மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள இயற்கை வனப்புமிக்க நீலகிரியில்  இரண்டாவது பெரிய மலை வாசஸ்தலமாக  குன்னூர்  இயற்கை அழகுடன் திகழ்கிறது . இனிமையான பொழுதுபோக்கு ஸ்தலமாக உள்ள குன்னூர் மிகவும் இதமான குளிருடன் ,மனதை வருடும் வகையில் இயற்கை வனப்பு சூழ விடுமுறையை அனுபவிக்கும் இடமாக அமைந்திருக்கிறது.


 சிம்ஸ் பூங்கா முதல் Hidden Valley, எனப்படும் மறைக்கப்பட்ட பள்ளத்தாக்கு, டால்ஃபினோஸ் என இயற்கை எழில் கொஞ்சும் அழகிய பகுதிகளை குன்னூரில் பார்வையிடலாம். அதிகமான சுற்றுலா பயணிகள் தமது விடுமுறையை அனுபவிக்க மலை பிரதேசங்களையும் , அதன் அழகையும் ரசிக்க அவற்றை நோக்கி படை எடுப்பது வழக்கம்.


கடல் மட்டத்திலிருந்து 6000 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள குன்னூர், அழகிய புல் தரைகள், ரம்யமான மலைத் தொடர்கள்,  புத்துணர்ச்சி அளிக்கும் வானிலை போன்றவற்றால் சூழ்ந்துள்ள இயற்கை வளர்ப்புமிக்க அழகிய பகுதியாகும். ஆகவே சுற்றுலா செல்ல விரும்புவோர் இயற்கை எழில் கொஞ்சும் சொர்க்கமாக இருக்கும் குன்னூரையும் சுற்றிப் பார்த்து மகிழ்ச்சி அடையலாம்.


 சிம்ஸ் பூங்கா:


குன்னூரிலுள்ள அழகிய தாவரவியல் பூங்கா தான் இந்த சிம்ஸ் பூங்கா. அழகிய மலைகளால் சூழப்பட்ட இந்த பூங்காவில், அடர்த்தியான மரங்கள், நீர்நிலைகள் மற்றும் தெளிவான நீல வானத்துடன் ரம்யமான இயற்கை காண்போரைக் கவர்ந்திழுக்கும்.
மிகவும் அரிய வகை தாவரங்கள் அழகிய விலங்கினங்களை நீங்கள் கண்டு ரசிக்கலாம்.


இது சுமார் நூற்றாண்டுகளுக்கு முன்னர் இயற்கை வளங்களால் சூழப்பட்ட இந்த தாவரவியல் பூங்காவானது 1874 ஆம் ஆண்டு ஜெ.டி.சிம்ஸ் மற்றும் மேஜர் முர்ரே ஆகியோர் இணைந்து நிறுவியதாக வரலாற்றுப் பதிவுகளில்  குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்த சிம்ஸ் பூங்காவில் உலகிலேயே காண முடியாத அரிய வகை மரங்கள் நிறைந்து இருப்பதாகவும், ஏராளமான பழத் தோட்டங்களும் இங்கே காணப்படுவதாக கூறப்படுகிறது. மே மாதத்தில் இந்த பூங்காவின் அழகை கண்டு ரசிக்கலாம் சொல்லப்படுகிறது.


இப்பூங்காவில் 86 தாவரக் குடும்பங்களை சார்ந்த 1200 வகையான தாவரங்கள் உள்ளன. மிக அரிதான மரங்கள் இப்பூங்காவில் காணப்படுகின்றன.


ருத்ராட்ச மரம், தாளிசபத்திரி, குயின்ஸ்லாந்து கரி, பைன், ஹாண்ட்சம் ,ஆர்னமெண்டல் மரம் போன்ற அரிய மதிப்பு மிக்க மரங்களும், அரயுகரியா, கருவாலி மரம் , மக்னோலியா , பீனிக்ஸ்,  பைன், மர எண்ணெய், பெர்ன்ஸ் மரம், கமீல்லா போன்ற வியத்தகு மரங்களும் இங்கு உள்ளன.


 இந்த பூங்காவில் ஒரு கண்ணாடி வீட்டு உள்ளது. இதில் வெவ்வேறு அலங்காரச் செடிகள் மற்றும் மலர்கள் உள்ளன. பூங்காவின் மற்றொரு பக்கத்தில் ரோஜா பூந்தோட்டம்  பராமரிக்கப்படுகிறது.


 துரோக் கோட்டை:


நீலகிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள இந்த துரோக் கோட்டை சாகசப் பயணிகளை கவர்ந்திழுக்கும் பகுதியாகும். இந்த பழமையான கோட்டையின் கட்டட அழகைக் காண மலை மீது ஏறி செல்ல வேண்டும். இந்தக் கோட்டையின் இடிபாடுகளிடையே பல திகிலூட்டும் கதைகள் புதைந்திருப்பதாக சொல்லப்படுகிறது. இங்கு காபி கொட்டையின் வாசனையும், அழகிய பறவை இனங்களும், மற்றும் சுற்றுத் திரியும் விலங்கினங்களும் அன்றைய பொழுதை இனிமையாக்கும்.
இந்த துரூக் கோட்டையின் மீது இருந்து பார்த்தால் கண்ணுக்குத் தெரியும் இடம் எல்லாம் ரம்யமாக இருக்கும்.


இதனால்தான் அந்தக் காலத்தில் இது திப்பு சுல்தானின் புறங்காவல் கோட்டையாக விளங்கியுள்ளது. இதன் அமைப்பு எதிரிகளை விரட்டி அடிக்கும் வகையில், பாதுகாப்பு அரணாக இருந்துள்ளது. இப்போது எஞ்சியுள்ளது ஒரு சிதிலமடைந்த சுவர் மட்டுமே. 


டால்பின் மூக்கு:


குன்னூரில் உள்ள மற்றொரு அழகிய சுற்றுலாத்தலம் தான் இந்த டால்பின் நோஸ். இங்குள்ள மலை வளைவுகளின் ஒரு பகுதி  டால்பின் வடிவில் இருப்பதால் இந்த இடம்  தனித்துவமான டால்ஃபின் நோஸ் என்ற பெயரை பெற்றது. இங்குள்ள பசுமையான காடுகள் மற்றும் தேயிலை தோட்டங்களின் அழகை கண்டு ரசிக்கலாம். இந்த இடம் அதிக உயரத்தில் அமைந்திருப்பதால், எப்போதும் மூடுபனியால் சூழப்பட்டிருக்கும். 


கடல் மட்டத்திலிருந்து சுமார் 1000 அடி உயரத்தில் அமைந்துள்ள ஒரு பெரிய பாறைதான் இந்த டால்பின் நோஸாகும். இங்கிருந்து சுற்றிலும் உள்ள வனப்புமிக்க இயற்கை காடுகளையும். நீர்வீழ்ச்சிகளையும் கண்டு களிக்கலாம்.


மறைக்கப்பட்ட(ஹிடன்) பள்ளத்தாக்கு:


புகைப்படக் கலைஞர்களின் புகலிடமான ஹிடன் பள்ளத்தாக்கு சுற்றுலாப் பயணிகளுக்கு சாகச பயணங்களை மேற்கொள்ள சிறந்த இடமாக இருக்கிறது. மலையேற்றம் முதல் ஹைகிங், ராக் க்ளைம்பிங் மற்றும் ரிவர் ராஃப்டிங் வரை, ஹிடன் பள்ளத்தாக்கில் ஈடுபடலாம். மிகவும் திகைப்பூட்டும் பயங்கரமான சாகசங்களை இந்த பள்ளத்தாக்கில் மேற்கொள்ளலாம். இங்கு பசுமையான வயல்களில் நடந்து சென்று அந்த இடத்தின் அழகை படம் பிடித்து மகிழலாம்.


பசுமையான மலைகளுக்கு நடுவில் டிரெக்கிங் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஏற்ற இடமாகும். ஆண்டு முழுவதும் சுற்றுலாப் பயணிகள் இந்த மலையேற்றத்தை அனுபவிக்கும் வசதிகளும் உள்ளது. 


இந்த இடங்கள் மட்டுமல்லாமல் மேலும் பசுமையான இடங்கள் குன்னூரை சுற்றியுள்ளன. மலை ரயில், கட்டாரி நீர்வீழ்ச்சி, லேம்ப்பாறை, ஹை ஃபீல்டு தேயிலைத் தோட்டம் போன்றவற்றையும் கண்டு ரசிக்கலாம்.