எதிர்காலச் சந்ததியினரைக் காக்கும் வகையிலும், காகிதப்பைகளின் முக்கியத்துவத்தினை மக்களுக்கு புரிய வைக்கும் விதமாகவும் ஒவ்வொரு ஆண்டும்  ஜூலை 12-ஆம் தேதி உலக காகிதப்பை தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.


உலகில் ஒவ்வொரு நாளும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. நல்ல தரமான மண்வளத்தினை இழந்து நிற்கின்றோம். எதிர்காலச் சந்ததியினரை எப்படி நாம் பாதுகாக்கப்போகிறோம் என்று புலம்பிய பொழுதுதான் இதற்கெல்லாம் ஒரு முக்கியக்காரணமாக நம் கண்முன்னே தோன்றியது பாலீதின் பைகள். எத்தனை ஆண்டு காலங்களால் ஆனாலும் முற்றிலும் மக்காத தன்மை கொண்டது இந்த பாலீத்தின் பைகள். சமீப காலங்களாக இதன் பயன்பாடுகள் அதிகரிக்கத் தொடங்கிய நிலையில்தான், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இதனைத் தடைசெய்ய வேண்டும் அல்லது மக்கும் தன்மையுடன் கூடிய பாலிதீன் பைகளை தயாரிக்க வேண்டும் என்று கூக்குரலிட்டனர். ஆனால் இன்னமும் பல இடங்களில் இதனுடைய பயன்பாடுகள் அதிகமாகத்தான் உள்ளது.


சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்காலச்சந்ததியினரை மனதில் வைத்து தெரிவிக்ககூடிய இந்த கருத்துகளையெல்லாம் 1850 களிலே இதற்கான முயற்சிகளைக் கண்டுபிடிப்பாளர்கள் மேற்கொண்டிருந்தார்கள். குறிப்பாக அமெரிக்கக் கண்டுபிடிப்பாளரான பிரான்சிஸ் வோல் (Francis Wolle) 1852 ஆம் ஆண்டிலேயே காகிதப்பைகளை தயாரிப்பதற்கான மிகப்பெரிய நிறுவனத்தினை ஜூலை 12 ஆம் தேதி உருவாக்கினார். மேலும் காகிதப்பை இயந்திரத்திற்கான காப்புரிமையினையும் பெற்றார். இந்த நாளினை மனதில் வைத்துத் தான் உலக காகிதப்பை தினம் கொண்டாடப்படுகிறது எனவும் கூறப்படுகிறது. இந்நேரத்தில் காகிதப்பை உருவான மற்றும் பயன்படுத்தும் விதம் தொடர்பான வரலாற்றினை இங்கே நாம் அறிந்துகொள்வோம்.




பிரான்சிஸ் வோல்க்கு அடுத்தபடியாக, , 1871-ஆம் ஆண்டு  Margaret E. Knight என்பவர், காகிதப்பைகளை தட்டையான மற்றும் பொருட்களை வைத்து எடுத்துச்செல்லும் வகையில் மடித்து ஒட்டக்கூடிய இயந்திரங்களை வடிவமைத்து புதிய சாதனையினை நிகழ்த்தினார். இதன் மூலம் தயாரிக்கப்படும் காகிதப்பைகள் மளிகைப்பொருட்கள், காய்கறிகளை எடுத்துச்செல்வதற்கு வசதியாகவே அமைந்தன. இதேபோன்று பல கண்டுபிடிப்பாளர்கள் காலச்சூழலுக்கு ஏற்ப காகிதப்பைகளை வடிவமைக்கும் முறைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தியிருந்தனர். இவர்களின் அனைவரின் கூட்டு முயற்சித்தான் தற்பொழுது பல விதவிதமாக காகிதப்பைகளை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.


இந்நிலையில் தான் பிளாஸ்டிக் பைகளை ஒழிக்கும் விதமாக, தமிழக அரசும் அதிரடி அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டது. அதில் இனிமேல் எந்த கடைகளிலும் பிளாஸ்டிக் பைகள் அதாவது மக்கும் தன்மையில்லாத பைகளை பயன்படுத்தக்கூடாது எனவும் மீறினால் கடைகளுக்கு சீல் வைப்பதோடு, அபராதமும் விதிக்கப்படும் என அறிவித்திருந்தனர். சில காலங்களில் 80 சதவீத அளவிற்கு மக்கள் பாலீதின் பைகளை மாற்றாக வேறு வகையாக பைகளை கடைகளுக்க எடுத்துச்செல்ல ஆரம்பித்துவிட்டனர். மேலும் தற்போது மக்களிடையே காகிதப்பைகள் பயன்படுத்தும் முறைகள் டிரெண்டாகி வருகிறது. குறிப்பாக உயர்தர பிராண்டுகள் விற்பனை செய்யும் கடைகள் போன்ற பலவற்றில் விதவிதமான காகிதப்பைகள் மக்களின் ஷாப்பினை மேலும் அழகாக மாற்றுகிறது என்பதுதான் யதார்த்த உண்மை.




மஞ்சப்பை எடுத்துச்செல்வதும், காகிதப்பைகளில் பொருட்களை வாங்கிச்செல்வது அவமானம் என்று நினைத்தால், நிச்சயம் நம்முடைய சந்ததிகளை எதிர்காலம் கேள்விக்குறியாகத்தான் மாறிவிடும். 1 சதவீதம் மட்டுமே மறுசுழற்சி செய்யக்கூடிய இந்த பிளாஸ்டிக் பைகளை ஒழிக்கவும்,  பழைய நடைமுறைகளை மீட்டெடுக்கவும், இயற்கைச்சூழலைக் காக்கவும் இந்த உலக காகிதப்பை தினத்தில் அனைவரும் உறுதியேற்போம்