விதைகளைத் தொட்டியில் தூவிவிட்டு அது வளர்கிறதா என்று எட்டிப்பார்க்கும் பழக்கம் உங்களுக்குச் சிறுவயதில் இருந்தது உண்டா? அப்படியென்றால் அந்தர்யாமி சாஹூவின் கதை உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும். ஒடிசாவின் கண்டிலோ கிராமத்தைச் சேர்ந்த அந்தர்யாமி முதன்முதலில் ஒரு விதையை விதைத்தபோது அவருக்கு வயது 11. அவர் விதைத்தது குரங்கு எச்சம் பட்ட ஆலம் விதை. தான் படித்த பள்ளியின் வளாகத்தில் அதை விதைத்தவர் தினமும் அது முளைக்கிறதா இல்லையா என எட்டிப்பார்த்துக்கொண்டிருந்தார். அந்தர்யாமிக்கு மரங்கள் காதலானது அப்படித்தான்.
அன்று தொடங்கி ஒவ்வொரு வருடமும் தனது கிராமத்தின் பொதுவெளிகளில் தொடர்ச்சியாக இரண்டு மரங்களை நட்டு வருகிறார் அந்தர்யாமி. அவருக்கு வயது ஆக ஆக மரங்களின் மீதான ஆசையும் வளர்ந்தது. உத்திரப்பிரதேசத்தின் சிலெட்படா பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்த பிறகு அங்கிருக்கும் பிள்ளைகளையும் தன்னைப் போல மரம் நடப் பயிற்சி கொடுத்தார்.
தான் ஆசிரியராகப் பணியாற்றிய நாட்களில் தனது பள்ளியின் பின்புறம், தனது கிராமம் இருந்த மாவட்டத்தின் பொதுவெளிகள், காய்ந்த நிலப்பகுதிகள், சாலையோரம் என அத்தனைப் பகுதிகளிலும் செடிகளை நட்டார். மரம் நடுவதை மட்டுமே தனது வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டிருக்கும் இவரை கச்சா சார் என அழைக்கிறார்கள் அந்தப் பகுதி மக்கள், கச்சா என்றால் ஒடியாவில் மரம் என்று பொருள்.
அந்தர்யாமிக்குத் தற்போது 75 வயது. ஆனால் 11 வயதில் இருந்த அதே பேரார்வத்தோடு இப்போதும் தான் நட்ட மரம் வளர்கிறதா என எட்டிப்பார்த்துக்கொண்டிருக்கிறார், ‘1973ல் தான் நான் ஆரம்பப் பள்ளியொன்றில் ஆசிரியராகச் சேர்ந்தேன். அப்போது தொடங்கி ஆறு பள்ளிகளில் பெரிய அளவில் மரம் நடும் இயக்கத்தை உருவாக்கியிருக்கிறேன். காட்டு இலாகாவிலிருந்து மரக்கன்றுகளை அல்லது விதைகளைக் கொண்டு வந்து நர்சரியும் உருவாக்கியுள்ளேன்’ எனக் கூறுகிறார் அந்தர்யாமி. 2004ம் ஆண்டு வரை மட்டும் தனியாக 10000 மரக்கன்றுகளும் பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து 20000 மரங்களும் நட்டிருக்கிறார். நட்ட மரங்களை பகுதி வாரியாக ஆவணப்படுத்தியிருக்கிறார். சால், தேக்கு, ஆலமரம், மாங்காய், அத்தி போன்ற மரங்களை நடுவதை வலியுறுத்துகிறார் அவர். சோஷியல் மீடியா போன்ற டெக்னாலஜி எதுவும் தெரியாததால் கையாலேயே மரங்கள் செடிகள் விலங்குகளின் படங்களை வரைந்து போஸ்டர்களை உருவாக்கி ஊர் ஊராகச் சென்று மரங்களைக் காப்பாற்றுவதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார் அந்தர்யாமி.
மரங்களை நட்டுவிட்டால் சுற்றுச்சூழலைக் காப்பாற்றிவிடலாம் என மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் நமது பயோடைவர்சிட்டியை காப்பாற்றுவதுதான் சூழலைக் காப்பாற்றும். இந்தப் பகுதியின் தேனீக்கள், எறும்புத்தின்னிகள், ஆந்தை, மான், யானை, பட்டாம்பூச்சி, பல்லி, வௌவால் என 40 இனவகைகள் வரைக் கண்டறிந்து அவற்றைப் போஸ்டர்களாக உருவாக்கியுள்ளேன்’ என்கிறார் அவர். அவரது இந்த முயற்சியால் 2001 முதல் 2008 வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் அந்தப் பகுதியின் காட்டுத்தீ கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. தனிமனிதர் ஒருவரால் மட்டுமே ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்களை நடமுடிகிறது என்றால் எல்லோரும் இணைந்தால் இந்த நாடு எத்தனைப் பசுமையாக இருக்கும் என்று நீங்களே கற்பனை செய்து பார்க்கலாம். அந்தர்யாமிக்கள் இந்த பூமியின் அத்தியாவசியமானவர்கள்!