வீடுகளில் தோசை மாவு இல்லாத நேரத்தில் அரிசி மாவு, தக்காளி, சீரகம், கொத்தமல்லி போன்றவற்றைப்பயன்படுத்தி வெறும் 5 நிமிடத்தில் இன்ஸ்டன்ட் தோசை செய்யலாம்.


குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தோசையைப் பிடிக்காதவர்களே இருக்க முடியாது. அந்தளவிற்கு நம்முடைய சமையலில் முக்கிய பங்கு வகிக்கிறது தோசை. சில வீடுகளில் டிபன்களில் தினமும் தோசை இடம் பெற்றிருக்கும். ஆனால்  சில சமயங்களில் அரைத்து வைத்த மாவு தீர்ந்து போயிருக்கும் நேரத்தில்தான், உங்களது குழந்தைகள் தோசை தான் வேணும்னு அடம்பிடிப்பார்கள். இதனையடுத்து  கடையில் விற்கும் தோசை மாவுகளை வாங்குவோம். சிலருக்கு கடைகளில் வாங்கி செய்யும் தோசையோ, இட்லியோ பிடிக்காது. எனவே இதுபோன்ற சமயத்தில் சுவையான மற்றும் வித்தியாசமான தோசையை நீங்கள் செய்ய விரும்பினால் கீழ்வரும் இந்த முறைப்படி  கொஞ்சம் செஞ்சு பாருங்கள்.



இன்ஸ்டன்ட் தோசை செய்ய தேவையான பொருட்கள்:


அரிசி மாவு – 1/2 கப்
தக்காளி – 4
சீரகம் – 1/2 ஸ்பூன்
தனி மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
கறிவேப்பிலை – 1 கொத்து
கொத்தமல்லி இலை– 1 கொத்து
உப்பு – 1 1/2 ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு 


ரவை – 1/2 கப்
கோதுமை மாவு – தேவையான அளவு


இன்ஸ்டன்ட் தோசை செய்முறை:


முதலில் இன்ஸ்டன்ட் தோசை செய்வதற்கு முதலில், சீரகம், மிளகாய் தூள், உப்பு , கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை,தக்காளி போன்றவற்றை சேர்த்து நன்றாக மிக்சியில் அரைத்துக்கொள்ள வேண்டும்.


இதனை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொண்டு அவற்றுடன் அரிசி மாவு, ரவை மற்றும் கோதுமை மாவு சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்துகொள்ள வேண்டும்.


பின்னர் நமக்கு ஏற்றவாறு தோசை மாவில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக்கொள்ள வேண்டும். இதனை சுமார் 10 நிமிடங்களுக்கு நன்கு ஊற வைத்துக்கொள்ள வேண்டும்.


இப்போது இன்ஸ்டன்ட் தோசை மாவு ரெடியாகிவிட்டது. தற்போது இந்த மாவைக்கொண்டு எப்போதும் போல் கல்லில் மாவை ஊற்றி தோசை சுட ஆரம்பிக்கலாம். 



இப்போது உங்களுக்கான இன்ஸ்டன்ட் தோசை வெறும் 5 நிமிடத்தில் ரெடியாகிவிட்டது.


இதற்கு உங்களுக்கு பிடித்தமான தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னி, கார சட்னி போன்றவற்றை தயார் செய்து சாப்பிடலாம். இது நிச்சயம் வழக்கமான தோசை மாவை விட கூடுதல் சுவையை உங்களுக்குத் தரும் என்பதில் எவ்வித மாற்றமில்லை.  எனவே இனி நீங்களும் உங்களது வீடுகளில் தோசை மாவு இல்லாத நேரத்தில் மேற்கண்ட முறைகளைப் பின்பற்றி சுலபமாக இன்ஸ்டன்ட் தோசை மாவு தயார் செய்ய மறந்திடாதீங்க.