தினம் ஒரு பானம் என்ற அடிப்படையில் பலரின் ஃபேவெரெட் காஃபி . காஃபிக்கு உலகின் மூலை முடுக்கெல்லாம் ரசிகர்கள் உள்ளனர். வறுத்த காஃபி கொட்டைகளில் மணம் பிடிக்காதவர்கள் யாரும் இருக்கவே முடியாதுதானே! சிலர் காஃபி இல்லையென்றால் தங்கள் நாளே தொடங்காது , நிறைவடையாது என்பார்கள். காஃபியை கொதிக்க வைக்கும் நீரில் கலந்து அருந்த சிலருக்கு பிடிக்கும் , சிலருக்கு மெஷின் காஃபி பிடிக்கும் , சிலருக்கு ஃபில்டர் காஃபி பிடிக்கும். என்னதான் பல வகைகளில் காஃபியை அருந்தினாலும் கூட , அதனை குடிப்பதற்கு சில காலக்கட்டங்கள் இருக்கிறதுதானே! அதீத காஃபி சில சமயங்களில் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவைதான். அதிலும் கர்ப்பகாலங்களில் காஃபி குடிக்கலாமா என்ற சந்தேகமும் உள்ளது.கர்ப்ப காலத்தில் காபி குடிப்பது பாதுகாப்பானதா? அப்படி குடித்தால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா என்ற சந்தேகம் உங்களுக்கு இருக்கலாம். அது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.





கர்ப்பிணிகள் காஃபி குடிக்காதீங்க :


கர்ப்பிணிப் பெண்கள் குழந்தையின் வளர்ச்சியை ஊக்குவிக்கவும், தங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவுகளை சேர்த்துக்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. மது அருந்துதல் அல்லது புகைபிடித்தல் போன்ற பழக்கவழக்கங்களை கண்டிப்பாக கைவிட வேண்டும் . ஆனால் காஃபியில் உள்ள  காஃபின் என்னும் வேதிப்பொருள் குழந்தைக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்துமோ என பல தாய்மார்கள் அச்சத்தில் இருக்கின்றனர்.கர்ப்ப காலத்தில் காபியை உட்கொள்வது, குறிப்பாக பரிந்துரைக்கப்பட்ட அளவு 220 mg-க்கு மேல்  காஃபியை அருந்துவது குழந்தையின் ஆரோக்கியத்தில் சிக்கல்களை ஏற்படுத்தலாம் என்று ஆராய்ச்சி கூறுகிறது.‘Coffee consumption during pregnancy - what the gynaecologist should know? என்னும் தலைப்பில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் பரிந்துரைக்கப்பட்ட அளவை விட காஃபின் உட்கொள்வதால், வளர்சிதை மாற்றம் கணிசமாக குறைகிறது என்பது தெரிய வந்துள்ளது. மேலும் கஃபைன் 'கருவின் உடலில் ஊடுருவி' தாய் மற்றும் குழந்தை இருவருக்கும் உடல்நலச் சிக்கல்களுக்கு வழிவகுக்கிறது.  தாய் உட்கொள்ளும் காஃபியின் அளவு குழந்தையின் முடியுடன் தொடர்புடையது என்கிறது ஆய்வு.எனவே  கர்ப்ப காலத்தில் காஃபின் உட்கொள்வது கருச்சிதைவு, , குறைந்த எடை அல்லது குறைந்த கர்ப்ப எடை, முன்கூட்டிய பிறப்பு அல்லது முன்கூட்டிய கர்ப்ப முடிவு உள்ளிட்ட பல பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.



காஃபியில் உள்ள நன்மைகள் :


இருப்பினும், கர்ப்பமாக இல்லாத அனைவருக்கும் காபி குறிப்பிடத்தக்க ஆரோக்கிய நன்மைகளைக் வழங்குகிறது. சர்க்கரை அல்லது பால் சேர்க்காமல் பேப்பர் ஃபில்டர் மூலம் காய்ச்சப்படும் காபி ‘மனித ஆரோக்கியத்தில் நன்மை பயக்கும்’ என்று அதே ஆய்வுக் கட்டுரை தெரிவித்துள்ளது. ஒரு நாளைக்கு மொத்தம் 2-3 கப் காஃபி குடிப்பதால் அதில் உள்ள  ஆண்டிஹைபர்ட்டென்சிவ் பண்புகள் மற்றும் நரம்பு, செரிமான, இருதய மற்றும் சிறுநீரக அமைப்புகளின் செயல்பாட்டில் நேர்மறையான விளைவைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. காஃபியை அதிகமாக உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் , வயதானவர்கள் , புகைப்பிடிக்கும் பழக்கம் உடையவர்கள் அதிகமாக எடுத்துக்கொள்வதாக மேற்கண்ட ஆய்வின் முடிவு தெரிவிக்கிறது.