புற்றுநோயைத் தடுப்பது மற்றும் பொதுமக்களுக்கு முன்கூட்டியே கண்டறிவது குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்' அனுசரிக்கப்படுகிறது.
நாட்டில் புற்றுநோய் சிகிச்சை வசதிகளை வழங்கும் நோக்கில், 1975 ஆம் ஆண்டில் தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது. புற்றுநோயைத் தடுப்பதற்கும், ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதற்கும் உந்துதலாக 1984-85 ஆம் ஆண்டில் இத்திட்டம் திருத்தியமைக்கப்பட்டது.
மேரி- கியூரி:
விஞ்ஞானி மேரி கியூரி ரேடியம் மற்றும் பொலோனியம் கண்டுபிடிப்பானது, புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் மிகப்பெரிய பங்களிப்பை அளித்தது.
மேலும் இவரது கண்டுபிடிப்புக்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, அவரது கண்டுபிடிப்பை பெருமைப்படுத்தும் விதமாக, அவரது பிறந்தநாளான நவம்பர் 7ம் தேதி தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினமானது, பிரபல விஞ்ஞானி மேரி கியூரியின் பிறந்தநாளை ஒட்டி அனுசரிக்கப்படுகிறது. அவரது பணியானது புற்றுநோய் சிகிச்சைக்கும் கதிரியக்க சிகிச்சையின் வளர்ச்சிக்கும் வழிவகுத்தது.
இந்தியாவில், ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 11 லட்சம் பேருக்கு புதிதாக புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்படுவதாக கூறப்படுகிறது. இதில் மூன்றில் இரண்டு பங்கினர் புற்றுநோய் பாதிப்பில் மேம்பட்ட நிலையில் கண்டறியப்படுகின்றன. இது நோயாளிகளின் உயிர்வாழ்வதற்கான வாய்ப்புகளை குறைக்கிறது. இந்தியாவில் ஒவ்வொரு 8 நிமிடங்களுக்கும் ஒரு பெண் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் இறக்கிறார் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
புகையிலை:
புகையிலையைப் பயன்படுத்துவது 14 வகையான புற்றுநோய்களுக்கு ஒரு ஆபத்து காரணி என்று ஒரு லான்செட் அறிக்கை வெளிப்படுத்துகிறது. ஆல்கஹால், போதைப்பொருள் பயன்பாடு மற்றும் மோசமான உணவு ஆகியவை பிற காரணங்களில் அடங்கும். பாதுகாப்பற்ற உடலுறவு என்பது கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கான முக்கிய ஆபத்து காரணியாகும். மேலும் இது பெண்களில் இரண்டாவது மிகவும் பொதுவான புற்றுநோய் வகையாகும்.
புகையிலை பயன்பாடு மற்றும் காற்று மாசுபாடு ஆகியவை நுரையீரல் புற்றுநோயின் அதிக ஆபத்தானதாக கருதப்படுகிறது.
இந்நிலையில், புற்றுநோயை கட்டுபடுத்தும் விதமாக, ஆண்டுதோறும் தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம் நவம்பர் 7 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.