கசவு புடவைகள் என்று அழைக்கப்படும் கேரள புடவைகள், கேரளாவின் பாரம்பரிய அடையாளங்களுள் ஒன்று. கேரளப் பண்டிகைகள் பொதுவாக கசவு புடவை இல்லாமல் முழுமையடைவதில்லை.


கசவு பொருள்


மென்மையான, வெள்ளை நிற, கைத்தறி பருத்தி துணியே கசவு எனப்படுகிறது. வெள்ளை மற்றும் தங்க நிறத்திலான இந்தப் புடவைகள் அவற்றின் அமைப்பு மற்றும் தங்க பார்டர் ஆகியவற்றால் தனித்துவமாக விளங்குகின்றன. 




இந்த புடவைகளின் நெசவு மற்றும் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் ஒரு பொருளிலிருந்து இந்த கசவு எனும் பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது.


கேரள மாநிலத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தோன்றிய உடை கசவு. அங்கு பெண்கள் 'செட்டு முண்டு' எனப்படும் இரண்டு துண்டு துணிகளை அணிவர். இது 'முண்டும் நேறியதும்' என்று பிரபலமாக அறியப்படுகிறது.


புவிசார் குறியீடு


பௌத்த காலத்தில் முண்டும் நெரியதும் பிரபலமடைந்தது. மேலும் அதன் வடிவமைப்பு கிரேக்க-ரோமன் உடையான பால்மைரீனால் ஈர்க்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.


கேரளாவில் உள்ள பாலராமபுரம், சேந்தமங்கலம் மற்றும் குத்தாம்புள்ளி ஆகிய மூன்று இடங்களில் தான் இந்தக் கசவு உடைகள் அதிகம் உற்பத்தி தயாரிக்கப்படுகின்றன. இதற்காக இப்பகுதிகளுக்கு புவிசார் குறியீடும் வழங்கப்பட்டுள்ளது.


19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் மகாராஜா பலராமவர்மா மற்றும் அவரது முதல்வர் உம்மினி தம்பி ஆகியோரின் ஆட்சியின் கீழ் ’முண்டும் நேரியதும்’ கேரளாவில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.


தமிழ்நாட்டு நெசவாளர்கள் பங்கு


“திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள பாலராமபுரம், கேரளாவின் சிறந்த பருத்தி கைத்தறி துணிகளுக்கான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் ஒன்றாகும். சாலியா சமூகத்தைச் சேர்ந்த நெசவாளர்கள் தற்போதைய தமிழ்நாட்டின் நாகர்கோவில், திருநெல்வேலி பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்தவர்கள். 
திருவிதாங்கூர் அரச குடும்பத்தின் தேவைக்காக அதிநவீன ‘முண்டும் நேரியதும்’ இவர்கள் தயாரித்தார்கள்.


 






இவர்களிடமிருந்து இந்தத் தொழில்நுட்பம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள உள்ளூர் நெசவாளர்களுக்கு பரவியது எனவும் கூறப்படுகிறது.


புகழ்பெற்ற ஓவியர் ராஜா ரவி வர்மா தனது ஓவியங்களில் முண்டும் நெரியத்தும் அணிந்த பெண்களை பாரம்பரிய மற்றும் நவீன பாணியில் சித்தரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.