ஒரு ஆண் தொடர்ந்து ஒரு பெண்ணை 14 விநாடிகளுக்கு மேல் வெறித்துப் பார்த்தால் அவர் மீது வழக்கு தொடர சட்டத்தில் இடமுள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? தெரியாதென்றால் அந்த வாய்ப்பு இருக்கிறது என்பதை மனதில் கவனமாக நிறுத்திக் கொள்ளுங்கள்.


ஆஸ்திரேலியாவில் இதுமாதிரி பெண்களை வெறித்துப் பார்ப்பது. அதுதாங்க சைட் அடிப்பது குறித்து ஒரு ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.  டாக்டர் ராஸ் ஹோலெட் தலைமையில் இந்த ஆராய்ச்சி நடந்துள்ளது. இந்த ஆராய்ச்சிகள் ஆண்களோ, பெண்களோ தங்களின் எதிர்பாலினத்தவரை எந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கின்றனர் என்பது பற்றி ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் முடிவு ஆர்க்கைவ்ஸ் ஆஃப் செக்ஸுவல் பிஹேவியர் என்ற மருத்துவ இதழில் பிரசுரமாகியுள்ளது.


அதன்படி, அதிகப்படியாக சைட் அடிப்பது என்பது பெண்கள் பாலியல் சீண்டலை பொறுத்துக் கொள்கிறார்கள் அல்லது வரவேற்கிறார்கள் என்ற தவறான எண்ணத்தை ஆணுக்கு தூண்டும் எனக் கூறப்படுகிறது.
டாக்டர் ஹாலட் கூறுகையில், "ஒருநபரின் முகத்தைப் பார்க்காமல் அவரின் அங்கங்களில் கண்களை மேயவிட்டுப் பார்ப்பது என்பது அந்த நபரை ஒரு போகப் பொருளாக பார்ப்பதற்கு சமம். இவ்வாறாக ஒரு ஆண் பெண்ணையோ அல்லது ஒரு பெண் ஆணையோ போகப் பொருளாகப் பார்க்கும்போது அவர்களின் மனம் குரூர சிந்தனைகளை உருவாக்கிக் கொள்கிறது" என்றார்.


இதற்காக ஆண், பெண் உள்பட 167 பேரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. மேலும் ரேண்டமாக 1000க்கும் மேற்பட்ட ஆண், பெண்ணிடம் தங்களின் சைட் அடிக்கும் பழக்கம் பற்றியும் கேள்வி கேட்டுள்ளனர். இதற்கு பெரும்பாலான ஆண்கள் ஆம் என்று சொன்னதோடு மிகக் குறைவான பெண்களே ஒப்புக்கொண்டுள்ளனர். சில ஆண்கள், நான் அழகான பெண்களைப் பார்க்கும் போது எந்த இடத்தில், சூழலில் இருக்கிறேன் என்பதையெல்லாம் மறந்துவிட்டு அவர்களைக் கவனிக்க ஆரம்பித்துவிடுகிறேன். அதை என்னால் தவிர்க்க முடியவில்லை என்று கூறியுள்ளார்.


ஆண்களின் சைட் அடிக்கும் பண்பை அறிய இந்த ஆய்வை மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்கள் ஐ ட்ராக்கிங் முறையைப் பயன்படுத்தினர். அதாவது, ஒரு ஆண் ஒரு பெண்ணை பார்க்கும்போது அவளுடைய அங்கங்களை எப்படி நோட்டம் விடுகிறான் என்பதை அவனது கண் போகும் போக்கைக் கொண்டு அறிதல். இதன்படி பார்க்கையில் பெரும்பாலான ஆண்கள் பெண்களின் அங்கங்களை நோட்டம்விடுவதில் ஆசை கொண்டவர்களாகவே இருந்துள்ளனர்.


ஆனால் பெண்களைப் பொருத்தவரையில் இது சற்று குறைவாக இருந்துள்ளது. நன்றாக உடுத்திய ஆண்களின் முக அழகை தான் பெண்கள் பெரும்பாலும் வெறித்துப் பார்க்கின்றனரே தவிர ஆணின் அங்கங்களுக்கு கண்களை அலையவிடுவதில்லை என்று அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.


பெண்களை அதிகமாக வெறித்து வெறித்து பார்க்கும் ஆண்கள், அதை அவர்கள் ரசிக்கிறார்கள் என தவறுதலாகப் புரிந்து கொள்கின்றனர். அதனாலேயே சில ஆண்கள் ஒவ்வொரு பெண்ணுக்கும் தான் ரேப் செய்யப்பட வேண்டும் என்று உள்ளூற ஆசை இருக்கும் என்று நம்புகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் ஆணுக்கும், பெண்ணுக்கும் தங்களுக்குள் இருக்கும் சைட் அடிக்கும் மனப்பாண்மை பற்றி தெரிந்தே இருக்கிறது. பெரும்பாலும் அவர்கள் அதனை எதிர்பாலின ஈர்ப்புக்காகவே பயன்படுத்துகின்றனர். சிலர் எல்லை மீறி சைட் அடித்து பெர்வர்ட் என்ற நிலைக்கு ஆளாகி பாலியல் குற்றங்களை நிகழ்த்துபவர்களாக ஆகிவிடுகின்றனர் என்று அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.