'வேட்டைத்துணைவன் -  13'


 


கன்னி / சிப்பிப்பாறை நாய்கள் – பகுதி 5


                                                                      இனவழி


எனது பதின்ம வயதில் ஓர் நாள் எனது நண்பனைக் கூட்டுச் சேர்த்துக்கொண்டு சுற்றில் உள்ள வேட்டை நாய்கள் (சிப்பிப்பாறை கன்னி நாய்களை ) அத்துணையும் பார்த்தே தீர வேண்டும் என்று கிளம்பி, பேய் அலைச்சல் அலைந்து வீடு திரும்பினேன். வேட்டை நாய் கிறுக்கு பிடிக்கும் பருவம் அது.  நாய் பார்க்க கிளம்புதல் போலக் கிளர்ச்சியான ஒன்று அப்போது எதுவுமே கிடையாது. இப்போதும் எப்போதும் அதே!


இன்றைக்கு நிலைமை எவ்வளவோ தேவலை என்று தான் தோன்றுகிறது. இணையம் அதை கொஞ்சம் சாத்திய மக்கி இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.. ஏகதேசம் யாரையாவது பிடித்து சிலரை நெருங்க முடியும். அவர் மூலம் நாய்களைப் பார்க்க / வாங்க முடியும். இன்றுமே கூட நாய்களைக் சிலர் போல சிலர் காட்டுவது கிடையாது. வீண் தொந்தரவு என்ற காரணம் தாண்டி.. தயக்கம்தான் பிரதான காரணம். ஒரு பார்வை போல ஒரு பார்வை கிடையாதே ! மாடு, கன்று ஆசையாக வளர்ப்பவர்களுக்குத் தெரியும் கண் திருஷ்டி படும் என்ற பயம்.. இங்கும் கூட அதுதான்.


நாய் பார்த்த ரெண்டு நாட்களுக்கு என்னை போன்றவர்களுக்கு சோறு தண்ணி இறங்காது. பார்த்து வந்த கை எல்லாம் பல நாள் தேடலில் சில நல்ல நாய்களை சேர்த்தவர்கள் என்ற உண்மை உரைத்தலும் உடனே அப்படி ஒன்றை வளர்க்க வேண்டும் என்ற ஆசை பிடித்து ஆட்டும். வழக்கமான ஒன்று தான். சகலமும் அதை சுற்றியே இயங்குவது போல ஒரு பிரம்மை எப்போதும் சூழ்ந்திருக்கும்.. அப்படியான ஒரு நாளில் தான் என் குருநாதரை சந்திக்கும் படி அமைந்தது. எனக்கு சித்தப்பாதான். பெயர் அண்ணாமலை. அதற்கு முன்பு அவர் நாய்களை பார்த்த நியாபகம் அரிதலாக இருந்ததே அன்றி தெளிவாக ஒன்றும் அடைபடவில்லை.  ஒடனே போனில் அழைத்து நான் கண்ட நாய்கள் பற்றி ஒரு மூச்சு அவரிடம் பேசித் தீர்த்தேன்.


“நாளைக்கும் நம்ம ஊருக்கு வா எல்லாத்தவும் தெளிய வச்சுருவோம்” என்பது மட்டும் சித்தப்பாவின் பதிலாக இருந்தது. மறுநாள் காலையில் பஸ் ஏறி இறங்கிய இடத்தை ஒட்டிய அவர் கடை வாசல்கள் ஒரு மேஜையைப் போட்டு அதன் காலில் கயறு கட்டி அதில் ரெண்டு சந்தன பிள்ளை நிற வேட்டை நாய்களை கட்டி இருந்தார்.  வருபவனை குறிவைத்தே கட்டி இருந்ததுதான்.



இன வழி நாயுடன் பாண்டி முனியசாமி


ஒரு சிகிரெட்டை இழுத்துக்கொண்டு, “என்னப்பா நீ பாத்துட்டு வந்த ஆண் நாய்க இந்த பொட்ட நாய் போல இருக்குமா”என்றார்.  ஒரு நொடி நிதானித்து இருக்கும் சித்தப்பா.. பெருசு தான் என்றேன். தலையாட்டிவிட்டு நல்ல நாயா என்றார். நானும் ஆமாம் என்றேன்.


“தம்பி, ஒண்ணு தெரிஞ்சுக்கோ நல்ல நாய்ன்னா அது நல்ல வழியான நாய்க.. நீ பாத்துட்டு வந்த நாய்க  எந்த வழில ஒட்டும்?”  என்ற அவர் கேள்விக்கு அப்போது என்னிடம் பதில் கிடையாது. ஆனால் அதற்கு பின்னான நாட்களில் தேடிப் பார்த்த  நாய்கள் எல்லாமே வழி வாசி பார்த்து அலைந்ததுதான்.


நீங்கள் வேட்டை நாய்களைப் பற்றி தெரியத் துவங்கிய சில நாள்களிளேயே இனவழி என்ற வார்த்தையை கட்டாயம் பார்த்திருப்பீர்கள். இன்னார் வழி – அன்னார் வழி என்ற அடை மொழியோடு நாய்களின்  புகைப்படங்கள் பதிவேற்றம் ஆவதை பார்த்திருப்பீர்கள் . எண்ணி 5, 6 இனவழி தாண்டி எது பற்றிப் பேசவும் ஆளு இல்லாத முகநூலில் கூட நீங்கள் வழி வாசி பற்றி அறிந்திருக்க வாய்ப்புகள் உண்டு. 


வழி என்றால் என்ன? அதற்கும் நாய்களுக்கும் – நல்ல நாய்களுக்கும் என்ன தொடர்பு? என்றால்,


முதல் தலைமுறையினர் என்று கடந்த கட்டுரைகளில் குறிப்பிட்ட நபர்கள் இருக்கிறார்கள் அல்லவா? அவர்கள் தான் இந்நாய்கள் பற்றிய முதல் சூத்திரத்தை அறிந்தவர்கள். நாயைப் பார்க்கவோ, வளர்க்கவோ, அறியவோ, தெரியவோ அவர்கள் மனசு வைக்காமல் கதையாது. எனவே அவர்கள் கைவசம் இருந்தது வித்தை! வித்தைக்கு விலை விசுவாசம். கண் மூடித்தனமாக விசுவாசம்.அப்படி கூடி கூடவே கிடந்தது தன் விசுவாசத்தைக் காட்டி அவர்களிடன் இருந்து ( பெரும்பாலும் அவர்கள் கழிந்த குட்டி தான் கிடைக்கும்)  நாய்களைப் பெற்றவர்கள் ரெண்டாவது தலைமுறையினர்.


அவர்கள் முன்னவர்களை எடுத்த எடுப்பில் குட்டி கிடைத்தது என்று உதறிச் செல்ல முடியாது.. ஏதோ ஒரு வகையில் பிடி மூத்தவர்களிடம் தான் இருக்கும்.குறைந்த பட்சம் ஆண் நாய்கள் இணை சேர்க்க வேண்டுமே ! வேறு சிலரிடமும் இருக்கும் தான் ஆனால் அவர்கள் எப்படித் தருவார்கள் என்ற கேள்வி இருக்கிறதல்லவா! ஆக. வராது வந்த மாமணி போலக் கிடைத்த அந்த நாய்களை, தக்க வைப்பதன் பொருட்டோ , விசுவாசம் பொருட்டோ, பிரியம் பொருட்டோ தன் குருநாதர் பெயரை சேர்த்து இது இன்னார் இனவழி நாய்கள் என்று அழைக்கத் துடங்கினர். அதில் ஒரு பெருமையும் இருந்தது. அவர்களிடம் இருந்து நாய்களைப் பெற்றவர்கள் ரெண்டாவது தலைமுறை ஆள்களை குருவாகக் கொண்டு இனவழியை அங்கு இருந்து தொடர்ந்தனர். எல்லாமும் 100 ஆண்டுக் கதை..


பின்னர் காலமாற்றம் ஆகக்  கடந்த 30 -40 ஆண்டுகளில் உருவெடுத்த வேட்டை நாய் பிரியர்கள் மூலம் அதிக நாய்கள் பிரிந்து பகிர்ந்து இனவழிகளும் பெருகின. சங்குப்பட்டி நாடார் வழி,  சண்முகளூர் சிங்க ரெட்டியார் வழி, எட்டைக்கா பட்டி சீனி நாயக்கர் வழி, அம்மையார்பட்டி ஒத்தக் கண் மாரிமுத்துத் தேவர் வழி, விஜய கரிசக்குளம் பாண்டி முனிசாமி வழி,  வானரமுட்டி சண்முகராஜன் வழி, தளவாய்புறம் அண்ணாமலை வழி, கீழப்புதூர் சிவகுமார் வழி , முகவூர் ஆசைத்தம்பி வழி  போன்றவை எல்லாம் குறிப்பிட தகுந்த 50 க்கும் மேற்பட்ட இனவழிகளில் சில உதாரணங்கள் தான்.



வானரமுட்டி சண்முகராஜன் இன வழி நாயுடன்..


ஒவ்வொரு வழியும் ஒரு ரசனை சார்ந்த – கட்டுப்பாடு சார்ந்த பள்ளிகள் தான் அங்கு பயில்பவர்கள் பொறுத்து அவர்களின் நாய் தேர்வு அமையும். இந்த வழி நாய்களின் ரெட்டை நிறம் வரும். இந்த வழி நாய்களின் இடுப்பு சவ்வு குறைவு என்பது போல..நிறையவே உண்டு. ஆள்களை தவிர்த்து  தனித்து பெயர் பெற்ற நாய்களின் பெயரில் இருந்து கூட இனவழிகள் இருந்தது. உதாரணமாக “சமத்தி வழி” சமத்தி என்பது நாய் தான். அது சங்குபட்டி நாடார் இனவழி நாய் தான் என்றாலுமே அந்த நாயினுடைய பிரபலம் காரணமாக அதன் மூலம் பிறந்த நாய்களுக்கு அதுவே வழியாக அமைந்தது. இப்படி பெயர்வாங்கிய நாய்கள் வழிகள் இங்கு நிறையவே உண்டு..


இதில் எது நல்ல வழி என்றால் ! அப்படி ஒன்றை மட்டும் தூக்கி நிறுத்த முடியாது என்பதே நிதர்சனம். இந்த வழிகள் எல்லாம் நமக்கு தருவது ஒரு வாய்மொழியான வரலாற்றை எழுதப்படாத ஆனாலும் 6, 7 தலைமுறை நாய்களின் முதத்தார்களை அறிய உதவும் தகவல் களஞ்சியங்களை. அதன் மூலம் புடிபடும் தரவுகளை. இப்படி நாயை இப்படி தேர்வு செய்து பயிற்சி குடுத்து, பாக்குமவமாக்கி கண்காட்சி வளையத்துக்குள் நிறுத்தப் படும் பல வெளி நாட்டு நாய் இனங்கள் இருக்கும் இன்றைக்கும் கூட, இன்னார் வழி நாய் ஒண்ணு அந்த தோரணையில் 25 வருடம் முன்பு இருந்தது அந்த உதர தொடர்பில் ஒட்டும் வழி எங்காவது உண்டா என்று அலசும் ஆள்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அது old school students களுடைய வழக்கம். குருநாதர் உள்ள அத்துணை பெரும் அதே மனநிலை வாய்க்கப் பெற்றவர்களே.


நானுமே கூட அப்படி ஒரு பள்ளியை சேர்ந்த மாணவன் தான் !