முந்தைய பகுதியைப் படிக்க:
பகுதி 1- ‘ப்ரா’ என உச்சரிக்கத் தயங்குபவரா நீங்கள்? : இது ப்ராக்களின் கதை! (பகுதி-1)



பெண்ணின் உடலைப் பாடாய் படுத்தியிருக்கிறது இந்த மனிதச் சமூகம். தற்காலப் பெண்கள் அணியத் தொடங்கிய ப்ரா 19-ஆம் நூற்றாண்டுகளில்தான் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அதற்கு முந்தைய மூன்று நூற்றாண்டுகளில் பெண்கள் அனுபவித்ததெல்லாம் அடக்கம் என்னும் பெயரிலான சித்ரவதை. இதற்கான ஆதி கார்செட்களை(corsets) அணிவதிலிருந்து தொடங்குகிறது. 6 நூற்றாண்டுகள் கடந்து இன்றும் அமேசான் போன்ற  மின் வணிகத்தளங்களில் இந்த கார்செட்கள் விற்பனை செய்யப்படுவதை பார்க்கலாம். பெண்களின் உடல் பருத்திருந்தால், சதை பிடித்திருந்தால் அவர்கள் ஒழுக்கமற்றவர்களாக 16-ஆம் நூற்றாண்டுகளில் கருதப்பட்டார்கள். கிழக்கிந்தியக் கம்பெனி வணிக நோக்கத்தில் இந்தியாவில் காலடி எடுத்துவைத்ததும் அதே காலகட்டத்தில்தான்.




ஒழுக்கத்தைக் கட்டிக்காப்பாற்ற மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இடுப்பைச் சுற்றி பெண்களுக்குக் கயிறு கட்டப்பட்டது. தொடர்ந்து கயிறுகட்டுவதால் இடுப்பு மெலியும் என்கிற நம்பிக்கை பெண்களிடம் இருந்தது. அதற்கு ’இடுப்புக்கான பயிற்சி (Waist Training)’ என்கிற பெயரும் இருந்தது. அந்தக் கயிறின் நீட்சிதான் 16-ஆம் நூற்றாண்டின் கார்செட். 


மார்பகம், இடுப்பு, புட்டம் மூன்றையும் தடிமனான துணியால் கட்டிச்சேர்த்து கிட்டத்தட்ட 50 கயிறுகள் கொண்டு இறுகக் கட்டப்படுவதுதான் கார்செட். கேட்கும்போதே மூச்சு முட்டுகிறதா? இதில் இன்னும் பல தகவல்களும் இருக்கின்றன. ஒவ்வொரு முறையும் ஐம்பதுக்கும் மேற்பட்ட கயிறுகளைக் கட்டுவது அயர்ச்சியாக இருக்கிறது என்பதால் அதன் 2.0 வெர்ஷனாக கார்செட்டிலேயே கயிறு வைத்துத் தைக்கப்பட்டது. முதல் கார்செட் வெறும் இடுப்புக்கும் புட்டத்துக்கும் மட்டுமானதாக இருந்தது. பெண்கள் தங்கள் மார்பகங்களுக்கும் சேர்த்து கார்செட் அணியவில்லை. 




ஆனால் உண்மையில் இந்த கார்செட்களால் இடுப்பினை மெலிய வைக்க முடியுமா? மெலிய வைக்காது மாறாக இடுப்பின் கொழுப்புப் பகுதிகளை உடலின் கீழ் பகுதிகளுக்கு அவை இறக்கிவிடும் என்கிறார்கள் மருத்துவர்கள். 1890-களில் இரும்பு எலும்புகள் வகை கார்செட்களை(steel bone corsets) கார்செட்கள் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டன. உடலை வாத்துபோல வளைத்து இறுகக் கட்டிய இந்த வகை கார்செட்கள் அரச குடும்பத்துப் பெண்களால் மிகவும் விரும்பப்பட்டன. கார்செட் அணிந்து மூச்சுவிடமுடியாமல் நிற்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க விக்டோரியா மகாராணி புகைப்படம் அதற்கு உதாரணம்.




20-ஆம் நூற்றாண்டில் பிரிட்டனைச் சேர்ந்த எதெல் கிரேங்கர் என்னும் பெண் கார்செட் அணிந்தே தனது இடுப்பு அளவை 13 செ.மீ. ஆகக் குறைத்திருக்கிறார். உலகின் மிகச் சிறிய இடை கொண்ட பெண் இவர்தான்.




கார்செட்களின் பெயரால் உடலுக்குக் கொடுக்கும் துன்பத்தை எதிர்த்து 19-ஆம் நூற்றாண்டில் இறுதிக்காலங்களில் மருத்துவர் லுஷியன் வார்னர் கார்செட்களுக்கு எதிரான போராட்டத்தில் இறங்கினார். பெண்களுக்காக புதிய கார்செட் ஒன்றை வடிவமைத்தார். இந்த கார்செட்கள் பெண்கள் விரும்பும் உடல் அமைப்பையும் கொடுத்து அவர்களது உடல்பாகங்களைத் துன்புறுத்தாமல் பார்த்துக்கொள்ளும்  இந்த வகை கார்செட்கள் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றாலும் 1930-களில் ஏற்பட்ட  ஜவுளிகள் விற்பனை மீதான சரிவு மொத்தமாக கார்செட் கலாசாரத்தையே ஒழித்தது.


இதற்குப் பிறகுதான் 1930-களின் மத்தியில் ப்ரா சந்தைக்கு அறிமுகத்துக்கு வந்தது. கார்செட்கள், கயிறுகள் எனத் கண்ணில் தென்பட்டவற்றையெல்லாம் எடுத்துப் பெண்ணின் உடலில் இறுகக் கட்டினார்கள். இந்த இறுக்கங்களை உடைத்துப் பெண் தனக்காகத் தேர்வு செய்த முதல் உடையாக ப்ராவைச் சொல்லலாம். ஆனால் பிராவை முதன்முதலில் வடிவமைத்த பெண் எந்த காரணத்துக்காக வடிவமைத்தார் தெரியுமா? 


அடுத்த பகுதியில் பேசலாம்..