ஈ.வெ.ராமசாமி என்று இயற்பெயர் கொண்டு பெரியார் என்று அழைக்கப்பட்ட அவர் செப்டம்பர் 17 ஆம் தேதி, 1879 ஆம் ஆண்டு ஈரோட்டில் பிறந்தார். பலரும் பேசத் தயங்கிய கருத்துக்களை பொதுவெளிக்கு கொண்டு வந்து அதன் மூலம் உரையாடல்களையும், விவாதத்தையும் தொடர்ந்து ஏற்படுத்தியதே அவர் வாழ்வின் மிகப்பெரிய சாதனை ஆகும். பெரியார் இன்றும் நீக்கமுடியாத அரசியல் கருத்துகளால் நம் வாழ்வோடு ஒன்றிணைந்து இருக்கிறார்.


அவர் ஒரு தலைவர் என்பதை தாண்டி ஒரு சிந்தனையாளராக அனைவரும் மதித்தே ஆகவேண்டிய கட்டாயத்தை உருவாக்குகின்றன அவருடைய பேச்சும் எழுத்துக்களும். அவை யாவும் அவர் வேறு யாரிடமிருந்தோ, ஏதோ புத்தகத்தில் இருந்தோ பெற்றுக்கொண்டவை அல்ல. வாழ்வை ஆய்வுக்குட்படுத்தி அதன் மூலம் அவர் அறிந்துகொண்ட சம நீதியை, சமூக நீதியை மக்களிடையே பரப்புகிறார்.


"யார் சொல்லியிருந்தாலும் எங்கு படித்திருந்தாலும் நானே சொன்னாலும் உனது புத்திக்கும் பொது அறிவுக்கும் பொருந்தாத எதையும் நம்பாதே",


என்று கூறியவர் எந்த புத்தகத்தையும் நம்பியிருக்க வாய்ப்பு இல்லை. இதனை அந்தநேரத்தில் யோசித்ததுதான் பலருக்கு இப்போது கிடைக்கப்பெற்று உதவியாக இருந்து வருகிறது. அப்படிப்பட்ட கருத்துகள் அரசாங்கத்தில் எதிரொலித்தது ஒருபக்கம் என்றால் இன்றும் மக்கள் மனதில் எதிரொலிப்பது மிகவும் அவசியமானது. அப்படி நாம் இன்று படித்தாலும் சிந்திக்க தூண்டும் பெரியாரின் கருத்துகளை பெரியார் நினைவு நாளான இன்று அறிந்துகொள்வோம். மற்றவர்களுடைய நினைவு நாட்களை அவர்களது சிலைக்கோ, உருவப்படத்திற்கோ, சமாதிக்கோ சென்று நினைவு படுத்தி மரியாதை செய்து விடலாம். ஆனால் பெரியாரை நினைத்து பார்க்க நினைவிடங்களுக்கு செல்ல வேண்டியதில்லை அவரது சிந்தனைகளை தான் நினைக்க வேண்டும், அதுவே சரி.



"சிந்திப்பவன் மனிதன்; சிந்திக்க மறுப்பவன் மதவாதி; சிந்திக்காதவன் மிருகம்; சிந்திக்கப் பயப்படுகிறவன் கோழை"


"கடவுள் மறுப்பாளன் என்று என்னை குறிப்பிட வேண்டாம். அதனையும் தேடி அலைந்து அலுத்துக் களைத்து ஓய்ந்தவன் என்று வேண்டுமானால் என்னை குறிப்பிடுங்கள். ஏனெனில் நான் கடவுள் வேண்டாம் என்பதனால் அது இருக்கக் கூடாது என்று கூறவில்லையே…"


"ஒரு காலத்து முறைகளே எக்காலத்துக்கும் என்றால் மனிதனுக்கு அறிவு வளர்ச்சி இல்லை என்பதுதான் பொருள்"


"ஆயுதமும் காகிதமும் பூஜை செய்ய அல்ல, புரட்சி செய்ய"


"நான் கூறுவதை மறுப்பதற்கு உங்களுக்கு உரிமை உண்டு, என்னை பேசாதே என்று கூற உரிமையில்லை"


தொடர்புடைய செய்திகள்: TN Rain Alert: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழை.. எந்தெந்த மாவட்டம்? இன்றைய வானிலை நிலவரம்..


"தெரியாததை,இல்லாததை நம்ப வேண்டும்; ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதால் மனிதன் அறிவு பெற முடியாமல் சிந்தனை சக்தியற்றவனாக ஆகி விடுகின்றான்"


"எதிரிகளுடன் போராடுவது முக்கிய வேலை தான் ஆயினும் அதைவிட முக்கியம் துரோகிகளை ஒழிக்க போராடுவது ஆகும்"


"கையாலாகாதவனுக்கு கடவுள் துணை, அறிவு இல்லாதவனுக்கு ஆண்டவன் செயல். தவற்றை உணரமுடியாத உனக்கு தலைவிதி"


"பிச்சைக்காரனுக்குச் சோறு போடுவது நாத்திகமேயாகும். ஏனெனில் கடவுள் பார்த்து ஒருவனை அவனது கர்மத்திற்காகப் பட்டினி போட்டிருக்கும் போது நாம் அவனுக்கு சோறு போடுவது கடவுளுக்கு விரோதமான செயல் தானே"


"சமுதாய சீர்திருத்தத்தின் கடைசி எல்லை பொதுவுடைமை என்பதைப் போலவே நாத்திகமும் அறிவின் உண்மையான கடைசி எல்லையாகும்"



இப்படிப்பட்ட கருத்துக்கள் மூலம் நம் வாழ்வில் ஒவ்வொரு நாளும் நாம் செய்யும் முட்டாள்தனங்களை கேள்வி எழுப்பும் வேலையை தொடர்ந்து செய்து வரும் அவரை எதிர்ப்பவர்கள் அன்றும் இன்றும் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள். அவருடைய சிலையை உடைப்பதனாலேயோ இழிவு படுத்துவதனாலேயோ அவரை அவமானப்படுத்தி விடலாம் என்று நினைக்கும் பலரைப் பார்த்து அவர்களுக்கும் ஒரு பதிலை கூறுகிறார், "என்னை 'உண்மையாய்' எதிர்க்கத் துவங்குங்கள். அந்த உண்மை ஏன் எதிர்க்கின்றோம் என்ற கேள்வியை உங்கள் மூளைக்குள் எழுப்பும். அந்த கேள்விக்கான தேடல் நீங்கள் மதத்தின் பெயராலும், கடவுளின் பெயராலும் இந்தியாவில் எப்படிப்பட்ட அடிமுட்டாளாய் வாழ்கிறீர்கள் எனும் விடையில் கொண்டு போய் சேர்க்கும்", என்கிறார்.