யோகாசனம்... அதன் நன்மைகள் இளைஞர் முதல் முதியவர் வரை எல்லோருக்கும் நன்மை பயக்கக்கூடியது. கடந்த இரண்டாண்டுகளாக கொரோனா தொற்றால் குழந்தைகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களுக்கு ஆசனங்களை அறிமுகப்படுத்துவது மிகவும் நல்லது. அது அவர்களின் உடலினை உறுதி செய்து உள்ளத்திற்கு புத்துணர்ச்சி தரும். 


தொற்றுநோய்கள் நமது உடல் ஆரோக்கியத்தில் கடினமான விளைவுகளை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், அவை நமது மன ஆரோக்கியத்திலும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இதன் விளைவாக, மனச்சோர்வு மற்றும் பதட்டம் போன்ற உடல்நலப் பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றன. எனவே, மனநலக் கவலைகளை நிவர்த்தி செய்ய வேண்டிய தேவை அதிகரித்துள்ளது, அத்தகைய சூழ்நிலையில் யோகாவைத் தழுவுவது அவசியமாகிவிட்டது.


ஆனால் யோகாசனம் என்பது ஒரு கடல் அதில் குழந்தைகளுக்கு எதைச் சொல்லித் தருவது என்ற சந்தேகம் எல்லோருக்கும் இருக்கும். அவர்களுக்கான வழிகாட்டுதல் இது.


1. பத்மாசனா:
பத்மாசனம் இது அனைவருக்கும் பரிச்சியமான ஒரு ஆசனம். இது முதுகு தண்டுவடத்தை பலப்படுத்தும். குழந்தைகள் நேராக உட்கார மாட்டார்கள். வளைந்து, நெளிந்து கொண்டும். ஏதாவது சாய்வாக சாய்ந்து கொண்டும். அவர்களின் சவுகரியத்தற்கு ஏற்ப அமர்ந்து கொள்வார்கள். ஆகையால், அவர்களை பத்மாசனம் செய்யவைப்பது மிகவும் சிறந்தது.


2. விருகாசனா:
வ்ரிகாசனா அல்லது விருகாசனா என்பது குழந்தைகள் தங்களின் சமநிலையைப் பேண உதவும். இது அவர்களின் மனநலனை பாதுகாக்கும். அவர்களின் சிந்தனையை, கவனத்தை மேம்படுத்தும். மேலும் அது நரம்பு மண்டலத்தை சீராக வைக்கும்.


3. தனுராசனா:
தனுர் என்றால் வில். தனுராசனா என்ற பெயரிலேயே அது உடலை வில் போன்று வளைக்கும் ஆசனம் எனத் தெரிந்து கொள்ளலாம். இது அஜீரணக் கோளாறை சரிசெய்யும்.


4. பிரம்மாரி பிராணயாமா
பிரம்மாரி பிராணயாமா என்பது மன அழுத்தத்தைப் போக்கக் கூடியது. இது உள்ளார்ந்த அமைதியை தருகிறது. சுயமாக மனக் காயங்களில் இருந்து மீளும் வலிமையைத் தருகிறது. இதை தூங்கும் முன் செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கின்றனர். இது தூக்கத்தை மேம்படுத்தும்.


5. கபாலபதி
கபாலபதி என்பது குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டிய மிக முக்கியமான யோகாசனம். இது குழந்தைகளின் ஒட்டுமொத்த உடல்நலனுக்கும் உகந்தது. கபாலபத்தி ஆசனம் கண்களைப் பேணுகிறது. ஜீரண மண்டலத்தை பாதுகாக்கிறது. நுரையீரலைப் பலப்படுத்துகிறது. நினைவாற்றலை மேம்படுத்துகிறது.


யோகா தினத்தில் மட்டும் தான் யோகா செய்ய வேண்டுமென்பதில்லை. யோகா என்பது ஒரு குறிப்பிட்ட உணவை உட்கொள்வது, ஒரு குறிப்பிட்ட உடல் தோரணையை வைத்திருப்பது, சுவாச நுட்பங்களைப் பயிற்சி செய்வது போன்ற உடற்பயிற்சியின் ஒரு வடிவமாகும். 


யோகாவின் முக்கியத்துவம் மற்றும் நன்மைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு, 8வது சர்வதேச யோகா தினம் அண்மையில் அனுசரிக்கப்பட்டது.