குளிர்காலத்தில் செரிமான மண்டலத்தின் திறன் குறைந்துவிடும். ஏனெனில், உடலுக்கு தேவையான வெப்பம் கிடைக்காது. இதனாலேயே குளிர்காலத்தில் அதிக காரம், மசாலா, எண்ணெயில் பொரித்த  உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். அப்படியிருந்தும் குளிர்காலத்தில் மட்டுமல்லாமல் சிலருக்கு எல்லா காலங்களிலும் செரிமான பிரச்னைகள் இருக்கும். இதற்கு ஆயுர்வேத முறையில் நல்ல தீர்வு கிடைக்கும் என்றும் நிபுணர்கள் சொல்கிறார்கள். 


செரிமான பிரச்னைகளுக்கு ஆயுர்வேத நிபுணர் சொல்லும் பரிந்துரைகள் சில.. 


திரிபலா


செரிமான மண்டலத்தை சீராக இயங்குவதற்கு திரிபலா நன்றாக உதவும். அதோடுமட்டுமல்லாமல் உணவுகள் உள்ள சத்துகளை உடல் உறிஞ்சிவதற்கு உறுதுணையாக இருக்கும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.


கடுக்காய் (Terminalia chebula),தான்றிக்காய் (Terminalia belerica), நெல்லிக்காய் (Emblica officinalis) ஆகிய மூன்றின் கலவையே திரிபலா. இது 1:2:3 என்ற விகிதத்தில் இருக்க வேண்டும். ஆயுர்வேத மருத்துவர்களால் பெரும்பாலான நோய்களுக்கு மருந்தாக பரிந்துரைக்கப்படுகிறது.


திரிபலா பொடி கடைகளில் கிடைக்கும். இதை இரவில் எடுத்துக்கொள்ள வேண்டும். 


உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை சீராக்கும். வயிற்றுப்புண் சரியாகும். அல்சரை கட்டுப்படுத்தும்.


உணவுப் பாதை நச்சுப்பொருட்களை நீக்கி குடல் இயக்கத்தை சீராக்கும். செரிமானக் கோளாறுகளைச் சரிசெய்யும்.


சைவன்பிராஷ் (Chywanprash)


நெல்லிக்காய், நெய்,தேன் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் சேர்த்து தயாரிக்கப்படுவது. இதை காலையில் உணவு சாப்பிடும் முன் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் செரிமான பிரச்னைகள் இருக்காது. 


கிராம்பு 


கிராம்பு வாயு, அஜீரணம், மலச்சிக்கல்  போன்ற பிரச்சனைகளுக்கு எதிராக நன்மைகளை வழங்குகிறது. கிராம்பு எண்ணெயை தண்ணீரில் சில துளிகள் சேர்த்து காலையில் உட்கொள்வது இந்த பிரச்சனைகளுக்கு எதிராக உதவுகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. அதோடு, உணவு சாப்பிட்டு முடித்ததும் ஒரு கிராம் சாப்பிடுவது நல்லது. இது செரிமான சக்தியை அதிகப்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.


கிராம்புகளில் புரதம், இரும்புச்சத்து, கார்போஹைட்ரேட், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம் மற்றும் ஹைட்ரோகுளோரிக் அமிலம் நிறைந்துள்ளது என்று ஆயுவேதம் சொல்கிறது. சளி, இருமல் உள்ளிட்டவைகளை சரிசெய்ய உதவுகிறது. 


சோம்பு


சோம்பு  இரும்பு சத்து நிறைந்திருப்பதால் உடலின் ரத்த ஓட்டம் சீராகிறது. உயிர் அணுக்கள் உற்பத்திக்கும், செரிமானத்திற்கும் இது அவசியம். இதை மசாலா பொருளாக பயன்படுத்துவதுண்டு. இதில் ஏராளமான சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.சோம்பு கொண்டு தயாரிக்கப்பட்ட எண்ணெய் கை, கால், மூட்டு வலியை போக்குவதுடன் மட்டுமல்லாமல் இருமலையும் போக்கவல்லது.உடல் எடையைக் குறைக்க அதிக கஷ்டப்படாமல், சோம்பு தண்ணீர் குடித்தே குறைத்துக் கொள்ளலாம். இதன் மூலம் பலன் தாமதமாக கிடைத்தாலும் நிரந்தரமானதாக இருக்கும். அளவுக்கு அதிகமாக பசி எடுப்பவர்களுக்கு சோம்பு தண்ணீரைக் குடித்து வந்தால்,  அது இயற்கையிலேயே பசியை அடக்கும். 


இப்படி ஆயுர்வேத மருத்துவ முறையோ எதுவாக இருந்தாலும் ஒவ்வோருவருக்கும் தனியே உடல் கண்டிசன் இருக்கும். அதற்கேற்றவாறு சாப்பிடுவது நல்லது. தேவையெனில் மருத்துவரை ஆலோசித்த பின் எந்த மருத்துவ முறைகளையும் பின்பற்றலாம்.


பொறுப்புத்துறப்பு : இந்த உள்ளடக்கம் பொதுவான தகவல்களை உள்ளடக்கியது. இது மருத்துவ ரீதியான அறிவுரையோ, கருத்தோ அல்ல. தனிப்பட்ட உடல்நலம் சார்ந்த தகவல்களுக்கு மருத்துவரை அணுகுவது மட்டுமே சரியான தீர்வாகும். ஏபிபி பொதுத் தகவல்களுக்கான பொறுப்பை ஏற்காது.