மறுமணம் குறித்து ஊடகவியலாளர் பொன் விமலா தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை எழுதியுள்ளார். இதோ அந்த பதிவு.... 


உறவில் பெண் பார்க்கும் நிகழ்வு நடந்தால் 5 பேர் அல்லது 7 பேர் என்று கணக்கு வைத்துக் கொண்டு போவார்கள். நிச்சயதார்த்தம், திருமணம், காதணி உள்ளிட்ட நிகழ்வுகளுக்குக் கூட போனால் போகட்டும் என்று அவர்களாக வந்து என்னை அழைப்பது வழக்கம். ஆனால் இந்த பெண் பார்க்கும் படலம், மஞ்சள் நீராட்டு விழா இதற்கெல்லாம் என்னிடம் சொல்வதைக் கூட அபசகுணம் என்று நினைத்துவிடுவார்கள்.
ஏனிந்த வம்பென்று நானாகவே மூக்கை நுழைக்காமல் தவிர்த்துவிடுவேன். ஒருமுறை சொந்தத் தம்பிக்கு பெண் பார்க்கும் படலம் என்பதால் 5 ஆம் நபராய் சாங்கியச் சம்பிரதாயங்களுக்கு இடம் கொடுக்காமல் முன்னால் போய் நின்றேன். போன இடத்தில் நான் திருமணமான பெண் என்றும் எனக்கொரு மகள் இருப்பதாகவும் யாரும் நம்பாமல் போனதால் அடுத்த முறை வரும்போது கொஞ்சம் முதிர்ந்த தோற்றத்தில் வருமாறு அறிவுறுத்தினார்கள். 'இனி இந்த இளமையைக் கழட்டிக் கொடியில்  காயப்போடணும் போல' என்று நினைத்துக் கொண்டேன்.


எட்டு வருடங்கள் கழித்து இப்போதுதான் வீட்டில் உள்ளவர்களுக்கு மூக்கு வியர்த்திருக்கிறது போல. இத்தனை வருடங்களாக இப்படி ஒரு கேள்வியை எதிர்கொண்டதே இல்லை. முதன்முறையாக இப்போதாவது கேட்க வேண்டுமென தோன்றியதே என்று கொஞ்சமாக சந்தோஷப்பட்டுக் கொண்டேன். என்ன திடீர்னு இப்ப இந்த கேள்வி என்றேன். 




இல்ல ... பாக்க இன்னும் கூட சின்ன பொண்ணு மாதிரி தான் இருக்காங்க. ஏன் இன்னொரு கல்யாணம் பண்ணி வச்சிருக்கலாமேன்னு ஆளாளுக்குக் கேட்கிறாங்களாம். இப்ப ஏன் இந்த ஞானோதயம் என்றேன். முன்பெல்லாம் ஊரில் இதெல்லாம் தப்பாக இருந்ததாம். இப்போது சிலர் இதையெல்லாம் உடைத்து மறுமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்கிறார்களாம். அதான் இப்ப சொல்லணும்னு தோணுச்சு என்றார்கள்.


சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. அடுத்தவர் சூடு போட்டுக் கொண்டால் தானும் சூடு போட்டுக் கொள்ளலாம் என்கிற மனநிலையால் தான் இந்த மாற்றமே தவிர ஊருக்காக, உறவுகளுக்காக பயந்த யாரும் என்னைப் பற்றியும் என் மகள் பற்றியும் இதுவரை நினைத்துப் பார்த்ததில்லை. குறைந்தது என்னிடம் மறுமணம் குறித்த பேச்சுக்குக் கூட அழைத்ததில்லை. 


உள்மனம் எப்போதும் நினைப்பது போல் மகள் இருக்கிறாள் போதுமென்று கடந்துவந்துவிட்டேன். ஒரு பெண் வாழ வேண்டிய வயதில் தன் இணையில்லாமல் தனித்து வாழ்கிற சூழல் நேர்ந்தால் அவளை அவள் முடிவில் விடுங்கள். அடுத்த வாழ்வு குறித்தோ அல்லது தனித்திருப்பது குறித்தோ அவளே முடிவு செய்யட்டும். இங்கு இவ்வளவு பேசுகிற நான் வீட்டில் அப்பா ,அம்மா குடும்பமென்று பெட்டிப்பாம்பாய் அடங்கிப் போகிற வகையறா தான். 


எனக்கு தெரிந்த பெண்ணொருத்தி திருமணமான ஒரே ஆண்டில் விபத்தொன்றில் தன் கணவனை இழந்தாள். 6 வருடங்களாய் தனித்திருக்கிறாள். மறுமணம் குறித்துப் பேசினால் காதல் திருமணம் மறக்க முடியவில்லை என்கிறாள். குழந்தை எதுவுமில்லை என்று மறுமணத்துக்குக் கட்டாயப் படுத்துவதாகச் சொன்னாள். பெண்ணுக்கு மறுமணம் என்பதே தவறென்ற சமூகநிலை மெதுமெதுவாக மாறிக் கொண்டிருப்பது ஒரளவுக்கு மகிழ்ச்சி தான். மாற்றம் என்பது நம் வீட்டிலிருந்து தொடங்கட்டும். சமூகம் ஒரு நாள் அதுவாகவே மாறும்.