குழந்தை பேறு என்பது, பெண்களுக்கான கடமைகளில் ஒன்றாக ஆசிய நாடுகளில் பார்க்கப்படுகிறது.குழந்தை  பெற்றெடுக்கும் பெண்ணுக்கு, மகிழ்ச்சியையும், குடும்பத்தை பொறுத்தவரை வாரிசு வந்து விட்டது என்பதையும்,ஒருங்கே சொல்லும் ஒரு உணர்வாகும்.
நிறைய குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றால், பொருளாதார ரீதியாகவும்,அந்த குடும்பம்,மிகப்பெரிய அளவில் இருக்க வேண்டும்.அல்லது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும்  இரண்டாவது குழந்தை  பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆவல்  அதிகமாக இருக்க வேண்டும்.


அதை தவிர்த்து, முதலில் பெற்றெடுக்கும் குழந்தைக்கு மட்டுமே  தாய் மற்றும் குடும்பத்தில் உள்ளவர்களின்  அன்பும், அரவணைப்பும் கிடைக்கும் என்றால், இரண்டாவது குழந்தைக்கு திட்டமிடும்போது,பின்வரும் விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.


தாயின் உடல்நிலை மற்றும் வயது:


இரண்டாவது குழந்தை வேண்டும் என்று குடும்பத்தில் உள்ள அனைவரும் விருப்பப்படும் போது, தாயின் உடல் நலனை முதலில் கவனத்தில் கொள்ள வேண்டும்.முதல் குழந்தை சுகப்பிரசவத்தில் பிறந்தது என்றால்,பெரிதாக பிரச்சினை ஒன்றும் இருக்கப் போவதில்லை. ஆனால் முதல் குழந்தை அறுவை சிகிச்சையின் மூலம் பிறந்திருந்தால், எந்த காரணத்திற்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது,என்பதை கவனத்தில் கொண்டு,மருத்துவரின் அறிவுரையை ஏற்று,இரண்டாவது குழந்தை பெற்றெடுப்பதை மிக கவனமாக திட்டமிட வேண்டும்.


முதல் குழந்தை பெற்றெடுக்கும் போது,செய்த தவறுகளை எல்லாம், இந்த முறை செய்யாமல்,தாய் பிரசவிக்கும் காலத்தில்,மன அழுத்தம் இல்லாமல்,மற்றும் குழந்தை இலகுவாக சுகப்பிரசவத்தில் பிறக்க, இன்று நிறைய மருத்துவமனைகளில், தரப்படும் யோகா சம்பந்தப்பட்ட உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.இது சுகப்பிரசவம் மற்றும் தாய்க்கு ஏற்படும் வலிகளை குறைக்க ஏதுவாகும். ஒருவேளை  தாயின் வயது காரணமாக இரண்டாவது குழந்தை  சிசேரியன் எனப்படும் ஆபரேஷன் மூலமே பெற்றெடுக்க முடியும் என்றால்  இதையும்  குடும்பத்தில் உள்ள அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்  தாயின் வயது உடல்நிலை  அவருக்கு ஏற்பட்டிருக்கும்  நீரிழிவு ரத்த அழுத்த மாறுபாடு தைராய்டு மற்றும் எலும்பு பலவீனம் போன்றவற்றை கவனத்தில் கொண்டு,மருத்துவரை கலந்த ஆலோசிப்பது மிக முக்கியமாகும்.


முதல் குழந்தைக்கும் இரண்டாவது குழந்தைக்கும் இடையேயான வயது வித்தியாசம்:


முதல் குழந்தைக்கும்,இரண்டாவது குழந்தைக்கும்,குறைந்தபட்சம் இரண்டில் இருந்து மூன்று வருடங்கள் இடைவெளி இருக்க வேண்டியது அவசியம்.இதைப் போலவே முதல் குழந்தைக்கும் இரண்டாவது குழந்தைக்கும் 12 ல் இருந்து 15 வயதிற்கு மேல்,வித்தியாசம் இல்லாமல் பார்த்துக் கொள்வது அவசியம்,ஏனெனில் 15 வயதுக்கு மேல் வளர்ந்துவிட்ட, டீன் ஏஜ் பருவத்தினரை வீட்டில் வைத்துக்கொண்டு,அடுத்த குழந்தைக்கு திட்டமிடும்போது, அவர்கள் மன நிலையை நன்கு புரிந்து கொண்டு,திட்டமிட வேண்டும்.


குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலையை கருத்தில் கொள்ள வேண்டும்:


முதல் குழந்தை இருக்கும் வீட்டில், இரண்டாவது குழந்தைக்கு திட்டமிடும்போது,முதல் குழந்தைக்கான பொருளாதார தேவை,கல்வி என அவர்களின் அடிப்படை தேவைகள் பூர்த்தியாகி விட்டதா என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.பிறக்கப் போகும் இரண்டாவது குழந்தைக்கு,சமச்சீரான உணவு,எதிர்காலத்தில் அவர்கள் விரும்பும் கல்வி,என அனைத்தையும் தர முடியுமா என்பதையும், குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களுடன் கலந்து பேசி முடிவெடுப்பது,எதிர்காலத்தில் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் இன்றி,அந்த குழந்தைக்கு பாதுகாப்பான ஒரு வாழ்க்கையை அமைத்து கொடுக்க ஏதுவாக இருக்கும்.


 இப்படியாக,இரண்டாவது குழந்தைக்கு திட்டமிடும் தாய் மற்றும் குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும், மேலே சொன்னபடி,தாயின் வயது, முதல் குழந்தைக்கும் இரண்டாவது குழந்தைக்குமான வயது வித்தியாசம், தாயின் உடல்நிலை, குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலை, இரண்டாவது பிறக்கப் போகும் குழந்தைக்கு தரவேண்டிய அன்பு அரவணைப்பு,இதனால் முதல் குழந்தைக்கு விட்டுப் போகாமல் கிடைக்கும் அன்பு,அரவணைப்பு என அனைத்தையும் உறுதி செய்து கொண்டு, இரண்டாவது குழந்தையை திட்டமிடுவது சிறப்பானதாக இருக்கும்.