இயல்பாகவே பெண்கள் தங்களது சருமங்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பார்களோ அதே முக்கியத்துவத்தை கூந்தலுக்கும் கொடுப்பார்கள். அதோடு கூந்தல் கருமையாக இருக்க வேண்டும். அடர்த்தியாக மென்மையாக இருக்க வேண்டும், நீளமாக வளர வேண்டும் என்ற இயல்பான ஆசை பெண்களுக்கு இருக்கத்தான் செய்யும். இதற்கு கூந்தல் பராமரிப்பு என்பது மிகவும் முக்கியம். இளம் வயதிலிருந்து கூந்தலை பராமரித்து வரும் சிலர் பின்னர் வேலைப்பளு காரணமாக பராமரிக்க தவறி விடுகின்றனர். இதனால் முடி கொட்டுதல், பொடுகு பிரச்சினை, நரை முடி என பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கின்றனர்.  இதனை இயற்கை முறையில் சரிசெய்ய பல வழிமுறைகள் உள்ளது.  கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை வாரம் ஒருமுறை பின்பற்றி பாருங்க நல்ல  பலன்களை பெறலாம். 


பொடுகு பிரச்சினை:


1. நீண்ட  நாட்களாக பொடுகு இருந்தால் தேங்காய் எணணெயைச் சூடு செய்து, அதில் கற்பூரத்தை நொறுக்கிப் போட்டு புகையவிட்டு சூடு ஆறும் முன்பு அதனை ஒரு பஞ்சால் தொட்டுத் தலையில் மயிர் கால்களில் படும்படி தடவ நாள்பட்ட பொடுகுத் தொல்லை நீங்கும். முடி உதிர்வதும் நிற்கும்.


2. வால் மிளகை ஊற வைத்து பால்விட்டு அரைத்து தலையில் தடவி ஊறிய பின் குளித்தால் பொடுகு தொல்லை இருக்காது.


3. இரண்டு டீ ஸ்பூன் வெங்காய ஜூஸூடன் 3-4 டீ ஸ்பூன் லெமன் ஜூஸ் சேர்த்து கலந்து தலை ஸ்கால்ப்பில் தடவி பின் விரல் நுனியால் நன்றாக 5 நிமிடங்கள் வரை மசாஜ் செய்ய வேண்டும். அதன் பிறகு 15 நிமிடங்கள் அப்படியே விட்டு விட்டு  வெதுவெதுப்பான நீரில் கழுவினால் பொடுகுத் தொல்லை நீங்கி ஆரோக்கியமான கூந்தலுடன் அழகான கூந்தலும் கிடைக்கும். இதனை வாரம் இருமுறை செய்யலாம்.


4. ஒரு கப் மரிக்கொழுந்துடன், அரை கப் வெந்தயக்கீரையை அரைத்து தலைக்கு பேக் போட்டு 10 நிமிடங்கள் கழித்து  தலையை நன்கு அலசினால் பொடுகு மறைந்து விடும்.


5. நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் இலுப்பை புண்ணாக்கை வாங்கி பொடித்து நீரில் நன்றாக கலக்கி தலையில் தடவி சிறிது நேரம் கழித்து குளிப்பதால் பொடுகு தொல்லை சரியாகும்.


முடி உதிர்வது உடனடியாக நிற்க:


1. கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது உடனடியாக நின்று விடும்.


2. மருதாணி இலை முடிக்கு நல்ல சத்துக்களைக் கொடுக்கும். இதனை கடுகு எண்ணெயில் போட்டு கொதிக்க விட்டு, பின் அந்த எண்ணெயை குளிர வைத்து, தினமும் தலைக்கு தடவி வந்தால் முடி உதிர்வது உடனே நின்றுவிடும்.


3. வெயிலில் அலைவதனால் தலைமுடி உதிர்வதை தடுக்க நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து தலைக்கு தேய்த்து வர முடி உதிர்வது தடுக்கப்படும்.


4. கசகசாவை பாலில் ஊற வைத்து அரைத்து அத்துடன் பாசிபருப்பு மாவைக் கலந்து தேய்த்து வர முடி உதிர்தல் நிற்கும்.


5. கனிந்த வாழைப்பழம் ஒன்றை மிக்ஸியில் அரைக்க, அடர்த்தி குறைந்து நீர்த்துவிடும். அதனுடன் இரண்டு முதல் மூன்று டீ ஸ்பூன் நல்லெண்ணெய் அல்லது ஆலிவ் ஆயில், ஒரு எலுமிச்சம்பழத்தைப் பிழிந்து எடுத்த சாறு, 2 டீஸ்பூன் வெந்தய பவுடர், இரண்டு டீஸ்பூன் புங்கங்காய் பவுடர் கலந்து தலையில் ‘பேக்’ போட்டு பத்து நிமிடங்களுக்குப் பின் நன்றாக அலசினால் ஓரிரு வாரத்தில் முடி உதிர்வது முற்றிலும் நீங்கி நுனி பிளவும் நீங்கி கூந்தல் பளபளவென மின்னும்.


6. தலைமுடியின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் பெரிதும் துணை நிற்கும் விட்டமின்கள் மற்றும் மினரல்ஸ்கள் நிறைந்தது அத்திப்பழம். தினமும் இரண்டு முதல் மூன்று அத்திப்பழங்களை சாப்பிட்டு வர முடி உதிர்தலை தவிர்க்க முடியும்.


7. சிறிது உப்பை ஷாம்புவுடன் கலந்து பயன்படுத்திப் பாருங்கள். முடி வேகமாய் வளர்வது தூண்டப்படும். முடி உதிர்வு கட்டுப்படுத்துகிறது.


8. தேங்காய் பாலைத் தலையில் அரை மணி நேரம் ஊற வைத்துக் குளித்தால் முடி உதிர்வது நிற்கும்.


9. தேங்காய் எண்ணெய்யை எலுமிச்சை சாற்றில் கலந்து, கூந்தலுக்கு தடவி குளித்து வந்தால், கூந்தல் உதிர்வதை தடுக்கலாம். மேலும் கூந்தலும் நன்கு வளரும். 


10. கடுகு 100 கிராம், சீயக்காய் ஒரு கிலோ, துவரை 100 கிராம், வெந்தயம் அரை கிலோ அரைத்துப் பொடி செய்து கொண்டு தலைக்கு பயன்படுத்தவும். தலை முடி ‌நிலை‌க்கு‌ம்.