பொதுவாக பெண்கள் எல்லா நாட்களிலுமே அழகாக இருக்கத்தான் விரும்புவார்கள். ஆனால் வெயில் காலங்களில் அடர் நிறம், சருமத்தில் எண்ணெய், பரு பிரச்சனைகள் வருகின்றன. எனவே இத்தகைய பிரச்சனைகளை தவிர்த்து அழகாக ஜொலிக்க வேண்டுமென பல சரும பராமரிப்புகளை மேற்கொள்வார்கள்.
தற்போது வெயில் காலம் தொடங்கி விட்டது. பலரும் தமது வீடுகளில், தங்களது முகத்தை பளபளப்பாகவும், பொலிவாகவும் மாற்ற இயற்கை மற்றும் செயற்கை முறையிலான அழகூட்டும் முயற்சியில் ஈடுபடுவார்கள்.
ஆகவே இந்த வெயில் காலத்தில் சிறப்பாகவும் ,குதூகலமாகவும் புத்துணர்ச்சியுடனும், உங்களை வைத்துக் கொள்ளவும், விழா கூட்டங்களில் உங்களை அழகாக காண்பிக்கவும் எளிய முறையிலான ,வீடுகளிலேயே செய்யக்கூடிய இயற்கை அழகு குறிப்புகளை பார்க்கலாம்.
குங்குமப்பூ மற்றும் பால்:
நான்கு தேக்கரண்டி குளிர்ந்த பாலில் 3 குங்குமப்பூக்களை போட்டு நன்கு ஊற வைக்க வேண்டும். பாலில் குங்குமப்பூவை அரை மணித்தியாலங்கள் வரை ஊற வைத்து கலந்து கொள்ள வேண்டும். பின்னர் இரண்டு அடுக்காக முகத்தில் பூசி மசாஜ் செய்ய வேண்டும். முதலில் முகம் முழுவதும் பூசி குறித்த கலவையை காய விட வேண்டும். அதன்பின்னர் இரண்டாவது முறையும் முகத்தில் குங்குமப்பூ கலவையை பூச வேண்டும். இந்த குங்குமப்பூ கலவையானது முகத்தில் குறைந்தது ஒரு மணி நேரமாவது இருக்க வேண்டும். பின்னர் குளிர்ந்த நீரால் நன்கு கழுவி சுத்தம் செய்ய வேண்டும். இதில் குங்குமப்பூ கலவையானது முகத்திற்கு நல்ல பொலிவையும் பளபளப்பையும் கொடுக்கும். பாலில் உள்ள லாக்டிக் அமிலம் தோலில் உள்ள இறந்த செல்களை அகற்றி சருமத்தை மிளிர வைக்கிறது.
சந்தனம் மற்றும் ரோஜா:
சிறிது சந்தனத்தை ரோஸ் வாட்டரில் நன்கு கலக்கி பேஸ்ட் செய்து கொள்ளவும், இதனை முகம் மற்றும் கழுத்தில் முழுவதுமாக தடவி ஒரு மணி நேரம் நன்கு காய விடவும். நன்கு காய்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவி சுத்தம் செய்யவும். இதில் உள்ள ரோஸ் வாட்டர் சருமத்தின் பி .எச் அளவை சமன் செய்ய உதவுகிறது. அதேபோல் சந்தனம் முகத்தில் நிற கட்டமைப்பில் பிரகாசத்தை ஏற்படுத்தும்.
தக்காளி மற்றும் கடலை மாவு:
அரை தக்காளி மற்றும் அதனுடன் மூன்று டீஸ்பூன் கடலைமாவை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். நன்கு கலந்த தக்காளி பேஸ்டை முகம் மற்றும் கழுத்தில் பூசி சுமார் இரண்டு அல்லது மூன்று மணி நேரம் வரை காய விட வேண்டும். பின்னர் நான்கு குளிர்ந்த நீரில் கழுவி சுத்தம் செய்ய வேண்டும். இயற்கையான அமிலங்கள் நிறைந்துள்ள இந்த தக்காளி மற்றும் கடலை மாவு ,சருமத்தை பளபளக்க வைக்கிறது .அதே போல் சருமத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்குகிறது.
பாதாம் தூள் மற்றும் கெட்டியான பால்:
4 அல்லது 5 பாதாமை மிருதுவாக தூள் செய்து கொள்ள வேண்டும். தோல்களை பதம் பார்க்காத அளவில் பாதாமை தூள் செய்ய வேண்டும் .இதனுடன் 2-3 டீஸ்பூன் கெட்டியான பாலை சேர்த்து நன்கு கலந்து பேஸ்ட் செய்து கொள்ளவும். இந்த கலவையை முகம் மற்றும் கழுத்தில் நன்கு தடவி இரண்டு மணி நேரம் வரை உலர விடவும். நன்கு காய்ந்த பின்னர் சற்று வெதுவெதுப்பான நீரில் முகத்தை நன்கு கழுவி சுத்தம் செய்ய வேண்டும். இந்த வைட்டமின் ஈ நிறைந்த ஃபேஸ் பேக்கானது சருமத்தை ஊட்டமளித்து ஈரப்பதமாக வைத்துக் கொள்ளும்.
பப்பாளி மற்றும் தேன்:
ஒரு கிண்ணத்தில் 4 டீஸ்பூன் பப்பாளி துண்டுகள் மற்றும் அதனுடன் 2 டீஸ்பூன் தேன் சேர்ந்து நன்கு கலந்து கொள்ளவும். முகத்தில் ஒட்டும் அளவிற்கு அதனை அளவாக பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். முகம் மற்றும் கழுத்தில் தடவி இரண்டு மணி நேரம் உலர விட வேண்டும். பின்னர் சற்று வெதுவெதுப்பான நீரில் கழுவி சுத்தம் செய்யவும். இந்த கலவையில் உள்ள தேன் சருமத்தை எப்போதும் ஈரப்பதமாகவே வைத்திருக்கும். அதேபோல் பப்பாளியில் உள்ள என்சைம்கள் சருமத்தை இயற்கையான முறையில் வெண்மையாக்குகிறது.