இன்றைய சூழலில் பெரும்பாலான பெண்கள் அலுவலக வேலைகளுக்கு செல்கின்றனர். இதனால் கூந்தலை சிலரால் சரிவர கவனிக்க முடிவதில்லை. ஆனால், கூந்தல் சேதமடைவதாலும், முடிகொட்டுதல் போன்ற பிரச்சனைகளாலும் சிலர் மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர்.  அதிக ரசாயனம் கலந்த ஷாம்புகள் உள்ளிட்டவற்றை பயன்படுத்துவதைக்காட்டிலும், இயற்கையான வழிமுறைகளை பயன்படுத்தி கூந்தலை பராமரிக்கலாம். இயற்கையான வழியில் செம்பருத்தி மாஸ்க் பயன்படுத்தி கூந்தலை பராமரிக்கலாம். 


இந்த செம்பருத்தி மாஸ்க் தலைமுடிக்கு முற்றிலும் பாதுகாப்பானதாக இருக்கும். செம்பருத்தி பூ மற்றும் இலை இரண்டையும் உங்கள் தலை முடியில் அப்ளை செய்யலாம். இதனை தயாரிக்க பல வழிகள் இருக்கின்றன. செம்பருத்தி மாஸ்க் எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.


தேவையான பொருட்கள்


செம்பருத்தி பூ - தேவையான அளவு


செம்பருத்தி இலை - தேவையான அளவு


பயன்படுத்தும் முறை


பிரெஷாக பறித்த சில செம்பருத்தி பூக்கள் மற்றும் செம்பருத்தி இலைகளை தண்ணீரில் கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் பூவின் இதழ்களை பிரித்து இதழ் மற்றும் இலைகளை மிக்சி ஜாரில்  சேர்த்து தேவைப்படும் அளவு தண்ணீர் சேர்த்து மைய அரைத்துக் கொள்ள வேண்டும். 


இந்த பேஸ்டை தலைமுடி வேரில் இருந்து நுனி வரை தடவிக் கொள்ளுங்கள். தலையில் அனைத்து இடத்திலும் இந்த பேஸ்ட் படும்படி அப்ளை செய்ய வேண்டும். பின்னர், தலைமுடியை கட்டி சுமார் 30- 40 நிமிடங்கள் உலர வைக்க வேண்டும். இறுதியாக ரசாயணம் குறைவான ஷாம்பை பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும். இந்த மாஸ்க்கை வாரத்திற்கு ஒரு முறை தொடர்ச்சியாக பயன்படுத்தி வருவதன் மூலம் உங்கள் கூந்தலில் மாற்றங்களை கண்கூடாக காண முடியும்.



செம்பருத்தி மற்றும் தேங்காய் எண்ணெய் மாஸ்க்


தேவையான பொருட்கள்


செம்பருத்தி பூ - 6 முதல் 10


செம்பருத்தி இலைகள் - 6


தேங்காய் எண்ணெய் - 3 டீஸ்பூன்


செய்முறை


 6 முதல் 10 செம்பருத்தி பூ மற்றும் தேவையான செம்பருத்தி இலைகளை எடுத்து அவற்றை நன்கு கழுவி பின்னர் பூக்களின் இதழ்களை பிரித்தெடுத்துக் கொள்ள வேண்டும்.  இப்போது அவற்றை அரைத்து நன்றாக பேஸ்ட் செய்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். இதனை தொடர்ந்து சுமார் 3 டீஸ்பூன் அளவு தேங்காய் எண்ணெய் எடுத்து அதனை சிறிது சூடாக்க வேண்டும்.


தேங்காய் எண்ணெய்யை குளிர வைத்து அரைத்து வைத்த பேஸ்டை அத்துடன் சேர்த்து மிக்ஸ் செய்ய வேண்டும். பின்னர் கலவையை உங்கள் கைகளை கொண்டு தலைமுடியின்  வேர் முதல் நுனி வரை தடவிக்கொள்ள வேண்டும். 30 முதல் 40 நிமிடங்கள் அப்படியே விட்டு, பின்னர் ரசாயனம் குறைவான ஷாம்பு கொண்டு தலையை அலசுங்கள். வாரத்திற்கு ஒரு முறை தலைக்கு இந்த மாஸ்க் பயன்படுத்துவதன் மூலம் பட்டுப்போன்ற மென்மையான கூந்தலை பெற முடியும்.