அடுத்தடுத்து மூன்று பிறை போன்ற கடற்கரை கொண்ட சர்வதேச புகழ் பெற்ற இடம் தான் கோவளம். அது 1930கள் முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் விருப்பமான இடமாக இருந்து வருகிறது. கடற்கரையில் இருக்கும் ஒரு பெரிய பாறை குளிப்பதற்கு பொருத்தமான அமைதியான கடற்கரையாக திகழ உதவுகிறது. கேரளாவின் தலை நகரமான திருவனந்தபுரம் கோவளத்திலிருந்து 16 கி.மீ. தொலைவிலேயே உள்ளது. அங்கு செல்வதற்கு போக்குவரத்து உள்ளிட்ட எந்த பிரச்சனையும் கிடையாது.


விடுமுறை நாட்களில் அங்கு சென்றால் கோவளத்திலேயே தங்கி அந்த நகரைச் சுற்றிப் பார்த்து வருவதற்கு மிகவும் ஏற்ற இடம். கோவளம் என்னும் பெயரே தென்னை மரங்களை பற்றி கூறுவதாக கூறுகின்றார்கள். அங்கு சென்று பார்த்தாலே அதற்கான பெயர் காரணம் நமக்கு புரியும். அரபிக்கடலின் ஒரு தென்னை சூழ்ந்த அழகியல் மிகுந்த கடற்கரையாக சுற்றுலா பயணிகளை ஈர்த்துக்கொண்டுள்ளது கோவளம்.



கடற்கரை அனுபவம்:


கோவளத்தில் இருக்கும் போது, நீங்கள் பார்க்க வேண்டிய முதல் இடம் கோவளம் கடற்கரையாகும், இங்கு மூன்று கடற்கரைகள் நெருக்கமாக அமைந்துள்ளன. இந்த மூன்று கடற்கரைகளும் கோவளம் கடற்கரையை நகரத்தின் சிறந்த ஒன்றாக மாற்றுகிறது. கடற்கரைகள் பாறைகளால் பிரிக்கப்படுகின்றன. யாருக்கும் நுழைவுக்கட்டணம் ஏதும் இல்லை, உள்ளே சென்றால், வானமகள் நாணி வேறு உடை சூடும் ஒரு அமைதியான பொன்மாலைப் பொழுதை கடற்கரை மணலில் நடந்துகொண்டே கழிக்கலாம்.


இந்த கடற்கரையின் மற்றொரு பெரிய ஈர்ப்பு, விழிஞ்சம் கடலின் மீன்வளமாகும், இது கடல்வாழ் உயிரினங்களை விரும்பும் மக்களுக்கு ஒரு முழுமையான சொர்க்கமாகும். கண்களுக்கு விருந்தளிக்கும் ஏராளமான கடல் வளங்களை இது கொண்டுள்ளது. மீன், பவளப்பாறைகள் மற்றும் பல நீர்வாழ் விலங்குகள் என கண்கொள்ளா காட்சிகள் காத்திருக்கும். 


கடற்கரை தவிர வேறு என்னென்ன உள்ளன?


இங்கு கடற்கரை தவிர பல்வேறு வகையான பொழுதுபோக்கு  அம்சங்கள் கிடைக்கின்றன. சூரியகுளியல், நீச்சல், மூலிகை மருந்து மசாஜ், சிறப்பு கலாச்சார நிகழ்ச்சிகள், கட்டுமர பயணம் ஆகியவை இங்கு மிகவும் பிரபலம்.இந்த கடற்கரையில் படும் வெப்பமான சூரிய ஒளி, உடலில் பட்டு வெகு விரைவில் உடலின் தோல் வண்ணத்தை மாற்றும் தன்மைகொண்டதாக உள்ளது. இந்தக் கடற்கரை பிற்பகல் தொடங்கி இரவு வரை எப்போதும் ஆட்கள் மிகுந்து கலகலவென காணப்படும்.



எங்கு தங்கலாம்?


கடற்கரை வளாகத்தில் குறைந்தவிலை காட்டேஜ்கள், கான்ஃபெரன்ஸ் வசதிகள், பொருட்கள் வாங்கும் கடைத்தெருக்கள், நீச்சல் குளங்கள், யோகா மற்றும் ஆயுர்வேத மசாஜ் மையங்கள் என்று ஏராளமானவை இங்கு உள்ளன. கோவளத்தில் ஐந்து நட்சத்திர ஓட்டல்கள் முதல் பட்ஜெட் ஓட்டல்கள்ள் வரை தங்கும் வசதிகள் இருக்கின்றன மற்றும் கான்டினென்டல் வகைகள் முதல் தென்னிந்திய உணவு வகைகள் வரை உணவகங்கள் மற்றும் காஃபெடேரியாக்கள் நிறைந்து உள்ளன.


கோவளத்தில் லைட்ஹவுஸ் கடற்கரைக்கு அருகில் பல பட்ஜெட் ஹோட்டல்கள் உள்ளன. இந்த ஹோட்டல்கள் அனைத்தும் ஒவ்வொரு பயணியும் விரும்பும் அனைத்து நவீன வசதிகளுடனும் சிறந்த சேவைகளைக் கொண்டுள்ளன. இந்தியாவின் முதல் ஆயுர்வேத மருத்துவத்துடன் கூடிய தங்கும் விடுதிகள், கோவளத்தில் உள்ளன. மணல்தீரம் ஆயுர்வேத கடற்கரை கிராமம்(0471 226 6222, கட்டணம்- ரூ. 3500 தோராயமாக), ஹோட்டல் சீ வியூ பேலஸ் (081119 63233, கட்டணம்- ரூ. 900 தோராயமாக), ஹில் & சீ வியூ ஆயுர்வேத பீச் ரிசார்ட் - ரூ. 370, ரூ. 480 ஸ்வாகத் ஹாலிடே ரிசார்ட்ஸ் (098470 60880, கட்டணம் - ரூ. 2000) ஆகியவை நீங்கள் கருத்தில் கொள்ளக்கூடிய பல ஆயுர்வேத விடுதிகள்.



கூடவே பார்த்துவரவேண்டிய இடங்கள்:


கோவளம் செல்பவர்கள், அப்படியே அருகில் திருவனந்தபுரம் வந்தால், நேப்பியர் அருங்காட்சியகம், ஸ்ரீ சித்ரா கலைக்கூடம் மற்றும் பத்மநாபசுவாமி கோவில் போன்ற பார்ப்பதற்கு சுவாரசியமான பல இடங்களை இந்த நகரம் கொண்டுள்ளது. SMSM இன்ஸ்டிட்யூட், மாநில அரசுக்கு சொந்தமான கைவினை அருங்காட்சியகம், இனம் சார்ந்த அரிய பொருட்கள் மற்றும் பிறப் பொருட்களுக்கு ஏற்ற இடமாகும்.


சீசன் எப்போது?


செப்டம்பர் முதல் மார்ச் வரையில் இடையில் உள்ள எந்த மாதத்தில் சென்றாலும், கோவளம் அன்புடன் வரவேற்று ஆசுவாசப்படுத்தி மறக்கமுடியாத பல நினைவுகளுடன் திருப்பி அனுப்பும். அந்த மாதங்களில் இடம் தரும் இதமான காலநிலைக்கு மயங்கி அங்கேயே இருந்துவிடவும் தோன்றும்.