செங்கொடி ஏந்திய பெண்களை முன்னத்தி ஏராகக் கொண்டு முற்போக்கு அரசாங்கத்தை நடத்திவரும் கேரளாவின் பினராயி விஜயன் ஆட்சியில் வரதட்சணைக் கொடுமையால் பெண் ஒருவர் மரணம் அடைந்தார் என்ற செய்தி இப்போது வரை ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கிறது. ஆயூர்வேத மருத்துவத்துக்குப் படித்து வந்த 22 வயது விஸ்மயாவை அவரது குடும்பம் ஒரு வருடத்துக்கு முன்பு கோட்டயத்தைச் சேர்ந்த கிரண் என்பவருக்குத் திருமணம் செய்து வைத்தது. தனது பெண் கணவன் வீட்டில் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்பதற்காக நூறு சவரன் நகை, ஒரு ஏக்கர் நிலம், 9 லட்சத்துக்குக் கார் என வரதட்சணையை வாரி இறைத்திருக்கிறது குடும்பம். இத்தனைக் கொடுத்தும் விஸ்மயா அந்த வீட்டில் மகிழ்ச்சியாக இருக்கவில்லை. கிரண் விஸ்மயாவை அடித்துத் துன்புறுத்தியிருக்கிறார்.  திருமணமான ஆறு மாதத்திலேயே தன் பெற்றோர் வீட்டுக்குத் திரும்பிவிட்டார் விஸ்மயா. ஆனால் எப்படியோ சமாதானம் செய்து அவரைத் தன் வீட்டுக்கு மீண்டும் அழைத்துச் சென்றிருக்கிறார் கிரண். கிரண் அழைத்துச் சென்ற பிறகு தன் பெற்றோரிடம் பேசுவதையே முற்றிலுமாகத் தவிர்த்திருக்கிறார் விஸ்மயா. அதிகபட்சமாகத் தனது அம்மாவுடன் மட்டுமே அவரது உரையாடல் இருந்திருக்கிறது.




இதற்கிடையேதான் இரண்டு நாட்களுக்கு முன்பு கிரண் தன்னை அடித்துத் துன்புறுத்திய புகைப்படங்களை தனது சகோதரருக்கு அனுப்பியிருக்கிறார் விஸ்மயா. வரதட்சணையாக அளித்த கார் வேண்டாம் அதற்கு பதிலாகப் பெற்றோரிடம் பணமாக வாங்கிவரும்படி விஸ்மயாவை வற்புறுத்தியிருக்கிறார் கிரண். முடியாது எனச் சொல்லவும் அடித்துக் கொடுமைப் படுத்தியிருக்கிறார். காரில் இந்தச் சண்டை நிகழ்ந்திருக்கிறது. விஸ்மயா காரை விட்டு வெளியேற முயற்சிசெய்ய அவரை முடியை பிடித்து இழுத்துக் கொடுமை செய்ததாகத் தனது சகோதரருக்கு அனுப்பியிருக்கும் வாட்சப் சாட்டில் சொல்லியிருக்கிறார். 


இந்தச் சம்பவம் நடந்த இரண்டு நாட்களில்தான் நேற்று தனது கணவர் வீட்டில் பிணமாகக் கிடந்திருக்கிறார் விஸ்மயா. கொலையா தற்கொலையா என்கிற காரணம் தெரியவில்லை என்றாலும் இது வரதட்சணைக் கொடுமையால் நிகழ்ந்த மரணம். கேரள மகளிர் ஆணையம் இந்த விவகாரத்தில் தாமாக முன்வந்து வழக்கு தொடுத்திருக்கிறது.  




21ம் நூற்றாண்டிலும் வரதட்சணைக் கொடுமை மரணங்களா என்பதுதான் இந்தச் சம்பவத்தையொட்டி எழுந்திருக்கும் கேள்வி.. ஆனால் 2020ம் ஆண்டில் தொடக்கத்தில் கர்நாடக மாநிலத்தில் மட்டும் முதல் 16 நாட்களில் 17 வரதட்சணைக் கொடுமை வழக்குகள் பதிவாகியுள்ளன. அதே ஆண்டில் கேரளாவில் கொச்சி மாவட்டத்தில் மட்டும் 56 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. கடந்த 2019ம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட மொத்த வரதட்சணைக் கொடுமை வழக்குகளின் எண்ணிக்கை மட்டும் 7115. 2017-2019 வரையிலான மூன்று வருட காலத்துக்கான வழக்குகள் சராசரி மட்டும் 7249. ஆனால் துரதிர்ஷ்டவசமாக நமது நாட்டில் பதிவு செய்யப்படும் வரதட்சனைக் கொடுமைக்கு எதிரான வழக்குகள் அத்தனையும் குற்றவாளிகளுக்குச் சாதகமாகவே முடித்துவைக்கப்படுகின்றன. போதுமான ஆதாரங்கள் கிடைக்கப்பெறாதது, கிடைக்கும் ஆதாரங்கள் வலுவற்று இருப்பது இவற்றுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. 




2021ம் ஆண்டின் தொடக்கத்தில் மலையாள மொழியில் ஜியோ பேபி இயக்கத்தில் வெளியான ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ திரைப்படம் பெண்கள் மீது குடும்பங்கள் திருமணம் என்கிற பெயரில் திணிக்கும் வன்முறையைப் பேசியது. திருமணமான பெண் இருவீட்டாரால் எப்படி நடத்தப்படுகிறாள் என்பதைச் சமையலறை அரசியல் வழியாகப் பேசியது. படத்தின் கிளைமாக்ஸில் டீ கேட்கும் மாமனார் மற்றும் கணவருக்கும் கிளாஸில் கழிவுநீரைக் கொடுத்துவிட்டு அந்தப் பெண் வீட்டை விட்டு வெளியேறுவதாகக் காட்சிப் படுத்தப்பட்டிருக்கும். திரைப்படங்கள் போல விஸ்மயாக்களின் வாழ்க்கை இருப்பதில்லை என்பதுதான் மறுக்கமுடியாத நிதர்சனம்.


Also Read : சரத்பவாரின் மூன்றாவது அணி கூட்டத்தை புறக்கணித்த தி.மு.க!