காஞ்சிபுரம் பெருநகராட்சிக்கு உட்பட்ட செவிலிமேடு உரக்கிடங்கில் மக்கும் குப்பையிலிருந்து தயாரிக்கப்பட்ட இயற்கை உரத்தினை பெருகராட்சி சார்பில் அப்பகுதியை சேர்ந்த விவசாயிக்கு பெருநகராட்சி ஆணையர் மகேஸ்வரி இலவசமாக வழங்கினார்.
காஞ்சிபுரம் பெருநகராட்சி சார்பில் செவிலிமேடு பகுதியில் இயங்கி வரும் பசுமை உரக்கிடங்கில் தினசரி சேகரிக்கப்படும் குப்பைகள் இங்கு எடுத்து வரப்பட்டு அவை மக்கும் குப்பை,மக்காத குப்பை என தரம் பிரித்து மக்கும் குப்பையிலிருந்து உரமாக தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இங்கு பல்வேறு பகுதியிலிருந்து நாளொன்றுக்கு 65 டன் குப்பைகள் கொண்டுவரப்பட்டு அதிலிருந்து 31 டன் மக்கும் குப்பையாக சேகரிக்கப்பட்டு பின்னர் அதனை இயற்கை உரமாக தயாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த மக்கும் குப்பையிலிருந்து இயற்கை உரமாக தயாரிக்கப்பட்ட 5டன் உரத்தை செவிலிமேடு விவசாயி கார்த்திகேயனுக்கு பெருநகராட்சி ஆணையர் மகேஸ்வரி இன்று இலவசமாக வழங்கினார்.
இயற்கை உரத்தை இலவசமாக பெற்றுக்கொண்ட விவசாயி கார்த்திகேயன் நகராட்சி அதிகாரிகள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டு இயற்கை உரத்தை டிராக்டரில் ஏற்றிச் சென்றார்.
மேலும் நகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி இது குறித்து கூறுகையில் ,
நகர்ப்பகுதிகளில் தினசரி சேகரிக்கும் குப்பைகளில் மக்கும் குப்பையிலிருந்து இயற்கை உரமாக தயாரித்து விவசாயிகளுக்கு இலவசமாக தொடர்ந்து வழங்கி வருகிறோம். தேவைப்படும் விவசாயிகள் நகராட்சியை தொடர்பு கொண்டு இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். ரசாயன உரம் கலக்காமல் இயற்கை உரம் பயன்படுத்தி செய்யப்படும் விவசாயம் மண் வளத்தையும், மனித வளத்தையும் பாதுகாக்கும் என்றார்.
அந்த வகையில் செவிலிமேடு பகுதியில் உள்ள உரம் கிடங்கில் பிள்ளையார் பாளையம், செவிலிமேடு, ஓரிக்கை, மாவட்ட ஆட்சியர் வளாகம் உள்ளிட பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்களிடம் பெறப்பட்ட குப்பைகளை தரம் பிரித்து மக்கும் குப்பைகளை 48 நாள்கள் குப்பையை பதப்படுத்தி இயற்கை உரமாக்கி விவசாயிகளிடம் அள்ளித்து வருகின்றனர். அந்தவகையில் செவிலிமேடு பகுதியில் இயற்கை விவசாயம் செய்து வரும் கார்த்திகேயன் என்கிற விவசாயிக்கு இலவசமாக 5 டன் இயற்கை உரத்தை நகராட்சி ஆணையர் மகேஷ்வரி வழங்கினார். தற்போது வரை 30 டன் வரை இயற்கை உரம் இருப்பு உள்ளதாகவும் உரம் கேட்டு வரும் விவசாயிகளுக்கு உரம் அளிக்க தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
தற்போது இயற்கை உரம் கிலோ ரூ.5 வீதம் , டன் ஒன்றுக்கு ரூ. 5 ஆயிரத்திரம் என வெளியில் விற்கப்படுகிறது. இங்கு போதுமான அளவு இருப்பு இருப்பதால் இதனை பயன்படுத்தி விவசாயிகள் இலவசமாக வழங்கப்படும் உரத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆணையர் கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் ரமேஷ்குமார்,செவிலிமேடு பகுதி நகராட்சி பணியாளர் ரோஸ்மேரி ஆகியோரும் உடன் இருந்தனர்.