வயிற்றில் ஏற்படும் அஜீரண கோளாறு மருத்துவத் துறையில் டிஸ்பெப்சியா (dyspepsia) என அழைக்கப்படுகிறது. சரியாக சாப்பிடாதவர்கள், ஜீரணக் கோளாறு இருப்பவர்களுக்கு அஜீரணம் ஏற்பட வாய்ப்புள்ளது. வயிறு உப்புசமாக உணர்ந்தாலோ, வயிறு வலித்தாலோ அஃது அஜீரணமாக இருக்கலாம். அஜீரணம் ஏற்பட பல காரணிகள் உண்டு. காரமான உணவு, சாப்பிட்டவுடன் படுப்பது, மன இருக்கம், பதற்றம், மது அருந்துதல், புகைபிடித்தல் ஆகியவை அஜீரணம் ஏற்பட காரணிகளாக உள்ளன.  இரைப்பை புற்றுநோய் (stomach cancer), இரைப்பை அழற்சி (gastritis), குடற்புண் (peptic ulcers), பித்தப்பை கல் (gallstones), கணைய அழற்சி (pancreatitis) ஆகிய நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அஜீரணம் ஏற்பட வாய்ப்புள்ளது.


அஜீரணத்திற்கான அறிகுறிகள்: 

வாய் குமட்டுதல்

வாய் துர்நாற்றம்

வயிற்று வலி

நெஞ்செரிச்சல்

வாய் புளித்தல்

வயிற்றுப்போக்கு

பசியின்மை

வாயு தொல்லை

வயிறு உப்புசம்

 

அஜீரணத்தை குணமாக்க சில டிப்ஸ்கள்

 



 

இஞ்சி

உணவுடன் இஞ்சி சேர்த்துக் கொள்ளலாம் அல்லது இஞ்சி தேநீர் அருந்தலாம். இஞ்சியில் ஆண்டி ஆக்சிடண்ட் இருப்பதால் அஜீரணத்தை குணப்படுத்த உதவும். இஞ்சியில் வலி மற்றும் அழற்சியை குணப்படுத்தும் தன்மை உள்ளது.

 



 

எலுமிச்சை

சாப்பிட்ட பிறகு எலுமிச்சை ஜூஸ் குடித்தால் வயிற்றெரிச்சல் மற்றும் வயிற்று வலி குறையும். செரிமானமும் எளிதாக நடைபெற உதவும். உடல் எடையையும் குறைக்க முடியும். இதன் காரணமாகவே எலுமிச்சை ஜூஸ் உணவுக்குப்பின் பரிந்துரைக்கப்படுகிறது. பெரும்பாலானவர்கள் அசைவ உணவு உட்கொள்கையில் எலுமிச்சை ஜூஸ் குடிப்பதன் பின்னணியும் இதுவே.

 

 

புதினா

குடல் தசைகளை மிருதுவாக்க புதினா உதவுவதுடன் வாய் துர்நாற்றத்தை நீக்கும், வாய் குமட்டுதலை குணமாக்கும். சாப்பிட்ட பிறகு புதினா இலைகள் அல்லது புதினா தேநீர் பருகலாம்.

 



 

சமையல் சோடா

வயிற்று அமிலத்தை சமன் செய்ய சமையல் சோடா உதவும். அஜீரணம் மற்றும் நெஞ்செரிச்சலுக்கு நிவாரணம் தரும். நாளுக்கு ஒருமுறை ஒரு டேபிள் ஸ்பூன் சமையல் சோடாவை தண்ணீர் அல்லது தேனில் கலந்து சாப்பிடலாம்.

 



 

நெல்லிக்காய்

நாளுக்கு ஒருமுறை நெல்லிக்காய் சாப்பிட்டு வர அஜீரண கோளாறு நீங்கும். அதோடு இரத்தத்தை சுத்தப்படுத்தும் காரணியாகவும் நெல்லிக்காய் உள்ளது. நெல்லிக்காயை ஜூஸாக எடுத்தும் குடிக்கலாம். உப்பு சேர்த்து குடிப்பது நீர்வெட்கையை போக்குவதோடு, அஜீரணக் கோளாறுக்கும் தீர்வாக அமையும்.

 



 

 

இலவங்கப்பட்டை

ஆண்டி ஆக்சிடண்ட் இருப்பதால் அஜீரணத்தை குணப்படுத்த இலவங்கப்பட்டை உதவும். இதனை அப்படியே சாப்பிடலாம் அல்லது தேநீரில் கலந்து நாளுக்கு 2-3 முறை அருந்தலாம்.



 

பெருஞ்சீரகம் 

இரைப்பை நீர் சுரக்க பெருஞ்சீரகம் உதவும். பெருஞ்சீரகத்தை அப்படியே சாப்பிடலாம் அல்லது நீருடன் கலந்து சாப்பிடலாம்.

 



தேன்

பாக்டீரியாக்கள் உற்பத்தியை தடுப்பதன் மூலம் அஜீரணத்தை குணப்படுத்த தேன் உதவும். தேனை அப்படியே சாப்பிடலாம் அல்லது வெதுவெதுப்பான நீரில் கலந்து சாப்பிடலாம்.