வேட்டைத்துணைவன் 18


கன்னி/ சிப்பிப்பாறை நாய்கள் பகுதி – 10


பரும் தலை அமைப்பு கொண்ட பருவெட்டு நாய்கள் ( அதாவது மண்டை நாய்கள்) இன்றைய ராம்நாடு வட்டரத்தில் மட்டுமல்லாது பிற இடங்களிலும் உண்டு என்பதை முந்தய கட்டுரை வாயிலாக அறிந்தோம். பிரிட்டிஷ் குறிப்புகளை பார்க்கும் போது கூட மதுரை, நெல்லை ஏன் மலபார் வட்டரங்களில் இவற்றோடு பொருந்தத் தக்க நாய்கள் உண்டு என்ற செய்தியை பார்க்க முடிகிறது. சில பிரத்தியோக நிறங்கள் அவற்றில் உண்டு என்பதையும் அது வேறு ஒரு திறப்புக்கு வழி வகை செய்யும் என்பதை நம்புவோம். அது போல இன்றைய தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விளாத்திகுளம் பகுதியிலும் கூட இன்நாய்கள் காணப்பட்டது  அதற்கான காரணங்களில் மேச்சலும், சமூகங்களும் இடப் பெயர்வுமாகக் கொள்ளலாம்.


மறவர், நாயக்கர், ரெட்டியார், பள்ளர், கோனார், நாடார் போன்ற சமூக மக்களுகுள் அதிகம் புழக்கத்தில் இருந்த இந்நாய்கள் ( கூர் முக வேட்டை நாய்களை சொல்லவில்லை பருவட்டு சாம்ப நாய்களை சொல்கிறேன் )தெற்கில் ஒரு பெரிய வரைபடம் வரையும் அளவுக்கு பரவி இருந்துள்ளது. சொல்லப்போனால் இவ்வகை நாய்கள் அறியபட்டு பதிவு செய்யப்பட்டது எல்லாம் சிப்பிப்பாறை வட்டரங்களில் ( ஏழாயிரம் பண்ணை சித்திரம்பட்டி, சமத்தம்பட்டி துடங்கி செவல்பட்டி, அம்மையார்பட்டி, அலமேலுமங்கை புறம், வரகனி, கரிசப்பட்டி, திருவேங்கடம் என  நீளும் கரிசல் வட்டாரங்கள்) தான். கவனித்து பாருங்கள் அந்த ஊர்களில் செம்மறை நாய்களும் உண்டு ( பின்னர் அது பற்றியும் விரிவாக விவாதிப்போம் )  அதனாலயே இவற்றுக்கு சிப்பிப்பாறை நாய்கள் இன்று துடைக்கத்தில் பெயர்கள் இருந்தது. அதே வேளையில் இவை ராமநாதபுரம் வட்டரங்களிலும் இருந்தது என்பதை மறந்து விட வேண்டாம்.


சரி இப்படி எல்லாம் இருந்தும் சிப்பிப்பாறை வட்டாரங்களில் ஏன் அந்த பகுதியில் இன்றைய தேதியில் அந்த நாய்கள் ( சிப்பிப்பாறை சாம்ப நாய்கள்) அரிதாகி காணாமல் போனது என்ற கேள்வியை இங்கு முன்வைக்க வேண்டும். தொன்னூறுகளுக்குப் பிறகுதான் கூர்முக நாய்கள் பற்றிய அறிமுகம் அந்தப் பகுதி ( அதாவது நெல்லை / தூத்துக்குடி / விருதுநகர் மாவட்டங்கள் ) தவிர்த்து வெளியே வரத்துவங்கியது. ஏன் தென்மாவட்டங்களுக்கு உள்ளேயே கூட கூர் முக கன்னி / சிப்பி நாய்கள் முழுக்க பரவப்பட்டது 70 களில் தான்.


காரணம் ஆந்திராவில் இருந்து வந்த நாயக்கர் சமூக மக்கள் மூலம் இங்கு வந்த கூர் முக நாய்களைப் பெற்றவர்களுக்குள் இருந்த இறுக்கமான தன்மைதான். சொந்தங்களுக்குள் கூட குடுக்க மாட்டேன்  என்ற காட்டுச்சிட்டான நிலையெல்லாம் கால ஓட்டத்தில் மாறி தனக்கு இணக்கமான,  பழக்கமான பிற சமூக மக்களிடத்தில் இந்த நாய்கள் பரவலாக பரவியது தோராயமாக இந்த காலகட்டம் தான்.


அதற்க்கு முன்பு வரையில் நாட்டு நாய்களைக் கொண்டு நிகழ்த்தப் பட்டுவந்த வேட்டை இப்போது கூர்  முக நாய்களை கொண்டு நிகழ்த்தப்பட்டது.  போக அந்த கூர்முக நாய்களை களத்துக்கு கொண்டு வருபவர்கள்  மீது மற்றவர்கள் மத்தியில் பெரும் மதிப்பும் கூடியது. கிடைத்தற்கு அறிய பொருள் அல்லவா ! தொடர்ந்து அந்த நாய்கள் மீதான கவர்ச்சியும் மோகமும் கூடியது. ஒரு உறையில் ரெண்டு கத்தி இருக்க முடியுமா?  அதே கதைதான்.  அதே பகுதியில் இருந்த கூர் முக நாய்கள் மீதான ஆர்வம் அந்த பகுதியில் இருந்த பருவெட்டு நாய்களில் குறைய துவங்கியது. அதுவே காலப்போக்கில் அங்கு அந்நாய்கள் காணாமல் போக காரணமாகவும் அமைந்தது. போக இந்த பகுதிகளில் பன்றி வேட்டையை விட முயல் வேட்டையை பிரதானம் என்பதாலும் அதற்கு தோதான கூர் முக நாய்கள் மட்டுமே கவனத்தில் கொள்ளப்பட்டது. ஆனால் ராமநாதபுரம் வட்டாரத்தில் இப்படி பிரதியோகமான வேறு ஒரு நாய் இனம்  போட்டிக்கு கிடையாது  என்பதால்  அங்கு இருந்த நாய்கள் அப்படியே  தங்கிக்கொண்டது.


இவ்வளவயும் தாண்டி இது ராம்நாட் பகுதியில் மட்டும் உள்ள நாய்கள் தான் அதற்கு சான்றுகள் உண்டு என்று நிறுவ  ரெண்டு விதமான விசியங்களை முன்வைப்பவர்கள் உண்டு.


ஒன்று,  W. V. Soman எழுதிய “ The Indian dogs”  புத்தகத்தில் இருந்து காட்டப்படும் செய்தி. அதில் கோம்பை நாய்களைப் பற்றி சொல்லும் போது ராமநாதபுர பகுதியில் உண்டு என்று சொல்லி இருக்கிறார். அப்படி என்றால் அது கோம்பை அல்ல ராமநாதபுரம் மண்டை நாய்கள் தான் என்ற வாதம்.இதில் அவர்கள் தவற விடுவது பூகோளத்தை ! ஆம் வரலாறு என்று எடுத்துக் கொண்டால் பூகோளமும் சேர்த்தி தான்.இந்தப் பத்தியை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் கோம்பை நாய் பற்றி நாம் பார்க்கும் போது தேவைப்படும்


 Soman எழுதிய புத்தகம் வெளியான ஆண்டு என்றால் 1962 அன்றைய நில அமைப்பு மாவட்ட எல்லைகள் எல்லாம் என்ன என்பதை நாம் அறியாமல் எப்படி மேலோட்டமாக முடிவுக்கு வர முடியும். அன்றைய ராமநாதபுரம் மாவட்டம் என்பது இன்றைய மூன்று மாவட்ட பகுதிகளை உள்ளடக்கிய பெரிய முகவை மாவட்டம். அப்படி பார்த்தால் சிப்பிப்பாறை ஊரில் இருந்து ராஜபாளையம் ஊர் வரைக்கும் முகவை மாவட்டம் தான்.  பகுத்து அறியாமல் முடிவு செய்தால் எல்லாமே ஒன்றாகி விடும் அல்லவா? சரி இதுதான் இப்படி என்றால் ரெண்டாவது வாதமோ இந்த நாய் பெயர் மண்டை அல்ல கோம்பை அதுவும் ராமநாதபுரம் கோம்பை இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் “கோம்ப” ஆம் கோம்ப என்றால் அலங்கு ! அலங்கு கூட அல்ல அணங்கு என்று சகட்டு மேனிக்கு எதை எதையோ சொல்லி நீளும் அர்த்தம் அற்ற சொல் ஆராச்சியும் முன்முடிவுகளும் நிறைந்தது.


அவர்கள் எந்தப் பகுதியில் நாய்கள் குறித்த கல்வெட்டுகள் கிடைத்தாலும், பாருங்கள் ! இது இந்த நாய் தான் என்று வாதிடுபவர்கள். எந்த அளவுக்கு என்றால் சோழர் கொடியில் உள்ளது புலி அல்ல அது நாய் ! ஆம் தமிழனின் மரபான வீரத்திற்கு பெயர் போன நமது மண்டை நாய் என்ற அளவுக்கு. வேடிக்கைக்கு சொல்லவில்லை இந்தக் கூத்து நிஜமாகவே நடந்தேறிய  இடங்கள் உண்டு.  


பழம்பொருமை பேசிப் சுகம் கண்ட பழக்கத்தில் அதை எல்லாவற்றுக்கும் ஏற்றிப் பார்க்கும் நமச்சல்தான் இப்போது நாய்களை பதம் பார்த்துக்கொண்டு இருக்கிறது. போக இது ஒரு மார்க்கெட் valve வை கூட்டித் தருகிறது என்பதிலும் மாற்றுக்கருத்துகள் இல்லை.  மரபு என்றால் அதை மானத்தமிழன் மீட்டே ஆகவேண்டும் என்ற கட்டாயம் வேறு இருக்கிறது.




மேலே சொன்ன தகவல்களைச் சொல்ல குறைந்த பட்சம் அடிப்படை சிற்ப அறிமுகமும் நாய்கள் குறித்த anatomy / nomenclature தெரியவேண்டும் அல்லவா?  ரெண்டும் சேர்த்தால் தானே நாம் ஒரு அளவுக்கேனும் ஒப்பிட முடியும் என்ற கேள்விக்கு எல்லாம் இங்கு இடமே கிடையாது. நம்மவர்கள் தான் வஞ்சிக்கப்பட்ட, மறக்கபட்ட வரலாறு என்று ஒரு வரியைப் போட்டால் போதும் அப்படியே நம்பிவிடும் அளவுக்கு வெள்ளை உள்ளம் கொண்டவர்கள் ஆயிற்றே !  அதைக் கலையாமல் ஒருநாளும் அடுத்த அடிக்கு நாம் நகர முடியாது .


 வரலாற்றாளர் ராமச்சந்திர குஹா, தொகுத்த மா. கிருஷ்ணனின் தேர்ந்து எடுக்கப்பட்ட கட்டுரைகளை உள்ளடக்கிய “Nature’s spokesman” புத்தகத்தில் கோவில் சிற்பங்களில் உள்ள விலங்குகள் குறித்து சில நல்ல கட்டுரைகள் இடம் பெற்று இருக்கும். அது இதுதான் இது அதுதான் என்று அர்த்தம் பொருத்தம் இல்லாமல் வாதிடுபவர்கள் குறைந்த பட்சம் அக்கட்டுரைகளைப் படித்து அந்த முறைமையையாவது அறிய முயற்சிக்கலாம்.


சரி கூர் முக சிப்பிப்பாறை / கன்னி வேட்டை நாய்களை பற்றி பேசிக்கொண்டு இருக்கும் போது பெயரளவில் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடிய.. சிக்கல் தரக்கூடிய அன்றைய பருவெட்டு சிப்பிப்பாறை சாம்ப - இன்றைய மண்டை நாய்களைப் பற்றி சொல்ல என்ன காரணம் என்கிறீர்களா?  கட்டாயம் காரணம் உண்டு வெறும் பெயர் ஒற்றுமை  என்பதைத் தாண்டி வேறு சில முக்கியமான காரணங்கள் உண்டு. பார்க்கலாம்.