கேரளத்தின் பாரம்பரிய விழாவான திருவோண சத்யா விருந்தில், சிவப்பு அரிசி, அரிசி அப்பளம், ஷர்கரா வரட்டி, காலன், பருப்பு கறி உள்ளிட்ட 26 வகையான உணவுப்பொருள்கள் இடம் பெற்றிருக்கும்.


கேரளத்தில் கொண்டாடப்படும் முக்கிய விழாக்களில் ஒன்று தான் திருவோணம். கேரளத்து பாரம்பரியத்துடன் 10 நாட்கள் மக்கள் வெகுவிமர்சியாகக் கொண்டாடுவார்கள். திருவோணம் வந்தாலே கேரளத்து பெண்கள் அம்மாநிலத்திற்கே உரிய கசவு புடவையினையும், ஆண்கள் வேஷ்டி சட்டையுடன் பராம்பரிய முறையில் கொண்டாடுவார்கள். இதோடு இத்திருநாளில் மகாபலி மன்னனை வரவேற்கும் விதமாக கேரளாவின் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் மலர்களால் ஆன அத்தப்பூ கோலம் இடப்பட்டிருக்கும். இந்தாண்டு திருவோணம் ஆகஸ்ட் 12 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 23 ஆம் தேதி டிஜிட்டல் முறையில்  கொண்டாடப்படும் என அரசு அறிவித்துள்ளது. எத்தனை தான் மலர்களால் ஆன கோலங்கள் இடப்பட்டு வழிபாடுகள் நடத்தினாலும் இவ்விழாவிற்கே உரித்தான ஒணம் சத்யா விருந்து இல்லாமல் விழா நிறைவு பெறாது என்று தான் கூற வேண்டும்.





பராம்பரிய முறைப்படி நடைபெறும் இந்த திருவோணத்தில் ஓணம் சத்யா விருந்தும் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நாளில் உடலுக்கு ஆரோக்கியத்தினைத் தரக்கூடிய பராம்பரியமான  26 க்கும் மேற்பட்ட உணவு வகைகளை சமைத்து வாழை இலையில் சாப்பிடுவது வழக்கம். இத்தகைய மாபெரும் விருந்தில் கார்போஹைட்ரேட், புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த தயாரிப்புகள் அடங்கிய ஏராளமான உணவுகள் பரிமாறப்படும். சிவப்பு அரிசியிலிருந்து , எலிசேரி, புல்லிசரி மற்றும் ருசியான பாயாச வகைகளுடன் மனம் மற்றும் வயிறு நிறைவுடன் இந்த விருந்து அமையப்பெறும். எனவே இந்நேரத்தில் இத்தகைய சிறப்பு வாய்ந்த ஓணம் சத்யா விருந்தில் என்னென்ன உணவு வகைகள் இடம் பெற்றிருக்கும் மற்றும் எவ்வாறு செய்யப்படுகிறது? என்று நாமும் தெரிந்துக்கொள்வோம்.


 அப்பளம்: ஓணம் சத்யா விருந்தில் மற்ற எந்தவிதமான அப்பளங்களும் இல்லாமல் அரிசி மாவில் இருந்து தயாரிக்கப்படும் அப்பளம் தான் இடம் பெறும். இவை இல்லாமல் இந்த விருந்து நிறைவு பெறாது என்று தான் கூற வேண்டும்.


அப்பேரி: இந்த விருந்தில் அனைவருக்கும் விருப்பமான வாழைக்காய் சிப்ஸ் வழங்கப்படும். மற்ற 25 உணவுகளுக்கு முன்னதாக விருந்தின் போது கொடுக்கப்படுகிறது.


 ஷர்கரா வரட்டி: வெல்லம், இஞ்சி, ஏலக்காய் மற்றும் வாழைக்காய் கொண்டு தயாரிக்கப்படும் உணவுப்பொருளாகும். இதில் வெல்லம் அதிகம் இருப்பதால் உடலில் ஹூமோகுளோபின் அளவினை மேம்படுத்த உதவுகிறது. இனிப்பினை பலருக்கு சாப்பிட விரும்ப மாட்டார்கள். ஆனால் இந்த ரெசிபி நிச்சயம் அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாக இருக்கும்.


பருப்பு கறி:  பருப்பு, மஞ்சள் மற்றும் தேங்காயால் தயாரிக்கப்படும் இந்த உணவு மிகவும் எளிமையாக சமைக்கப்படுகிறது.


காலன்: சேனைக்கிழங்கு அல்லது வாழைக்காய், தேங்காய், தேங்காய், மோர், மஞ்சள் மற்றும் மிளகாய் ஆகியவற்றால் தயாரிக்கப்படும் உணவுப்பொருளாகும்.





இதேப்போன்று ஓணம் சத்யா விருந்தில், இஞ்சி கறி, மாங்காய் கறி, நாரங்கா கறி, பச்சடி, அவியல்,  சாம்பார், கிச்சடி, ரசம், கூட்டுக்கறி, நெய், இஞ்சி தயிர்,பூவன் பழம் போன்ற விதவிதமான உணவு வகைகள் இடம் பெற்று இந்த திருவோணத்தினை சிறப்பிக்கும். இந்நாளில் சத்தான இதுப்போன்ற உணவு வகைகளையெல்லாம் வாழை இலையில் பரிமாறி தரையில் சாப்பிடும் பழக்கத்தினைக் கொண்டுள்ளனர்.