பலருக்கு இதற்கு முன்பு தோட்டம் வைக்கும் அனுபவம் இல்லாவிட்டால் கூட தாவரங்களுடன் வேலை செய்வதன் மூலம் மனநல நன்மைகளைப் பெறலாம் என்று புதிய ஆராய்ச்சி ஒன்று கூறுகிறது.


PLOS ONE என்கிற இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், புளோரிடா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தோட்டக்கலை நடவடிக்கைகளில் பங்கேற்பதன் மூலம் தோட்டக்கலை வகுப்புகளில் கலந்துகொள்ளும்  பெண்களின் மன அழுத்தம், பதட்டம் மற்றும் மனச்சோர்வு குறைவதாகக் கண்டறிந்துள்ளனர். ஆய்வில் பங்கேற்றவர்கள் எவருமே இதற்கு முன்பு செடி வளர்த்தவர்கள் இல்லை.


"ஏற்கனவே சில உடல்-மன பாதிப்பு இருந்தவர்கள் அல்லது சவால்கள் உள்ளவர்களின் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த தோட்டக்கலை உதவும் என்று கடந்த கால ஆய்வுகள் காட்டுகின்றன. ஆரோக்கியமானவர்கள் தோட்டக்கலை மூலம் மனநலத்தை மேம்படுத்த முடியும் என்பதை எங்கள் ஆய்வு காட்டுகிறது" என்று இதன் முதன்மை ஆய்வாளர் சார்லஸ் கை கூறினார்.




சுற்றுச்சூழல் தோட்டக்கலைத் துறை, யுஎஃப் காலேஜ் ஆஃப் மெடிசின், யுஎஃப் சென்டர் ஃபார் ஆர்ட்ஸ் இன் மெடிசின் மற்றும் யுஎஃப் வில்மோட் பொட்டானிக்கல் கார்டன்ஸ் ஆகியவை இணைந்து, இது தொடர்பான அனைத்து ஆய்வு மற்றும் தெரபி அமர்வுகளை நடத்தியது.


26 முதல் 49 வயதுக்குட்பட்ட 32 பெண்கள் இந்த ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டனர். அனைவரும் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தனர், இந்த பரிசோதனையில் நாள்பட்ட உடல் சுகாதார நிலை, ஒருவரின் புகையிலை பயன்பாடு மற்றும் போதைப்பொருள் பயன்பாடு அல்லது மனச்சோர்வுக்கான மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டதா என்பது போன்றவை முன்கூட்டியே பரிசோதிக்கப்பட்ட்டது. பங்கேற்பாளர்களில் பாதி பேர் தோட்டக்கலை பயிற்சிக்காக ஒதுக்கப்பட்டனர், மற்ற பாதி பேர் கலைப்பொருள் உருவாக்கும் அமர்வுகளுக்கு ஒதுக்கப்பட்டனர். இரு குழுக்களும் ஒரு வாரத்திற்கு இரண்டு முறை மொத்தம் எட்டு முறை சந்தித்தன. தோட்டக்கலை குழுவுடன் ஒப்பிடும் புள்ளியாக கலைக்குழு செயல்பட்டது.


"தோட்டக்கலை மற்றும் கலை நடவடிக்கைகள் இரண்டும் கற்றல், திட்டமிடல், படைப்பாற்றல் மற்றும் உடல் இயக்கம் ஆகியவற்றை உள்ளடக்கியது, மேலும் அவை இரண்டும் மருத்துவ முறைகளில் சிகிச்சையாகப் பயன்படுத்தப்படுகின்றன. விஞ்ஞான ரீதியாகப் பார்க்கும் போது வாசித்தல் அல்லது பந்து வீசுதலுடன் தோட்டக்கலையை ஒப்பிடுவதை விட கலை உருவாக்கத்துடன் ஒப்பிடுவதே சரியானதாக இருந்ததாக சார்லஸ் விளக்கினார்.


பங்கேற்பாளர்கள் கவலை, மனச்சோர்வு, மன அழுத்தம் மற்றும் மனநிலையை அளவிடும் தொடர்ச்சியான மதிப்பீடுகளை நிறைவு செய்தனர். தோட்டக்கலை மற்றும் கலை உருவாக்கும் குழுக்கள் காலப்போக்கில் மன ஆரோக்கியத்தில் இதுபோன்ற முன்னேற்றங்கள் ஏற்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர், இன்னும் சொல்லப்போனால் தோட்டக்கலை ஆர்வலர்கள் கலைப்பொருள் உற்பத்தி செய்தவர்களை விட சற்று குறைவான அழுத்தத்தையே சந்தித்தகாக ஆய்வாளர்கள் சொன்னார்கள்.


இது குறைந்த எண்ணிக்கையிலான நபர்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு என்றாலும் பெரிய அளவிலான நபர்களில் மேற்கொள்ளப்படும் சூழலில் அது ஆய்வுக்கு இன்னும் வலு சேர்ப்பதாக அமையும்.