வெண்டைக்காய் பிடிக்காதவர்கள் இருக்க முடியாது. ரசம் - வெண்டைக்காய் வறுவல், தயிர்சாதம் - வெண்டைக்காய் வறுவல், சப்பாத்தி-வெண்டைக்காய் க்ரேவி, வறுவல் என எல்லாம் சுவை மிகுந்த காமினேசன். ஆனால், வெண்டைக்காய் பயன்படுத்தி எந்த உணவு வகை செய்தாலும் அதிலுள்ள வழவழப்புத்தன்மை பலருக்கும் பிடிக்காது. அப்படியில்லாமல் வெண்டைக்காய் சமைக்க சில பரிந்துரைகளை இங்கே காணலாம். 


வெண்டைக்காய் தேங்காய் சேர்த்த பொரியல், குழம்பு, வெண்டைக்காய் காரக்குழம்பு, வறுவல், குருமா என செய்து சாப்பிடலாம்.  மாலை நேரத்தில் ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். பஜ்ஜி, போண்டா, சமோசா, உருளைக்கிழங்கு சிப்ஸ் போன்றைவைகள் போல வெண்டைக்காய் சிப்ஸ் செய்து சாப்பிடலாம். வெண்டைக்காயில், வெங்காய பக்கோடா செய்முறையில் செய்து அசத்தலாம். மொறுமொறுப்பாக இருக்கும். 



  • வெண்டைக்காய் நறுக்கும்போதே அதில் வழவழப்புத்தன்மை வந்துவிடும். சமைப்பதற்கு முன்பும், பின்பும் சிலவற்றை பின்பற்ற வேண்டும். 

  • வெண்டைக்காயை நறுக்கும் முன்பு அதை தண்ணீரில் கழுவ வேண்டாம். சமைப்பதற்கு 2 மணிநேரம் முன்பே சுத்தப்படுத்தி காய வைக்க வேண்டும். ஈரப்பதம் நீங்கியதும் வெண்டைக்காயை சமைக்கலாம். 

  • வெண்டைக்காயை ஈரத்துணியால் துடைத்தும் சுத்தம் செய்யலாம். ஆனால், ஈரம் காயும் வரை நன்றாக காயவிட வேண்டும். பருத்தி துணியில் அதை பரத்தி காயவைக்கலாம். இப்படி செய்தால் சமைக்கும்போது ஈரப்பதம் இருக்காது. 

  • வெண்டைக்காயை நறுக்கும்போது ஒரே அளவில் நறுக்க வேண்டும். 

  • இதை நறுக்கும்போது கத்தியில் எலுமிச்சை பழ சாறை தடவி நறுக்குவது உதவலாம். அதைப்போலவே சமைக்கும்போதும் சிறிதளவு எலுமிச்சை பழச்சாறை சேர்க்கலாம். இது வழவழப்பு தன்மையை நீக்கும். 

  • இவை வழவழப்புத் தன்மையை முழுவதுமாக நீக்கி விடாது. இருப்பினும், இந்த குறிப்புகள் சிறிதளவு உதவும். வழவழப்புத்தன்மையை முழுவதுமாக நீக்கிவிட கூடாது என்றும் சொல்கின்றனர்.


வெண்டைக்காயில் புரதம், நார்ச்சத்து, தேவையான நல்ல கொழுப்பு, கால்சியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், வைட்டமின் சி, வைட்டமின் பி1, வைட்டமின் பி2, வைட்டமின் பி-6, வைட்டமின் பி9 என ஏராளமான சத்துகள் உள்ளன.


இது கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு மிகவும் அவசியமான ஃபோலிக் அமிலம் வெண்டைக்காயில் நிறையவே உள்ளது. குழந்தைப்பேறு காலத்தில் வெண்டைக்காய் அதிகம் சாப்பிடலாம்.  வெண்டைக்காயின் சிறப்பே அதன் வழவழப்புத்தன்மை என்று சொல்லப்படுகிறது. 


வெண்டைக்காயில் உள்ள பீட்டா கரோட்டின் உடலுக்கு நல்லது. இது பார்வைத் திறன் மேம்படவும் உதவும். வெண்டைக்காய் வாரத்திற்கு இரண்டு நாட்கள் உணவில் சேர்த்து கொள்ளலாம். ஆன்டி-ஆக்ஸிடன் அதிகமுள்ளதாக உடலுக்கு தேவையான சத்துக்களை வழங்குகிறது.


பொறுப்புத்துறப்பு: இந்த உள்ளடக்கம் பொதுவான தகவல்களை உள்ளடக்கியது. இது மருத்துவ ரீதியான அறிவுரையோ, கருத்தோ அல்ல. தனிப்பட்ட உடல்நலம் சார்ந்த தகவல்களுக்கு மருத்துவரை அணுகுவது மட்டுமே சரியான தீர்வாகும். ஏபிபி பொதுத் தகவல்களுக்கான பொறுப்பை ஏற்காது.