொருவரும் உணர்ந்து கடைப்பிடிப்பது அவசியமாகும்.
தோல் நோய் வருவதை தவிர்க்க தினசரி குளித்து சுத்தமாக இருக்க வேண்டும். கைகளை அடிக்கடி சுத்தமான நீரில் சோப்பு போட்டு கழுவுதல் வேண்டும். தோல் நோய் தாக்கம் இருப்பவர்களின் நேரடி தொடர்பை தவிர்க்க வேண்டும். அவர்களுடன் கைக்குலுக்கும் பழக்கத்தை தவிர்க்கவேண்டும்.
உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா பரவலை தடுக்க முகக்கவசம் போடுவதைப்போல், கையுறை போடுதல் சிறப்பு.
மேலும் வேர்வை அடிக்கடி வெளியேறும்போது சுத்தப்படுத்திக்கொள்ளுதல் அவசியம். மஞ்சள் கிழங்கு ஒருத்துண்டு, அருகம்புல் ஒரு கைப்பிடி அளவு எடுத்து அரைத்து அதனை தோல் தெடர்பான பாதிப்பு உள்ள இடத்தில் நன்றாக தடவி அரைமணி நேரம் கழித்து குளிக்க வேண்டும். இப்படி செய்தால் பூரண குணம் கிடைக்கும்.
வேப்பிலை, சிறிய வெங்காயம் இரண்டையும் அரைத்து உடல் முழுவதும் பூசி அரைமணி நேரம் கழித்து குளித்துவந்தால் தோல்நோய் நாளடைவில் குணமாகும். நன்னிவேர்கூட தோல் வியாதிக்கு சிறந்த மருந்தாகும். தண்ணீரில் 20 கிராம் நன்னி வேரை காய்ச்சி சுண்டியதும் இறக்கிவைத்து, காலை மாலை இரண்டு வேளை குடித்துவர தோல் நோய்க்கு சிறந்த தீர்வை காணலாம்.
தோல்நோய்களை குணமாக்க பூவரசு, மருதாணி, அருகம்புல் ஆகிய மூலிகைகளை பயன்படுத்தலாம். இந்த மூன்று மூலிகைகளும் ரத்தத்தை சுத்தமாக்கும் ஆற்றல் கொண்டது. அதோடு தோல்நோய்களை தீர்க்கும் வல்லமை கொண்டது. தோலுக்கு அழகை கொடுக்கும். முன்னோர்கள் நகப்பூச்சாக மருதாணியை பயன்படுத்தினர். இதனால் நகம், தோல் சார்ந்த இடத்தில் நோய் தாக்கி சொத்தை ஆவதை தவிர்க்கிறது.
மருதாணியின் துளிர் இலைகளை கைப்பிடி அளவு எடுத்து அதனுடன் 2 பல் பூண்டு ஆறு மிளகு, மஞ்சள் பொடி சேர்த்து நீரில் கொதிக்கவைத்து வடிகட்டி தினமும் 50 மில்லி குடிக்கலாம். நமது உடலில் அனைத்து உறுப்புகளையும் பாதுகாப்பது தோல்தான். எனவே தோலின் பயன் உடலுக்கு மிக முக்கியமானது. தோல் நோயில் பரு, சொறி, சிரங்கு, குதிகால் வெடிப்பு, தோல் தடிப்பு, தோல் வெள்ளை நோய், படுக்கைப்புண், பிணிகருப்பு, யானைசொறி, வெண்குஷ்டம் இப்படி தோல்நோயின் பாதிப்புகளை களைய சித்த மருத்துவத்தில் குணம் காணலாம்.