தினம் ஏதேனும் ஒரு வலியால் அவதிப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. தலை வலி, கழுத்துவலி, முதுகு வலி, இடுப்பு வலி, தோள்பட்டை வலி, முழங்கால் வலி, குதிகால் வலி, இப்படி ஏதேனும் ஒரு வலி சிலருக்கு இருக்கும். ஆண்கள் பெண்கள் இருபாலருக்கும் எந்த வயது வித்தியாசமும் இன்றி இது போன்ற வலிகள் வருகின்றன.
இந்த வலிகள் வருவதற்கு நிறைய காரணிகள் இருந்தாலும், முக்கியமாக எலும்புகளுக்கு போதுமான ஊட்டச்சத்து இல்லாமத குறைபாட்டாலும், அளவுக்கு அதிகமாக ஒரு பகுதியை கடினமாக பயன்படுத்துவதாலும், வாழ்வியல் முறை காரணிகளாலும் இதுபோன்ற வலிகள் வருகின்றன. எந்த வலியாக இருந்தாலும், 12 வாரங்களுக்கு மேலாக தொடர்ந்தால், மருத்துவ ஆலோசனை அவசியம் தேவைப்படும்.
இது போன்ற வலிகளில் இருந்து மீண்டு வருவதற்கான சில ஆலோசனைகளைப் பார்க்கலாம்.
மருத்துவரை சந்தித்து அறிவுரை பெறுதல்: எந்த ஒரு வலியாக இருந்தாலும், லேசாக தொடங்கி நாளடைவில் வலியின் தீவிரம் அதிகமாகும். தொடர்ச்சியாக 12 வாரங்களுக்கு மேலாக வலிகள் தொடர்ந்து இருந்தாலோ, விட்டுவிட்டு வலிகள் வந்தாலோ உடனே மருத்துவரை அணுகி, என்ன காரணத்தினால் வலி வருகிறது என தெரிந்துகொண்டு, அதற்கு தகுந்தாற்போல், சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
வாழ்வியல் முறை மாற்றம்: நீண்டநேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வதாலும், இதுபோன்ற வலிகள் வரும். முடிந்தவரை மிகவும் வசதியான அமரும் நிலை, ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். மற்றும் நீண்டநேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்யாமல் ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை எழுந்து நடக்கவேண்டும். இது மிகவும் ரிலாக்ஸாகவும், வளைந்து கொடுத்தலாக உடலை வைக்க உதவும்.
உணவு முறை மாற்றம் : எலும்புகளை பலப்படுத்த கால்சியம் சத்து நிறைந்த பால், கேழ்வரகு, வெந்தயம், உலர் பழங்கள் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இது எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். எண்ணையில் பொறித்த உணவுகள், துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், சோடா ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். உணவில் மாற்றம் கொண்டு வருவதன் மூலம், உடல் ஆரோக்கியம் மிகப்பெரிய அளவில் மேம்படும்.
உடற்பயிற்சி - வலிகள் அதிகமாக, மிகவும் தீவிரமாக இருக்கும்போது உடற்பயிற்சி செய்வதை தவிர்க்கவேண்டும். முறையான சிகிச்சை எடுத்து வலிகளைக் குறைந்து பின் உடலை பலப்படுத்தவும், மீண்டும் வலிகள் வராமல் இருக்கவும் உடற்பயிற்சி செய்யலாம். இது உடலை வலுப்படுத்த உதவும். யோகா போன்ற பயிற்சிகள் செய்வது, உடலை வலுவாக வைப்பதுடன், மனதையும் ரிலாக்ஸாக வைக்கும். மன அழுத்தம் இல்லாமல் இருப்பது எந்த நோயையும் விரைவாக குணப்படுத்தும்.
வைட்டமின் D : தினம் ஒரு 20-30 நிமிடங்கள் மாலை வெயிலில் உடல்படுமாறு நிற்பது உடலுக்கு தேவையான வைட்டமின் டி சத்துகள் உறிஞ்ச வழிவகை செய்யும். எலும்புகள் ஆரோக்கியத்தில் வைட்டமின் டி மிக முக்கிய பங்கு வகிக்கிறது. நீண்டநேரம் ஏசி அறையில் அமர்ந்து வேலை செய்வதால், உடலில் வைட்டமின் D சத்துகள் குறையும். அதனால் தினம் சூரிய ஒளியில் நின்று போதுமான வைட்டமின் D சத்துக்களை எடுத்துக்கொள்ள வேண்டும்.