தலைவலி ஏற்பட்டால் மருத்துவமனைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்தே குணமாக்க நினைக்கும் அனைவருக்கும் இஞ்சி டீ தான் முதலில் நினைவுக்கு வரும். அந்தளவிற்கு மக்களின் வலி நிவாரணியாகவும் சிறந்த மருத்துவக் குணம் வாய்ந்ததாகவும் அமைந்துள்ளது இஞ்சி.
இந்தியர்களின் சமையல்களில் நிச்சயம் இஞ்சி இல்லாமல் இருக்கவே முடியாது. உணவுப்பொருட்களில் சேர்க்கும் பொழுது தனிச்சுவை தருவதால் சைவ உணவாக இருந்தாலும், அசைவ உணவாக இருந்தாலும் மக்கள் அதிகளவில் இஞ்சியினைப் பயன்படுத்துகின்றனர். இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் பி6, வைட்டமின் பி12 மற்றும் கால்சியம், பொட்டாசியம், சோடியம், இரும்புச்சத்து போன்றவை அடங்கியுள்ளதால் நல்ல மருத்துவக்குணமுடைய உணவுப்பொருளாகவும் இஞ்சி விளங்கி வருகிறது. எனவே இதனைத் தினமும் நம்முடைய உணவுப்பொருட்களில் சேர்க்கும் பொழுது, உடலில் இரத்த அழுத்தத்தினைச் சீராக வைக்க உதவுவதோடு, பல்வலி, ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளுக்கும் இஞ்சி சாறு அருமருந்தாக உள்ளது.
மேலும் இஞ்சி குமட்டல் மற்றும் வாந்தி வருவதைத் தடுக்கும் மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதோடு மட்டுமின்றி காலை எழுந்தவுடன் ஏற்படும் சோர்வினைப் போக்க வேண்டும் எனில், தினமும் இஞ்சிச் சாறினை பருகலாம். இதுபோன்ற மருத்துவக்குணம் நிறைந்ததாக இஞ்சி விளங்கி வரும் நிலையில் தான் மக்கள் அதிகளவில் இதனைப்பயன்படுத்துகின்றனர். குறிப்பாக கொரோனா காலக்கட்டத்தில் சளி, இருமல், தலைவலி போன்றவையிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள மக்கள் அதிகளவில் இஞ்சிச்சாறு கலந்த டீயினை பருகிவந்தனர். தினமும் பருகும் டீயில் இஞ்சி அல்லது சுக்கு தட்டி தண்ணீரில் கொதிக்க வைத்து பருகும் பொழுது நோய் எதிர்ப்பு சக்தியினையும் மக்கள் பெற்றனர்.
இதுப்போன்ற பல்வேறு மருத்துவக்குணங்களை கொண்ட இஞ்சியின் பயன்பாடு மக்களிடம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. குறிப்பாக திடீரென ஏற்படும் தலைவலியினை வீட்டில் இருந்தே குணமாக்குவதற்கு இஞ்சி டீ நல்ல தீர்வாக அமைகிறது. சில சமயங்களில் இஞ்சி டீயில் தேன் அல்லது எலும்பிச்சை கலந்து பருகும் பொழுது நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது. இந்நிலையில் இஞ்சி டீயினால் வேறு என்ன நன்மைகள் உள்ளது என்பதைப்பற்றியும் இங்கே அறிந்த கொள்வோம்.
இஞ்சியினைக் குறித்து நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகளின் அறிக்கையின் படி, இதில் பல்வேறு மருத்துவக்குணங்கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக இஞ்சியினைத் தவறாமல் ஒருவர் உட்கொள்கிறார் எனில், அவருக்கு உயர் இரத்த அழுத்தம் ஏற்படும் அபாயமும் குறைக்கப்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் கடந்த 2017 ஆம் ஆண்டும் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், இஞ்சி டீயினை பருகுவதற்கு விருப்பம் இல்லை என்றாலும், தினமும் ஏதாவது ஒரு வழியில் இஞ்சியினை உட்கொண்டால் இரத்த அழுத்த அபாயத்தினைக்குறைக்கும் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் வீட்டு வைத்தியத்தின் மூலம் தலைவலியினைக்குணப்படுத்த வேண்டும் என விரும்பினால், அதற்கு இஞ்சிச்சாறு நல்ல நிவாரணமாக இருப்பதோடு தலைவலியினைக் குறைக்க உதவுகிறது என ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது. இஞ்சி டீ செரிமானப் பிரச்சனைக்கும் தீர்வாக அமைகிறது. இதோடு உடலில் உள்ள கெட்டக்கொழுப்பின் அளவினை குறைக்கிறது. இதயத்தில் ஏற்படும் பிரச்சனைகளை தடுக்கவும் இஞ்சி டீ பயனுள்ளதாக உள்ளது.