நண்பர்கள்.... இந்த வார்த்தைக்குள் பல பேரின் உணர்வுகள் அடங்கியிருக்கும். ஒவ்வொருவரும் இந்த வார்த்தையை கடக்காமல் வந்திருக்கவே முடியாது. ஏதோ ஒரு இடத்தில் நாம் ஒரு நண்பனை பெற்றிருக்கத்தான் செய்வோம். காலங்கள் கடந்து நாம் சொல்லலாம். எனக்கு நண்பனே கிடையாது. பிடிக்காது என்று.. ஆனால் நம் இக்கட்டான சூழ்நிலையில் நமக்கு உதவியவர் நம் நண்பனாகத்தான் இருக்க முடியும். அது மிகவும் சிறிய உதவியாக கூட இருக்கலாம். மற்றவர்கள் பார்வையில்... ஆனால் காலம் அறிந்து செய்த உதவி எப்படி சிறியதாக இருக்க முடியும்? காலத்தினாற் செய்த உதவி எப்போதும் பெரிதுதானே?
அதேபோல் பொத்தாம்பொதுவாக எல்லோரையும் நண்பன் என்ற பட்டியலில் அடைத்து விட முடியாது. நாம் செல்லும் இடமெல்லாம் நிறைய பேர் வருவார்கள். போவார்கள். அனைவரும் நண்பர்களாகிவிட முடியாது. பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், வேலை பார்க்கும் அலுவலகங்கள் என எல்லா இடத்திலும் நண்பர்களாக கிடைப்பார்கள். ஆனால் அவர்கள் எல்லாரும் நண்பர்களா? இல்லை...
நண்பன்னா என்னான்னு தெரியுமா என்ற தளபதி ரஜினி கேட்ட கேள்விக்கு உண்மையான பதில்.... உன்னை எதற்காகவும் ஜட்ஜ் பண்ணாத அந்த ஒருத்தன். உனக்காக எதுவும் செய்யக்கூடிய அந்த ஒருத்தன். உன்னை உன்னையாகவே ஏற்றுக்கொண்ட அந்த ஒருத்தன். உன்னுடைய எல்லாத்தையும் மனம்விட்டு பேச தகுதியான அந்த ஒருத்தன்.
இத்தனை ஒருத்தன்களையும் நீ எல்லாரிடமும் பெற்று விட முடியாது. இத்தனை ஒருத்தன்களை எந்த ஒருத்தனிடம் பெறுகிறாயோ அவன் தான் உன் நண்பன்.
சந்தானம் பாணியில் நண்பன் என்றாலே நல்லவன் கெட்டவன் கிடையாதுதான். ஆனால் உண்மையான நண்பன் என்பவன் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும். அது அவன் வாழ்க்கையை அழகாக்கும். ரஜினிகாந்த் சொல்வது போல், ஒருவருடைய வாழ்க்கையை தீர்மானிப்பது அவருடைய எண்ணங்கள். அந்த நல்ல எண்ணங்களுக்கு விதை போடுவது சேர்க்கை. நம்பகூட யார் சேர வேண்டும் என நாம் தீர்மானிப்பதுதான் நல்ல வாழ்க்கைக்கும் எண்ணத்துக்கும் செயலுக்கும் வழிவகுக்கும்.
நாம் எவ்வாறு ஒருவன் நம்மிடம் நல்ல நண்பனாக, உண்மையான நண்பனாக இருக்க வேண்டும் என நினைக்கிறோமோ... அதேபோல் நாமும் இருக்க வேண்டும் என இந்த நண்பர்கள் தினத்தில் உறுதி ஏற்போம். நண்பர்கள் தின வாழ்த்துக்கள் நண்பர்களே...
கீழே இருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்களை உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளுங்கள்...
”மனம் இருந்தால் வருவேன் என்றது காதல்.. பணம் இருந்தால் வருவேன் என்றது சொந்தம்.. எதுவும் வேண்டாம் நான் இருக்கிறேன் என்றது நட்பு”
“மரணமே வந்தாலும் உன்னை மறக்காத இதயம் வேண்டும். மீண்டும் ஜனனம் என்றால் அதில் நீயே என் நண்பனாக வேண்டும்”
”நட்பு என்பது காற்று போல; அது நம் மூச்சிருக்கும்வரை நம்மோடு கலந்திருக்கும்”
”நண்பர்கள் பழகிய காலம் கடந்து போகலாம்; ஆனால் பழகிய நினைவுகள் நித்தம் புதிதாய் மலர்கிறது மனதுக்குள்”
“ஆயிரம் கோடி நட்சத்திரம் விண்ணில் இருந்தாலும் இரவுக்கு அழகு நிலவுதான்; ஆயிரம் உறவுகள் இருந்தாலும் வாழ்க்கைக்கு அழகு நட்புதான்”
”நினைவில் வைத்து கனவில் காண்பது அல்ல நட்பு; மனதில் வைத்து மரணம் வரை புதைப்பது தான் நட்பு”
”உங்கள் தவறை நியாயப்படுத்தும் நண்பனை விட சுட்டிக்காட்டுபவனே சிறந்த நண்பன்”
”இவ்வுலகில் ரத்த பந்தம் இல்லாமல் நமக்காக துடிக்கும் ஒரே உறவு நண்பர்கள்தான்”