பனை மரத்தினை, வேரோடு வெட்டி விற்கவும், தவிர்க்க முடியாத சூழ்நிலையில் பனைமரங்களை வெட்ட நேரும் நிகழ்வுகளில், மாவட்ட ஆட்சியர் அனுமதி பெறவேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பனை மரங்களை பாதுகாக்கவும், பனைமர விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பெருக்கவும் தமிழ்நாடு அரசு அதிரடி திட்டங்களை வேளாண் பட்ஜெட்டில் அறிவித்துள்ளது.


திடீரென ஏன் பனை மரத்துக்கு இத்தனை முக்கியத்துவம் என்ற கேள்வி எழலாம்.


அதற்கு முதல் காரணம், பனைமரம் நமது மாநில மரம் என்பதே. மற்றொரு காரணம் பனை மரம் ஒரு கற்பகத்தரு. பனைமரக் காடு மழை ஈர்ப்பு மையம். பனை மரங்கள் நீர் நிலைகளின் காவலன். பனை மரத்தின் வேர் முதல் உச்சி வரை அனைத்து பொருட்களும் மக்களுக்கு பயன்படக் கூடியவை. பனை மரத்திலிருந்து பதநீரை காய்ச்சி இனிப்பான தின்பண்டம் தயாரிக்கலாம். பதநீர் பண்டங்கள் பற்றி கல்வெட்டில் கூட குறிப்பு இருக்கிறது. பனை ஓலைகள், தோரணம் கட்ட, பெட்டி, பாய் உள்ளிட்ட பொருட்கள் செய்யப் பயன்படுகிறது. அதன் பச்சை மட்டையைக் கொண்டு வீடு, தோட்டங்களுக்கு வேலி அமைக்கலாம். பனை நார் பிரஷ் செய்ய பயன்படுத்தப்படுகிறது.  உண்பதற்கு இனிய பழம் தருகிறது. கீழே போடும் பனங்கொட்டை, கிழங்காக மாறி மீண்டும் உணவுப் பொருளாக பயன்படுகிறது. பனை மரத்தின் பாளை, பதநீர் பெறுவதற்கு பயன்படுகிறது. பனையின் நடுப்பகுதி வீட்டில், உத்திரம் அமைப்பதற்கு பயன்படுகிறது. மிக நீளமான உறுதியான சல்லி வேர் தொகுப்பை இது பெற்றிருப்பதால் பனையின் வேர் மழைக் காலங்களில் நடைபெறும் மண்ணரிப்பைத் தடுக்கிறது. பனை ஓலை எழுதவும் பயன்படும். 




மிதவெப்ப மண்டல பகுதிகளில் வளரும் தன்மையுள்ள பனை, குறைந்தது 60 வருடங்களுக்கு மேல் வாழும். 60 ஆண்டுகளும் மனிதகுலத்துக்கு பயன்படும். இப்படி பயன் மட்டுமே தரும் பனை நிச்சயமாக கற்பகத்தரு தானே. 


மனிதர்களுக்கு மட்டுமல்ல, பல உயிரினங்களுக்கும் பனை மரம் பாதுகாப்பு அரண் தான், பறவைகள் கூடு கட்டவும், பல்லி, பூச்சிகள், ஓனான்கள் வாழ்விடமாக உள்ளது. பனை ஓலைகளிலும் பல வகையான வெளவால்களும் சிறு குருவிகளும் வாழ்கின்றன. பனையின் தலைப்பகுதியில் அணில்களும் எலிகளும் கூடு அமைத்து வாழ்கின்றன. பருந்துகளுக்கும் வானம்பாடி பறவைகளுக்கும் இருப்பிடமாக பனை விளங்குகிறது. தூக்கனாங் குருவிக் கூட்டை கான வேண்டுமென்றால் பனங்காட்டுக்குத் தான் செல்ல வேண்டும்.


ஆனால், இந்த பனைக்கு ஆபத்து ஏற்பட்டது. பனைமரங்களை செங்கல் சூளைக்காக வெட்டி அழிக்கப்படுவது அதிகரித்தது. செங்கல் தரமாக உருவாக, அதற்கு மிதமான வெப்பம் தேவைப்படுகிறது. அந்த வெப்பத்தை நீண்ட நேரம் தரக்கூடியது பனைமரம் எனக் கூறப்படுகிறது. இதனால், செங்கல் சூளைகளுக்குத் தேவைப்படும் பனைமரம் அதிகமாக வெட்டப்படுகிறது. இதனை விற்பனை செய்ய தரகர் கூட்டம் இருக்கிறது. 
பொதுவாக கிராமப்புறங்களில் பனை அதிகமாக இருப்பதால். ஒவ்வொரு கிராமமாகச் சென்று, பனைமரம் இருக்கும் இடங்களை தெரிந்து கொள்கின்றனர். அப்புறம் என்ன கிராமத்தின் முக்கிய புள்ளிகளை கைக்குள் போட்டுக்கொண்டு பனை மரத்தைக் கடத்திவிடுகின்றனர்.


பனை மரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது பனை விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையாக இருந்தது. பனை மரம் வெட்டிச் சாய்க்கப்படுவதால் அது சார்ந்திருக்கும் பல்வேறு தொழில்களும் முடங்கிவிடுவதாக அவர்கள் கூறிவந்தனர்.
இந்நிலையில், தமிழக வரலாற்றில் முதல் முறையாக விவசாயத்துக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில், பனைமரங்களை போற்றிப் பாதுகாக்கும் பணியை அரசு கவனமாக மேற்கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
மேலும், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கிள்ளிகுளம் வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் பனைமரம் தொடர்பான ஆராய்ச்சிகளுக்கு, முக்கியத்துவம் கொடுக்கப்படும்.




நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தரமான பனை வெல்லம் தயாரிப்பு குறித்து விவசாயிகளுக்கு உரிய பயிற்சியும் வழங்கப்படும். பனை கருப்புக் கட்டி தயாரிக்க நவீன இயந்திரங்களை கொள்முதல் செய்ய மானியம் வழங்கப்படும்.  பனை மரத்திலிருந்து எடுக்கப்படும் மதிப்புக் கூட்டுப்பொருளான பனை வெல்லத்தினைப் பனை வாரியம், வேளாண் கூட்டுறவு சங்கங்களுடன் ஒருங்கிணைந்து நியாய விலைக் கடைகள் மூலம் விநியோகம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.