முகப்பொலிவு யாருக்குத் தான் பிடிக்காது. அதுவும் வெளியில் சென்றாலே ஒரு இன்ச் தூசு ஒட்டிக் கொள்ளும் இந்தக் காலத்தில் சருமத்தைப் பராமரிப்பது மிகப்பெரிய சவால் தான். சந்தையில் பலவிதமான க்ரீம்களும், மாய்ஸ்சரைஸர்கள்,ஃபேஸ் மாஸ்க் என விதவிதமாக விற்றாலும் கூட எளிமையாக இயற்கையாக ஒரு ஃபேஸ் மாஸ்க் இருந்தால் நன்றாக இருக்கும் என்று விரும்புபவர்களுக்காகத் தான் இந்த டிப்ஸ்.


பளபளக்கும் சருமம்:


கேரட்டில் வைட்டமின் சி, வைட்டமின் கே உள்ளது. இதில் நார்ச்சத்து நிறைவாக உள்ளது. அதனால் கேரட் சருமத்திற்கு புதுப் பொலிவைத்தரும். கேரட் ஜூஸில் கொஞ்சம் தயிர், முட்டை சேர்த்து ஒரு மாஸ்க் போட்டால் முகம் புதுப் பொலிவு பெறும்.


எண்ணெய் சருமத்திற்கு பைபை


சிலருது சருமம் எண்ணெய் பிசுக்கு நிறைந்ததாக இருக்கும். அவர்கள் இந்த கேரட் மாஸ்க்கை நிச்சயமாக பயன்படுத்த வேண்டும். கேரட்டில் உள்ள வைட்டமின் ஏ சருமத்தை ஆரோக்கியமாக வைப்பதோடு அதிலிருந்து அதீத எண்ணெய்யை வெளியேற்றும். சருமத்திற்கு ஒரு புதிய ஒலியை பாய்ச்சும். உங்களின் சருமத்தின் நிறத்தை பளபளக்கச் செய்யும். சருமத்தில் சில நுண்ணுயிரிகள் வளர்வதைத் தடுக்கும்.


வறண்ட சருமத்திற்கும் அருமையான தீர்வு


எண்ணெய் பிசுக்கு மிகுந்த சருமத்திற்கு மட்டுமல்ல வறண்ட சருமத்திற்கும் கூட இது அருமையான தீர்வைத் தரும். கேரட்டில் பொட்டாசியம் உள்ளது.அது சருமத்திற்குள் ஊடுருவி வறட்சியைப் போக்கும். இது சருமத்தின் உள்ளே இருந்து ஈரப்பதத்தை மீட்டெடுக்கும். அரை கேரட்டை துருவி அரைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு ஸ்பூன் தேன் சேர்க்கவும். பின்னர் அதை முகத்தில் போட்டுக் கொள்ளவும். அதை கால் மணி நேரம் முகத்தில் ஊறவைத்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.
 
இயற்கையான சன் ஸ்க்ரீன்


சூரியனில் இருந்து வரும் அல்ட்ரா வயலட் கதிர்கள் அவ்வப்போது நம் சருமத்தை பதம் பார்க்கும். சன் ஸ்பாட்ஸ், பிக்மன்டேஷன் போன்ற பாதிப்புகளை நீக்க வல்லது. கேரட்டனாய்ட்ஸ், பீட்டா காரட்டீன் இந்த பாதிப்புகளில் இருந்து சருமத்தை பாதுகாக்கும். ஒரு ஸ்ப்ரே பாட்டலில் கேரட் ஜூஸும் ரோஸ் வாட்டரும் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் அதனை உங்கள் முகத்தில் தெளித்துக் கொள்ளுங்கள்.  


வயதான தோற்றத்தை தடுக்கும்


சருமத்திற்கு சீக்கிரம் வயதான தோற்றம் ஏற்படுவதற்கு இன்றைய காலகட்டத்தில் சுற்றுச்சூழல் மாசு மிகப்பெரிய காரணமாக இருக்கிறது. இந்நிலையில் கேரட் ஜூஸ் சருமத்திற்கு நல்ல பொலிவு தரும். 


கடைகளில் கிடைக்கும் க்ரீம்களையே எப்போதும் பயன்படுத்துவதை விட அவ்வப்போது இதுபோன்ற இயற்கையான பொருட்களை அழகுக்கு பயன்படுத்துவது சருமத்தை பாதுகாக்கும். பர்ஸையும் பதம் பார்க்காது.