வேலை, வேலை என ஓடிக்கொண்டு இருக்கும் நபரா நீங்கள்? உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை என எச்சரிக்கை மணி அடித்துள்ளது உலக சுகாதார மையம். வேலைப்பளு நம் உடலை பலவீனப்படுத்தும் என்று அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் என்றாலும், தற்போது WHO தெரிவித்துள்ள புள்ளிவிவரங்கள் நம்மை திடுக்கிட வைக்கத்தான் செய்கின்றன. 



சமீபத்திய புள்ளிவிவரத்தின்படி, அதிக வேலைப்பளு காரணமாக ஏற்பட்ட பக்கவாதம் மற்றும் மாரடைப்பு காரணமாக 2016ம் ஆண்டு மட்டும் 745,000 பேர் உலகளவில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆசியா மற்றும் மேற்கு பசிபிக் பிராந்தியத்தில் வாழும் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் புள்ளி விவரம் குறிப்பிடுகிறது. இதில் கவனிக்கத்தக்கது என்னவென்றால், இந்த கொரோனா தொற்று காலத்தில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்ககூடும் என மேலும் ஒரு அதிர்ச்சியை பதிவு செய்துள்ளது WHO.


உலக சுகாதார மையத்தின் தகவல்படி ஒரு வாரத்திற்கு 35 முதல் 40 மணி நேரம் வேலை செய்ய வேண்டும். வாரத்திற்கு 55 அல்லது அதற்கு அதிகமான மணி நேரங்கள் வேலை செய்வது உடல் நலத்தை பெருமளவில் பாதிக்கும். இந்த நீண்ட பணியானது மாரடைப்பு வர 35% வழிவகுக்கும், இதய நோயால் உயிரிழக்க 17% வழிவகுக்கும் என குறிப்பிட்டுள்ளது




சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ஐ.எல்.ஓ) உடன் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் நடுத்தர வயது மற்றும் வயதான ஆண்கள். வேலைப்பளுவால் உயிரிழப்பு என்பது உடனடியாக நிகழாவிட்டாலும், அதன் தாக்கமே எதிர்காலத்தில் நோய்வாய்ப்பட காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதேவேளையில் கொரோனா கால ஊரடங்கு, வீட்டில் இருந்து வேலைபார்க்கும் முறை இவையெல்லாம் ஊழியர்களை அதிக நேரம் வேலைபார்க்கவே நிர்பந்திக்கின்றன என்ற தகவலையும் உலக சுகாதார மையம் குறிப்பிடுகிறது. ஊழியர்கள் 10% வரை அதிக நேரம் வேலை செய்வதாக தெரிவித்துள்ளது.இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு நிறுவனம் புள்ளி விவரம் சொல்வது என்னவென்றால், வொர்க் ஃப்ரம் ஹோம் முறையால் வாரத்திற்கு குறைந்தது 6 மணி நேரம் ஊழியர்கள் அதிகமாக வேலை செய்வதாக குறிப்பிட்டுள்ளது.




கொரோனா காலத்தில் இணையவழியில் வேலை செய்ய ஏதுவான ஊழியர்கள் பலர் வீட்டில் இருந்தே வேலை பார்த்து வருகின்றனர். கடந்த வருடம் தொடங்கிய வொர்க் ஃப்ரம் ஹோம் பலருக்கு இன்றும் நீடித்து வருகிறது. வழக்கமாக அலுவலகம் சென்று வேலை பார்ப்பதற்கும், வீட்டில் இருந்த படியே அலுவலக வேலை பார்ப்பதற்கும் பல வித்தியாசங்கள் உண்டு. குறிப்பாக வீட்டில் இருந்து வேலை பார்க்கும் போது நாம் ஆரோக்கியம் தொடர்பான பல விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்




> > ஆரோக்கியத்தில் கவனம்.. வொர்க் ஃப்ரம் ஹோம் ஊழியர்கள் கவனிக்க வேண்டியது என்ன?