காதல் இருக்கும் இடத்தில் உரிமை இருக்கும். உரிமையாக இருக்கும் இடத்தில் கோபம் இருக்கும். கோபம் வந்தால் பிரிவு இருக்கும். சில மணிநேர பிரிவானாலும், திரும்ப சேர முடியாத பிரிவானாலும் அந்த வலி மிகுந்த காலகட்டத்தில் நினைவுகள் நம்மை புரட்டிப்போடும்.
எண்ணற்ற காதல் நினைவுகளில் இசை நினைவுகளால் மீண்டும் சேர்ந்த காதலர்களை பார்த்திருக்கிறீர்களா? பிரிந்த காதலர்களை சேர்த்து வைத்த இசையை கேட்டிருக்கிறீர்களா? அப்படி, காதல் பாடல்களுக்கு இணையான காதல் சோகப் பாடல்களை நிறைய ஸ்டாக் வைத்திருக்கிறார் யுவன் சங்கர் ராஜா.
மகிழ்ந்திருந்த காலங்களில், இருவரின் காதல் வைப்ரேஷன்கள் ஒன்றிணைய இசையும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். பிடித்த பாடல்களை, பிடித்த வரிகளை ‘இது நமக்கான பாடல், நம்மை போன்றதொரு காதல்’ என ஸ்லாகித்து காதலிக்காத காதலர்களே இருக்க முடியாது. இந்த பாடல்களெல்லாம், பிரிவின்போது எவ்வளவு வலியைத் தரும்!
ஆனால், யுவனின் காதல் சோகப் பாடல்கள் தனித்துவமாக இருக்கும். யுவனின் மெட்டுக்கள் ‘துன்பத்திலும் இன்பம் ஃபீல்’ தருவதாக இருக்கும். யுவன் இசையமைத்திருக்கும் காதல் சோகப் பாடல்களால் கண்ணீர் கரைபுரண்டு ஓடும். ஆனால், அதே பாடல்கள்தான் மீண்டும் காதலிக்கவும் தூண்டும்!
’உந்தன் மெளனம் மட்டும் ஏனோ செய்யுதடி’ என ஏங்கும் குரலை ’உன் தோளில் சாய வந்தேன், சொல்லாத காதலை சொல்லிட', என ஆசுவாசப்படுத்தி பிரிவை உடைக்க வைக்கும்! இப்படி யுவனின் கரியர் ஆரம்பத்தில் இசைக்கப்பட்ட பாடலில் இருந்து சமீபத்தில் இசையமைத்த ஆல்பங்கள் வரை யுவனின் பிரேக்-அப் பாடல்களுக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு!
’உனக்கேனவே காத்திருந்தாலே காலடியில் வேர்கள் முளைக்கும் காதலில் வலியும் இன்பம் தானே...’ என்பதில் எவ்வளவு உண்மை. ’இந்த காதல் நினைவுகள் தாங்காதே அது தூங்கும் போதிலும் தூங்காதே..’ - இப்படி காதல் பிரிவுக்காக எழுதப்பட்ட வலி நிறைந்த வரிகளுக்கு மயிலிறகால் இசை மருந்திட்ட யுவனின் இசைக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உண்டு.
இன்று பிப்ரவரி 28! யுவன் கோலிவுட்டில் அறிமுகாகி 25 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார். 1997 முதல் 2022 வரை இசையமைத்த காலகட்டத்தில் யுவனின் கோல்டன் எரா என்றால் அது 2000-களின் முதல் பத்து ஆண்டுகள்தான். 2010-க்கு பிறகு யுவன் இசையமைத்த ஆல்பங்களில் ‘பழைய யுவனை’ தேடியதுண்டு. நிறைய முறை, அந்த பழைய பாடல்களையே திரும்ப திரும்ப கேட்டு யுவனை கொண்டாடியதுண்டு. ரசனைகள் மாற மாற, காலம் மாற மாற எப்போதும் அனைவருக்கும் பிடித்த மாதிரியான பாடல்களை, ஹிட் பாடல்களை தந்து கொண்டே இருப்பது 100% நிறைவாக இருக்குபடி அமையாது!
அடுத்த ஜெனரேஷன் மக்களுக்கு பிடித்த இசையை, காதலை, காதல் பிரேக்-அப் இசையை யுவன் தேட ஆரம்பித்துவிட்டார். அவர் அப்டேட்டாகி கொண்டுதான் இருக்கிறார். அனைவரின் ரசனையும் மாறிக் கொண்டே இருக்கிறது, உணர்வுகள் மாறிக் கொண்டே இருக்கிறது. இருந்தாலும், இந்த 25 ஆண்டுகளை தாண்டி என்றென்றைக்குமான இசையை எப்போதோ தந்துவிட்ட யுவனுக்கு அன்பும், வாழ்த்துகளும்!