கோடைக்காலம் துவங்க போகுது. அதற்கு முன்னதாக நாம் தெரிந்துக்கொள்ள வேண்டிய சில விஷயங்கள் இருக்குது. கோடைக்காலத்தில்தான் பல்வேறு சரும பிரச்சனைகளும் , உடல்நல பிரச்சனைகளும் அதிகமாகும். வெயிலில் இருந்து கிடைக்கும் வைட்டமின் டி உடலுக்கு தேவையான ஒன்றுதான் என்றாலும் கூட “அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதானே “ . அந்த வகையில் கோடைக்காலத்தில் உங்கள் வாழ்க்கை முறையில் செய்ய வேண்டிய சில மாற்றங்களை இங்கே தொகுத்துள்ளோம்.
உணவு :
எடுத்துக்கொள்ளும் உணவு குறைவாகவும் , அதே நேரத்தில் அதிக சக்தியை கொடுக்க கூடிய ஆரோக்கியமான உணவாகவும் இருக்க வேண்டும். அதிக அளவு கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கொழுப்புகள் கொண்ட உணவுகள் மேலும் உடல் வெப்பநிலையை அதிகரிப்பதாக இருக்கு. எனவே தர்பூசணி, ஆரஞ்ச் போன்ற நீர் சத்து அதிகமாக இருக்கும் பழங்களை உங்கள் டயட்டில் இணைத்துக்கொள்ளுங்கள்.
கண்கள் பாதுகாப்பு :
சிலர் வெகு தூரம் பயணம் செய்பவராக இருக்கலாம் அல்லது சிலர் வெயிலிலேயே வேலை செய்பவராக இருக்கலாம் . அந்த மாதிரியான சமயங்களில் பாதுகாப்பு கண்ணாடிகளை அணியுங்கள். குறிப்பாக 99% புற ஊதா கதிர்களைத் தடுக்கும் சன்கிளாஸ் அணிவதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள்.
ஆல்கஹால் மற்றும் காஃபின் தவிர்க்கவும்
ஆல்கஹால் மற்றும் காஃபி ஆகிய இரண்டும் உங்களின் உடலை டி-ஹைட்ரேட் செய்துவிடக்கூடியது. எனவே கோடைக்காலத்தில் இவை இரண்டையும் தவிர்ப்பது நல்லது. முடியாவிட்டால் தினமும் பருகும் அளவையாவது குறைத்துக்கொள்ளுங்கள்.
தண்ணீர் அவசியம் :
தண்ணீர் அதிகமாக குடிப்பது எல்லா பருவ நிலை மாற்றங்களிலும் முக்கியமானது . என்றாலும் கூட கோடை காலங்களில் சற்று அதிகமாக தண்ணீர் குடிப்பது சிறந்தது. ஒவ்வொரு நாளும் குறைந்தது 2 முதல் 3 லிட்டர் தண்ணீரைக் குடிப்பதன் மூலம் உங்களை நன்கு நீரேற்றமாக வைத்திருங்கள். இல்லையென்றால் வெயில் உங்களை நீரிழப்பு செய்து ,சளி , காய்ச்சல் போன்றல் உடல் உபாதைகளை ஏற்படுத்திவிடும்.
வீட்டிற்குள் இருங்கள் :
கத்திரி வெயில் போன்ற உச்ச பட்ச வெயில் சமயங்களில் வீட்டிற்குள் இருப்பதே உத்தமம். அத்தியாவசிய வேலை தவிர வெளியேற வேண்டாம். அதிகாலை 11.00 மணிக்கு முன் அல்லது மாலை 5.00 மணிக்கு பிறகு வெளியே சென்றால் சூரிய வெப்பத்திலிருந்து தற்காத்துக்கொள்ளலாம்.
வெளி உணவுகளைத் தவிர்க்கவும்
அவசரகதியான வாழ்க்கை முறையில் பெரும்பாலானோர் வெளியில் சாப்பிடுவதையே வழக்கமாக கொண்டிருப்பார்கள். குறிப்பாக சில சாலையோர உணவுகளை சாப்பிடுவார்கள். அசுத்தமான உணவு மூலம் நோய்கள் பரவுவது ஒருபுறம் இருந்தாலும் கூட , வெயிலில் பாதுகாப்பாக வைக்கப்படாத, காய்ந்த உணவுகளால் வயிற்றில் நோய்களின் தாக்கம் அதிகரிக்கலாம் கவனம் தேவை .