மார்பக சுயபரிசோதனை என்பது, ஒவ்வொருவரும் தனக்குத்தானே செய்து கொள்ளும் பரிசோதனை. இது ஒவ்வொருவரும் தெரிந்து வைத்து இருக்க வேண்டிய முறையாகும். ஆண்கள் பெண்கள் இருவரும் தெரிந்து வைத்து இருக்க வேண்டியது அவசியம். மார்பக புற்றுநோய் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் வருவதற்கான வாய்ப்புகள்  இருக்கிறது. ஒவ்வொரு  மாதமும் இந்த பரிசோதனைகளை தானாக செய்து கொள்ள வேண்டியது அவசியம். மாதந்தோறும் சுயபரிசோதனைகள் செய்து கொள்வதன் மூலம், மார்பக புற்றுநோய் ஆரம்ப நிலையில் கண்டறிந்து சிகிச்சை  அளிக்க முடியும்.




ஒவ்வொரு மாதமும் மாதவிடாய்  முடிந்த பிறகு பரிசோதனை செய்து கொள்ளலாம்.தொடுதல், சருமத்தில் ஏற்படும் மாற்றங்கள் வலி ஆகியவற்றின் மூலம் பரிசோதனை செய்து ஏதேனும் கட்டிகள்  இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.


படிநிலை 1 - கண்ணாடி முன் நின்று கொண்டு,  தோள்களை நேராக வைத்து  கைகளை இடுப்பில் வைத்து கொண்டு, கண்ணாடியில் உங்கள் மார்பகங்களை காண  வேண்டும்.மார்பகங்கள் சம அளவு வடிவத்துடனும், எத்தகைய வீக்கம் , உருமாற்றம் அடையாமல் இருக்க வேண்டும் இது  சாதாரணமாக ஆரோக்கியமான மார்பகங்கள் இருப்பதற்கு அறிகுறிகள்.


என்ன மாற்றங்கள் இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும் - மார்பகங்களில், குழிகள்,மடிப்புகள் மற்றும் புடைப்புகள் இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும். மார்பு காம்புகள் நிலைமாறியிருந்தால், அல்லது தலைகீழாக திரும்பி இருந்தால் சருமம் சிவந்தோ, தடித்தோ இருந்தால் இது போன்று இருந்தாலும் மருத்துவரை அணுக வேண்டும்.




படி நிலை 2 - கண்ணாடி முன் நின்று இரண்டு கைகளையும் தலைக்கு மேலே  தூக்கி, வைத்து கொண்டு மேற்சொன்ன அறிகுறிகள் ஏதேனும் இருக்கிறதா என்பதை பரிசோதனை செய்து  பார்க்க வேண்டும்


படிநிலை 3 - கண்ணாடியின் முன் நின்று உங்கள் மார்பு காம்புகளை  மெதுவாக அழுத்தவும். பால் போன்றோ, மஞ்சள் நிறத்திலோ, நீர்மமாகவோ, அல்லது இரத்தமாகவோ ஏதேனும் வெளியேறுகிறதா என்பதை பரிசோதனை செய்து பார்க்க வேண்டும்.


இது போன்று ஏதேனும் வெளியேறினால் மருத்துவரை அணுக  வேண்டும்.




படிநிலை 4 - படுத்த நிலையில் செய்ய வேண்டிய பரிசோதனை வலது கையை கொண்டு இடது மார்பையும், இடது கை கொண்டு வலது மார்பையும் பரிசோதனை செய்து பார்க்க வேண்டும். உங்கள் முதல் மூன்று விரல்களை நேராக நீட்டி தட்டையான தன்மையை உருவாக்கி, அழுத்தமாக சிறு வட்டமாக  மார்பகங்களில் தடவி பார்க்க வேண்டும். வலது கை கொண்டு இடது மார்பகத்தை தடவி பார்க்க வேண்டும். கழுத்தெலும்பு துவங்கி, கச்சை கோடு  வரை தடவி பார்க்க வேண்டும்.  மேலிருந்து கீழாகவும், கீழிருந்து மேலாகவும், பக்கவாட்டில் இருந்து மார்பு காம்புகளை நோக்கியும் தடவி ஏதேனும் கட்டிகள் இருக்கிறதா என்பதை பரிசோதனை செய்ய வேண்டும் மார்பகம் மற்றும் அக்குள் வரைக்கும் கவனமாக இதே போன்று மூன்று விரலைகளை கொண்டு தடவி  பார்க்கவும்.


இரண்டு மார்பகங்களின் இதே போன்று செய்ய வேண்டும்.


ஏதேனும் புடைப்பு மற்றும் தடிப்பு இருக்கிறதா என்பதை ஆராய்ந்து பரிசோதனை செய்ய வேண்டும். மார்பகங்களின் அனைத்து பகுதியிலும் செய்ய வேண்டும்.




படிநிலை 5 - நின்ற அல்லது  அமர்ந்த நிலையில் பரிசோதனை செய்யலாம். அல்லது சில பெண்கள்  குளிக்கும் போது இந்த பரிசோதனை  மேற்கொள்கிறார்கள்.இடது கை கொண்டு வலது பக்க மார்பகம் மற்றும் வலது கை கொண்டு இடது பக்க மார்பகத்தை மூன்று விரல்களால் தடவி பார்க்க வேண்டும். ஏதேனும் தடிப்புகள் அல்லது புடைப்புகள் தெரிகிறதா என்பதை பரிசோதனை செய்து பார்க்க வேண்டும்.


தோலின் நிறம், கட்டிகள் ஏதேனும் தென்பட்டால்  முதலில் பயப்பட வேண்டாம். அனைத்து கட்டிகளும் புற்றுநோய் கட்டிகள் இல்லை. ஏதேனும் மாறுதல் தென்பட்டால் மருத்துவரை அணுகி கூச்சப்படாமல் ஆலோசனை பெற்று கொள்ள வேண்டும்.


மேமோகிராம் - நீங்கள் வீட்டில் செய்யும் சுயபரிசோதனையும், மேமோகிராம் பரிசோதனையும் இரண்டு வெவ்வேறு பரிசோதனைகள். சுய பரிசோதனையில் கண்டறிந்த மாறுதல்களை உறுதி படுத்துவதற்காக மேமோகிராம் பரிசோதனை செய்ய படுகிறது. 40 வயதுக்கு மேல் இருக்கும் பெண்களுக்கு ஆண்டிற்கு  ஒரு முறை இந்த மேமோகிராம் பரிசோதனை செய்யப்படுகிறது.


மேற்கண்ட பரிசோதனைகள் செய்த பிறகு  என்ன வகையான புற்றுநோய் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.


 அடுத்த கட்டுரையில், மார்பக புற்றுநோய் வகைகளைத் தெரிந்து கொள்வோம்.