முடக்கத்தான் கீரையை உணவில் சேர்த்துக்கொள்ளும்போது முழங்கால் சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரச்சனைகளையும் குணமாக்க உதவி புரிகிறது.
இன்றைக்கு இளம் வயது பெண்கள் மற்றும் ஆண்கள் என அனைவரும் சந்திக்கும் முக்கியப்பிரச்சனைகளில் ஒன்று தான் மூட்டுவலி. நம்முடைய உடலையேத் தாங்கி நிற்கும் எலும்புகளை வலுவாக வைக்காவிடில் இதுப்போன்ற பிரச்சனைகளை சந்திக்கத்தான் நேரிடும். குறிப்பாக இந்தியாவில் சுமார் 85 சதவீத பெண்கள் மூட்டுவலியினால் பாதிக்கப்பட்டுவரும் நிலையில், இதனை சரிசெய்வதற்காக பலர் மருத்துவமனையை நோக்கி செல்கின்றனர். இது எதுவும் தேவையில்லை. முடக்கத்தான் கீரையை நம்முடைய உணவில் சேர்த்துக்கொண்டு, இயற்கையான முறையிலேயே நமக்கு ஏற்படும் முழங்கால் வலியை சரி செய்ய முடியும் என்கின்றனர் இயற்கை மற்றும் ஆயுர்வேத மருத்துவர்கள்.
வேலிகள், பெரிய செடிகள், மரங்கள் மீது பற்றிப் படரும் கொடி வகைகளைச் சேர்ந்ததுதான் முடக்கத்தான் கீரை. கை கால் மூட்டுகளில் ஏற்படும் வீக்கம், வலி மற்றும் இதன் காரணமாக ஏற்படும் முடக்கத்தைக் குணப்படுத்தும் தன்மைக் கொண்டதாலேயே முடக்கறுத்தான் எனப் பெயர் வந்தது. இதற்கு முடக்கற்றான், முடக்கற்றான், முடர்குற்றான், மோதிக்கொட்டன் என பலர் பெயர்கள் இதற்கு உண்டு. பல்வேறு பெயர்களைக்கொண்டுள்ள இந்த முடக்கத்தானில் பல்வேறு மருத்துவக்குணங்களும் இதில் அடங்கியுள்ளன. அவை என்ன என்பது குறித்து இங்கே நாம் அறிந்துக்கொள்வோம்.
முடக்கத்தானில் உள்ள மருத்துவப்பலன்கள்:
முடக்கத்தான் கீரையை(Mudakathan Keerai) சமைத்து சாப்பிட்டால், கீல் பிடிப்பு, கீல் வாதம், கால்களை நீட்ட மற்றும் மடக்க முடியாமல் இருப்பதற்குத் தீர்வாக அமைகிறது.
முடக்கத்தான் இலைகளை நெய்யில் வதக்கி, இஞ்சி, கொத்தமல்லி, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து சட்னி அல்லது துவையல் செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் மூட்டு சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.
முடக்கத்தானை உணவில் சேர்த்து வந்தால், வாத நோய்கள் நீங்கி உடல் பலமடையும். பசியின்மை பிரச்சனைகளுக்குத் தீர்வாகும்.
முடக்கத்தான் கீரையைத் தனியாகவோ அதன் வேருடன் சேர்த்தோ நீரில் கலந்து குடித்துவந்தால், மூல நோய், நாள்பட்ட இருமல் நீங்கும் என கூறப்படுகிறது.
முடக்கத்தான் கீரையைப் பச்சையாக எடுத்து, ரசமாகச் செய்து சாதத்துடன் கலந்து சாப்பிடும் போது கை, கால் குடைச்சல் மற்றும் மூட்டுவலிக்கு தீர்வாக அமையும்.
முடக்கத்தான் கீரையை எண்ணெய்யில் வதக்கி மூட்டுகளில் ஏற்படும் கீல்வாதம், வீக்கம், வலி இருக்கும் இடத்தில் கட்டுப்போட்டு வந்தால் வலி, வீக்கம் குறைந்து நோய் குணமாகும்.
ஒருவேளை முடக்கத்தான் கீரையை அப்படியே சமைத்து சாப்பிடுவது பிடிக்கவில்லை என்றால், அதனை அரைத்து மாவில் கலந்துகொண்டு தோசையாகவே அடையாகவோ செய்து சாப்பிடலாம். குழந்தைகள் முதல் அனைவரும் விரும்பிச்சாப்பிடுவார்கள்.
முடக்கத்தான் இலையைப் பொடி செய்து, அதனுடன் நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும் சித்திர மூல வேர்ப்பட்டைப் பொடி, கரிய போளம் ஆகியவற்றைச் சேர்த்து மூன்று நாள்கள் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், மாதவிலக்கு காலத்தில் ஏற்படும் சூதக்கட்டு நீங்கும் முடக்கத்தான் இலைகளை வதக்கி அடிவயிற்றில் வைத்துக் கட்டினால், உதிரப்போக்கை ஒழுங்குபடுத்தும் என இயற்கை மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே பல்வேறு மருத்துவக்குணங்களைக்கொண்டுள்ள முடக்கத்தானை தினமும் சாப்பிட்டு வாருங்கள். இனி இளம் வயதிலேயே எவ்வித மூட்டு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பே இல்லை.