பச்சை பயறு தினம் உணவில் எடுத்து கொள்வதால், சைவ உணவு உண்பவர்களுக்கு தேவையான முழு புரத சத்தும் இதில் இருந்து கிடைக்கும். பச்சை பயறு ஊறவைத்து முளைகட்டி சாப்பிடலாம், பச்சை பயறு வேக வைத்து அதில், சர்க்கரை, தேங்காய் சேர்த்து சாப்பிடலாம். பச்சை பயறு வேக வைத்து அதில் காய்கள் சேர்த்து சாப்பிடலாம். பச்சை பயறு கிரேவி செய்து சப்பாத்தி, நாண் ஆகியவற்றிற்கு சிறந்த சைடிஷ் ஆக இருக்கும். பச்சை பயறு செய்வதற்கு பல ரெசிபிகள் இருந்தாலும், ஒரு புது ரெசிபி இதோ, பாசி பயறு பக்கோடா.
பாசிப்பயறு பக்கோடா செய்ய தேவையான பொருள்கள்
பாசி பயறு - 1 கப்
வெங்காய தாள் - 1 கப்
இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
கொத்தமல்லி இலைகள் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லி விதைகள் - 1 டீஸ்பூன்
பெருங்காய தூள் - 1 சிட்டிகை
செய்முறை -
- பாசி பயறை இரண்டாக உடைத்து கொண்டு, தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.
- நன்றாக ஊறிய பின் மிக்ஸியில் பாசிப்பயறு, பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது அனைத்தையும் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.
- அரைத்து தனியாக ஒரு பாத்திரத்தில் வைத்து கொள்ள வேண்டும். அரைத்த மாவுடன், வெங்காயம், கொத்தமல்லி இலைகள், பெருங்காயம், கொத்தமல்லி விதைகள், பச்சை மிளகாய், மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு, கொஞ்சம் எண்ணெய் அனைத்தையும் ஒன்றாக கலந்து கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி , காய்ந்த பின் பிசைந்து வைத்த பாசிப்பயறு மாவை சிறிய சிறிய உருண்டைகளாக எண்ணையில்போட்டு பொன்னிறமாக வெந்த பிறகு ஒரு தட்டில் பரிமாறவும்.
நீங்கள் எப்போதும் சாப்பிடும் பஜ்ஜி, போண்டாவிற்கு பதில் ஊட்டச்சத்து மிக்க வித்தியான பக்கோடா தயார். மழை காலத்தில் சூடாக இதை செய்து சாப்பிடலாம்.
பாசிப்பயறு புரத சத்து நிறைந்து இருப்பதால், இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் எடுத்து கொள்ளலாம். டயட் எடுத்து கொள்பவர்கள் கூட இதை ஹெல்த்தியான ஸ்னாக்ஸ் செய்து சாப்பிடலாம். குறைவான கலோரிகள் கொண்ட, அதிக ஊட்டச்சத்து மிக்க ஸ்னாக்ஸ். மாலை வேளையில், டீ , காபியுடன் சூடாக செய்து சாப்பிடலாம்.