இன்றைய ஏழாம் நாள் நவராத்திரி வழிபாட்டில் சரஸ்வதி தேவி, சாம்பவி தேவி, காளராத்ரி, ஆகிய மூன்று தேவிகளும் போற்றி வழங்கப்படுகிறார்கள். சப்தமி என்பதாலும் ஏழாம் நாளில் துர்க்கையின் அம்சமாக காளராத்திரி தேவியையும் இந்த நாளில் வழிபடுவது சிறப்பு வாய்ந்தது.
நன்மைகள் அருளும் நவராத்திரியின் ஏழாம் நாள் கலைமகளுக்கு உரியதாகும். முதல் 3 நாள்கள் சக்தி தேவிக்கும், அடுத்த 3 நாள்கள் மகாலட்சுமி தாயாருக்கும், கடைசி 3 நாள்கள் சரஸ்வதிக்கும் உரிய நாட்களாக வணங்கப்படுகிறது .
வெள்ளைத் தாமரை மீது அமர்ந்து ஞானத்தை கல்வியை கலைகளை அள்ளி வழங்கும் கலைமகளை சாரதா தேவியாக ,சாம்பவி, கால ராத்திரி அன்னையாக, நினைத்து வழிபட உன்னதமான நாளாகும். இதில் சாம்பவி என்றால் அச்சம் தீர்ப்பவள் என்று அர்த்தம். சாம்பு என்ற திருநாமத்தால் ஈசன் வணங்கப்படுவதால் அன்னை சாம்பவி என அழைக்கப்படுகிறாள்.
நவராத்திரியின் ஏழாவது நாளில் சாம்பவி அன்னையை வழிபடுபவர்களுக்கு எதிரிகளின் தொல்லைகள் நீங்குவதோடு, துர்சக்திகளின் பாதிப்பு போன்ற துன்பங்கள் எல்லாம் விலகும் என்பது நம்பிக்கை.
ஏழாம் நாள் போரில் தான் அன்னை சாம்பவி சண்டமுண்டர்களை வதம் செய்து ஞான வடிவில் காட்சி அளித்து தேவர்களின் அச்சங்களை நீக்கியதாக கூறப்படுகிறது. ஆகவே நவராத்திரியின் ஏழாவது நாளான இன்று துர்க்கையின் ஏழாவது வடிவமான காளராத்திரி தேவியை வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
நவராத்திரி நாள் 7: அக்டோபர் 2, ஞாயிறுக்கிழமை
திதி: சப்தமி
அம்பாள்:
கலைமகள், சாம்பவி, காளராத்திரி தேவி
கன்னியா பூஜை:
8 வயது சிறுமிக்கு பிராக்மி மகா சரஸ்வதி என்ற திருநாமம் கொண்ட திருக்கோலம் அமைத்து பூஜிக்க வேண்டும்.
நைவேத்தியம்: எலுமிச்சம் பழ சாதம், பாயாசம், கற்கண்டு சாதம், பிட்டு, பழ வகைகள், வெண்பொங்கல், கொண்டக்கடலை சுண்டல்.
நிறம்: ஆரஞ்சு
புஷ்பங்கள்: தாழம்பு, தும்பை, மல்லிகை, முல்லை
கோலம்: திட்டாணிக் கோலம்.
தாம்பூலம்: வெற்றிலை பாக்கோடு மாதுளை பழம்.
இலை: விபூதி பச்சிலை, துளசி, வில்வம்.
பழங்கள்: பேரீச்சை, மாதுளை, கொய்யா, பப்பாளி, நெல்லிக்கனி
வஸ்திரம்: கருஞ்சிவப்பு, வெண்மை பட்டாடை
பாடலுக்கான ராகம்: பிலஹரி ராகம்.
ஆபரணம்: வெள்ளி, தங்கம் போன்றவைகளால் ஆன மாலைகள்.
மந்திரம்: சௌந்தரிய லஹரி,
சரஸ்வதி நாமாவளி, சரஸ்வதி தேவி பாடல்கள்,
ஏழாம் நாளுக்கான பலன்கள்: ஞானமும் கல்வியும் கலைகளில் தேர்ச்சியும் கிடைக்கும்.எதிரிகள் விலகிச் செல்வர்.
ஜகத்குரு ஆதிசங்கரர் இயற்றிய சௌந்தர்ய லஹரியில்,
அம்பிகையும் சரஸ்வதியும் வேறு வேறானவர்கள் இல்லை என்று பாடியுள்ளார்.
இந்த நாட்களில் அன்னையின் பாடல்களை வீடுகளிலும், கோவில்களிலும் பாடி அவளை ஆராதிப்பது சிறப்பும் மேன்மையையும் தரும். கடலை பருப்பு, கொண்டை கடலை, உள்ளிட்ட பல்வேறு தானிய வகைகளை விதவிதமான பிரசாதங்களாக செய்து, ஒவ்வொரு நாளும் படைத்து வழிபட வேண்டும்.
பிரதமை திதியில் தொடங்கும் நவராத்திரி, 9 நாட்கள் வரை நடைபெறுகிறது. நவராத்திரியின் 7ஆம் நாள், அக்டோபர் 2 ஆம் தேதியான ஞாயிற்றுக்கிழமை அன்று வழிபாடு செய்யப்படுகிறது. நவதுர்க்கையின் வடிவங்களில் ஒன்றான காளராத்திரி அம்மனை இந்த நாட்களில் வணங்கினால் மறைமுக தீய சக்திகள் விலகி, எதிரிகள் காணாமல் போவார்கள் என்பது நம்பிக்கை .
கொலுவுக்கு , முன்பு அமர்ந்து, தினசரி அந்தந்த தேவியருக்கான மந்திரத்தை கூறி வழிபாடு செய்யலாம் . இன்று சரஸ்வதி தேவிக்கான நாள் என்பதால்,பூஜை செய்யும் போது சௌந்தர்யா லஹரியை ஒலிக்கச் செய்வது சிறப்பு. கல்விக்கு அதிபதி சரஸ்வதி என்பதால், முடிந்த அளவு சிறுமிகளுக்கு படிப்பு சம்மந்தமான பொருட்களை வாங்கிக் கொடுக்கலாம்.
இறுதியாக பூக்களால் சங்கு வடிவத்தில் கோலம் இட்டு,தட்டில் வெற்றிலை பாக்கு பழம் வைத்து, விளக்கேற்றி ஆரத்தி எடுக்க வேண்டும். எதிரிகள் தொல்லை நீங்க, வீடும் குடும்பமும் சுபிட்சம் பெற, ஒரு சிறுமியை வீட்டுக்கு அழைத்து, அவரை அம்பாளாக வணங்கி, வெண்பட்டாடை வழங்கி வணங்கலாம் என கூறப்படுகிறது.
பூஜைக்கான நேரம்:
காலை 9 மணிக்குள்
மாலை 6 மணிக்கு மேல்
கொலு வைக்காதவர்கள், ஒன்பது நாட்களும் தொடர்ந்து அகண்ட தீபம் ஏற்றி தங்கள் பிரார்த்தனைகளை முன்வைக்கலாம்.