உடலுறவுக்குப் பின் ஏற்படும் தலைவலி உடலுறவின் மகிழ்வைக் கெடுக்க காரணமாக அமையும், தனியாக சுய இன்பம் மேற்கொள்ளும் போதோ, துணையுடன் உடலுறவு கொள்ளும் போதோ இந்தத் தலைவலி ஏற்படலாம்.


ஒற்றைத் தலைவலி பிரச்னை கொண்டிருப்பவர்களுக்கு அதிகளவில் உடலுறவு சார்ந்த தலைவலி ஏற்படலாம் எனவும், பெண்களை விட ஆண்களே இதில் அதிக பாதிப்புக்கு உள்ளாகின்றனர் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 


உடலுறவு சார்ந்த தலைவலி குறித்த விவரங்களை இங்கு பதிவு செய்துள்ளோம்... 



உடலுறவு சார்ந்த தலைவலி என்றால் என்ன?


உடலுறவு சார்ந்த தலைவலி அபூர்வமாக ஏற்படும் ஒன்று என்றாலும், பொதுவாக மக்கள் தொகையில் சுமார் 1 முதல் 6 சதவிகிதம் வரையிலான மக்களுக்கு ஏற்படுகிறது. உச்சநிலை ஏற்படுவதற்கு சில நொடிகளுக்கு முன்பு அல்லது உச்சநிலை அடைந்தவுடன் அல்லது உச்சநிலை அடைந்து சுமார் 1 முதல் 24 மணி நேரங்களுக்குள் இந்த தலைவலி ஏற்படுகிறது. இதன் தலைவலி மிதமானது முதல் தீவிரமானது வரையிலான வலி உணர்வை அளிக்கும் தன்மை கொண்டது. மேலும் இந்த தலைவலி, மூளையில் கட்டி, பக்கவாதம் முதலானவற்றில் பக்க விளைவாகவும் இருக்கலாம்; வெறும் தலைவலியாக மட்டும் இருக்கவும் அதிக வாய்ப்புகள் உண்டு. 


உடலுறவு சார்ந்த தலைவலியின் வகைகள்:


உச்சநிலை தலைவலி:


தலையில் மிதமான வலியாகத் தொடங்கும் இது, அடுத்தடுத்து கழுத்து, தாடை ஆகியவற்றில் ஏற்பட்டு, பாலியல் உணர்வு அதிகரிக்க அதிகரிக்க அதுவும் படிப்படியாக அதிகரித்து உச்சநிலை அடையும் போது தீவிர தலைவலியாக மாறும் தன்மை கொண்டது. 


தீங்கற்ற பாலியல் நேரத் தலைவலி:


உடலுறவு மேற்கொள்ளும் போது ரத்த அழுத்தம் அதிகரிப்பதற்குப் பதிலடியாக உருவாகும் தலைவலி இது. கண்ணைச் சுற்றியும், கண்ணுக்குப் பின்னுள்ள பகுதிகளிலும் தொடங்கும் இந்த தலைவலி சில நிமிடங்கள் முதல் பல மணி நேரங்கள் வரை தொடரும் தன்மை கொண்டது. நகரும் போது அதிகரிக்கும் இந்தத் தலைவலிக்கு ஒற்றை தலைவலி ஏற்படும் போது நிகழும் பக்க விளைவுகளைப் போல வெளிச்சத்தை எதிர்கொள்ளும் போது கண் கூசுதல், தலைசுற்றல் முதலானவை ஏற்படும். 



காரணங்கள்.. ஆபத்துகள்!


உச்சநிலை தலைவலி என்பது வேறு எந்த உடல் பிரச்னை காரணமாகவும் ஏற்படுவதில்லை என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். உடலுறவின் போது தலைவலி ஏற்படும் சில மக்களுக்கு மட்டுமே பக்கவாதம் முதலான பிரச்னைகளுக்கான அறிகுறியாக இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. மரபுவழிப் பிரச்னைகள் காரணமாக இந்தப் பிரச்னை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம். எனினும், இது போன்ற பிரச்னை ஏற்பட்டால் மருத்துவரை அணுகி பரிசோதனை மேற்கொள்வது அறிவுறுத்தத்தக்கது.


உடலுறவு சார்ந்த தலைவலி ஏற்பட்டால் விளக்குகளைக் குறைப்பது, குடிநீர் அருந்துவது, வலி நிவாரணிகளை உட்கொள்வது முதலானவை பயன் தரும்.