பள்ளிக்கூட கட்டணத்தை நினைச்சா ஒரு குழந்தையே போதும் என்பதுதான் இங்கு பெரும்பாலான பெற்றோரின் மனப்பாங்காக இருக்கிறது. திருமணத்துக்கு முன்னரே எத்தனை குழந்தை என்பது இக்கால தம்பதி பேசி திட்டமிட்டுக் கொள்கின்றனர். இது நம்மூரில் மட்டும் என நினைக்காதீர்கள் மக்கள் தொகை அதிகமுள்ள எல்லா நாடுகளிலுமே இது நிலவுகிறது. இந்நிலையில் ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக் கொள்வதால் இருக்கும் சாதக பாதகம் பற்றி நிபுணர்கள் எடுத்துரைக்கின்றனர்.


கஃபேமாம் என்ற பேரண்டிங் இணையதளம் ஒன்று இது தொடர்பாக விரிவான செய்திக் கட்டுரைகள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.


தரமான கல்வி:


ஒரே ஒரு குழந்தை இருந்தால். அந்தக் குழந்தைக்கு பள்ளிக்கூடம் தொடங்கி தரமான கல்வி கிட்டுகிறது. அமெரிக்க சமூக ஆய்வு மேற்கொண்ட ஆய்வில், ஒரே ஒரு குழந்தை இருக்கும்போது குழந்தைக்கு தரமான கல்வி கிடைக்கிறது. குழந்தைகள் எண்ணிக்கை அதிகமாகும்போது பெற்றோருக்கு எல்லாக் குழந்தைகளுடனும் பேச நேரமிருப்பதில்லை. குழந்தைகள் கல்வி நிலையங்களையும் அவர்கள் விருப்பத்தின் பேரில் அல்லாது குடும்பத்தின் பொருளாதார நிலவரத்தின் பேரிலேயே தேர்வு செய்ய வேண்டியிருக்கும்.


ஒரே குழந்தை மகிழ்ச்சியான குழந்தை:
ஒரே குழந்தையாக இருக்கும் குழந்தைகள் மகிழ்ச்சியான குழந்தைகளாக அறியப்படுகிறார்கள். காரணம் அவர்களுக்கு சகோதர சண்டை இருக்காது. அக்கா, அண்ணன், தம்பி, தங்கை என்று அவர்கள் சண்டையடித்துக் கொள்ளத் தேவையில்லை.


விவாகரத்து வாய்ப்பு அதிகம்:
ஆனால் ஒரே குழந்தையாக வளருவோர் பின்னாளில் திருமண பந்தத்தில் சமரசம் செய்துகொள்ள முடியாமல் விரைவில் விவாகரத்து செய்து கொள்ள வாய்ப்பு அதிகம் என்று கூறப்படுகிறது. 


பதின்ம வயது மன அழுத்தம்:
ஒரே குழந்தையாக இருப்பவர்களுக்கு பதின்ம வயதில் மன அழுத்தம் ஏற்பட வாய்ப்பிருக்கும். அவர்கள் எப்போதும் தாங்கள் போதுமான அளவிற்கு நேசிக்கப்படவில்லை என நினைப்பர். அவர்கள் தனிமையாக, குற்ற உணர்வு மிக்கவர்களாக இருப்பார்கள்.


ஒரே குழந்தையாக இருப்பவர்களுக்கு போதிய அளவு சமூக ஒத்துபோதல் பழக்கம் இருக்காது எனக் கூறுகின்றனர். குழந்தை ஒற்றை ஆளாக வளரும்போது, பிடிவாதம், கோபம், இணைந்து செயல்பட முடியாமை போன்ற குணங்களோடு வளர அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. இந்தப் பிரச்னைக்கு Single Child Syndrome என்று பெயர். ஒற்றைக் குழந்தையாக வளரும் பிள்ளைகள், பெரும்பாலான நேரத்தை டி.வி, கம்ப்யூட்டர், வீடியோ கேம்ஸ் போன்றவற்றோடுதான் செலவழிக்கிறார்கள். அதற்குப் பதிலாக ஓவியம், கராத்தே, இசை, விளையாட்டுப் பயிற்சிகள் என்று அவர்களின் கவனத்தை சுவாரஸ்யமான வழிகளில் திருப்பலாம். ஆனால் ஒன்று, எக்காரணம் கொண்டும் அவர்களுக்கு விருப்பமில்லாத ஒரு கலையை கற்றுக்கொண்டே ஆகவேண்டும் என்று அவர்களை வற்புறுத்தாதீர்கள். இதனால், அவர்கள் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாக நேரிடலாம்.


தனிக்குடும்பத்தில் வாழும் ஒற்றைக் குழந்தை அம்மா, அப்பா என அதன் உடமைகள் எதையும் பகிரவேண்டிய அவசியம் இருக்காது. எனவே, அக்குழந்தை பள்ளியிலோ, வெளியிடங்களிலோ பகிர வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. எனவே, அந்த குழந்தை மிகவும் கஷ்டப்பட வேண்டியிருக்கும். அதனால், மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள பெற்றோர் கற்றுக்கொடுக்க வேண்டும் எனக் கூறுகின்றனர் குழந்தை வளர்ப்பு துறை நிபுணர்கள்.