மழைக்காலம் என்றாலே குழந்தைகளுக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். அந்த நேரத்தில் குழந்தைகளைச் சமாளிப்பது என்பது பெற்றோர்களுக்கு மிகுந்த சிரமமாகத் தான் இருக்கும். அதிலும் தமிழகத்தைப்பொறுத்தவரை கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக மழைக் கொட்டித்தீர்க்கிறது. குறிப்பாக சென்னையில் பல வீடுகளில் தண்ணீரில் மூழ்கியுள்ளது. எனவே இந்த சூழலில் குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்கள் மிகுந்த கவனத்துடன் மட்டும் இருந்தால் போதும், எந்தவித அச்சமும் கொள்ளத்தேவையில்லை என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.





மழைக்காலத்தில் குழந்தைகளை பராமரிக்கும் முறை:


மழைக்காலங்களில் பிறந்த குழந்தைகள் முதல் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளைப்பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.


மழை மற்றும் குளிர்க்காற்று படாதவகையில் குழந்தையின் உடலையும், காதுகளையும் கம்பளி அல்லது போர்வையால் சுற்றி மூடிக்கொள்ள வேண்டும். இரவில் தூங்கும் போது ஸ்வெட்டர் போன்றவற்றைக் குழந்தைகளுக்கு அணிந்துக்கொள்ள வேண்டும்.


மேலும் வழக்கமாக சில  குழந்தைகள் படுக்கும் படுக்கையில் சிறுநீர் கழிப்பது என்பது இயல்பான ஒன்று. எனவே மழைக்காலங்களில் அவ்வாறு அடிக்கடி மேற்கொள்ளும் போது உடனே குழந்தைகளின் துணிகளை மாற்றுவதோடு ஈரப்பதம் மிகுந்த இடங்களில் தூங்க வைக்ககூடாது.


மழைக்காலங்களில் குழந்தைகளுக்கான உணவுகள்:


மழைக்காலத்தில் ஏற்படும் நோய்களைத்தவிர்க்க  நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக குழந்தைகளுக்கு எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவுகளை உட்கொள்ள வேண்டும்.


பிரிட்ஜில் வைக்கப்பட்ட உணவுகளை உட்கொள்ளவதைத்தவிர்த்துக்கொள்ள வேண்டும். மேலும் பாலூட்டும் தாய்மார்களாக நீங்கள் இருந்தால் முதலில் உங்களுக்கு சளி தொல்லை ஏற்படாதவாறு பார்த்துக்கொள்வதோடு நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்தும் உணவுகளை உட்கொள்ள வேண்டும்.


 மழைக்காலங்களில் பொதுவாக ஏற்படும் சளி, தும்மல் மற்றும் இருமல் போன்றவற்றைத் தவிர்க்கும் விதமாக பாலில் மஞ்சள், மிளகு அல்லது பனங்கற்கண்டு கலந்து சாப்பிடலாம்.





துளசி, தூதுவளை, ஆடாதொடா கலந்த கசாயம், சுக்கு மல்லி, போன்றவற்றைக்குடிப்பதற்கு பழக்கப்படுத்த வேண்டும். பிறந்த குழந்தைகள் அல்லது இரண்டரை வயதுடைய குழந்தைகள் இந்த கசாயத்தைக்குடிக்காத சமயத்தில் பாலூட்டும் தாய்மார்கள் தினமும் எடுத்துக்கொள்வது நல்லது. இதோடு அதிக இருமல் குழந்தைகளுக்கு ஏற்படும் போது தேங்காய் எண்ணெய்யை மிதமாக சூடாக்கி அதில் சூடத்தைப்போட்டு  குழந்தையின் முதுகு, மார்பு பகுதியில் தேய்க்கும் பொழுது சரியாகும் என்று கூறப்படுகிறது. பல கிராமங்களில் குழந்தைகள் பராமரிப்பிற்கான பாட்டி வைத்தியமாக இது பார்க்கப்படுகிறது.


இதோடு அதீத காய்ச்சல் மற்றும் சளி ஏற்படும் போது உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.


மழைக்காலங்களில் பாதுகாப்பு முறைகள்:


மழை தொடர்ந்து பெய்து வரும் சமயங்களில் வீட்டிற்கு வெளியே தண்ணீர் அதிகளவில் தேங்கி நிற்கும். இதனால் கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகி குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் வரை அனைவரும் கொசுக்கடியினால் பாதிக்கப்படுவார்கள். எனவே கொசுவலை, கொசு விரட்டி போன்றவற்றைப்பயன்படுத்த வேண்டும். எனவே நமது சுற்றுப்புறங்களில் நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.





மேலும் டயபர் உபயோகிக்கும் குழந்தைகளாக இருந்தால் அதனை அடிக்கடி அடிக்கடி மாற்றிக்கொள்ள வேண்டும். இதோடு  குளிரிலிருந்து தாங்கக்கூடிய பருத்தி ஆடைகள், கம்பளி ஆடைகள் போன்றவற்றை உபயோகிக்க வேண்டும்.


மழைக்காலங்களில் குழந்தைகளை பொது இடங்களுக்கு அழைத்துச் செல்வதைத்தவிர்க்க வேண்டும். மேலும் குழந்தைகள் இருக்கும் வீட்டில் யாருக்காவது உடல்நலக்குறைவு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரைஅணுகி சிகிச்சைப்பெற்றுக்கொள்ள வேண்டும்.