சிறியவர் முதல் பெரியவர் வரை  ஏற்படும் முக்கியமான வயிற்றுத் தொல்லை. அஜீரணக் கோளாறு. இப்போது கோடைக்காலம் வந்துவிட்டது. குளிர்காலத்தில் நம் செரிமான மண்டலத்தின் சக்தி எப்படி குறையுமோ, அதேபோல, வெப்பம் அதிகரிக்கும் கோடையிலும் அஜீரணம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும்.  கோடையில் அஜீரணக் கோளாரைத் தடுக்க எளிதான வழிகள் இருக்கின்றன. இதோ உங்களுக்காக.


நாம் சாப்பிடும் உணவு வாய், இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல் என பகுதி பகுதியாக செரிமானமாகிறது. செரிமானப் பாதையில் உற்பத்தியாகிற என்சைம்கள், ஹைட்ரோகுளோரிக் அமிலம், ஹார்மோன்கள் ஆகியவை உணவு செரிமானத்துக்கு உதவுகின்றன.




அஜீரணம் என்பது என்ன?


செரிமானப் பாதையில் உண்டாகும் குறைபாடுகளால்  இந்தச் செரிமான நீர் சரியாகச் சுரப்பதில்லை. அப்போது செரிமானம் தடைபடும். இதுதான் அஜீரணம்.


அஜீரணத்தின் பொதுவான அறிகுறிகள்:


உணவு சாப்பிட்ட பின் வயிற்றில் ஏற்படும் சுகமின்மை, நெஞ்செரிச்சல், குமட்டல், வாந்தி, வயிற்று உப்புசம், வயிற்றில் இரைச்சல். பசிக் குறைவு, வாய் வழியாகவும் ஆசனவாய் வழியாகவும் அடிக்கடி வாயு பிரிதல், பேதி அல்லது மலச்சிக்கல், வாயில் அதிகமாக உமிழ்நீர் சுரத்தல், வாய்நாற்றம் போன்றவை அஜீரணத்தின் அறிகுறிகள்.


அஜீரணம் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன?


அதிகக் காரம், புளிப்பு, மசாலா நிறைந்த உணவு வகைகளை அடிக்கடி சாப்பிட்டால் இரைப்பையின் சளிப் படலம் சிதைந்து, செரிமான நீர்கள் சுரப்பது தடைபடும். அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது, எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிகம் சாப்பிடுவது, நேரம் தவறி உண்பது, தூக்கமின்மை, ஓய்வின்மை, நாட்பட்ட பயணம், போதிய அளவு உடற்பயிற் சி செய்யாமல் இருப்பது போன்றவைகளால் அஜீரணம் ஏற்படும்.


அஜீரணம் தவிப்பது எப்படி?


சுத்தமாகவும் சுகாதாரமாகவும் தயாரிக்கப்பட்ட சமச்சீர் உணவு வகைகளை அளவோடும் நேரத்தோடும் நிதானத்தோடும் மனநிறைவோடும் உண்ணுங்கள். அதிகக் காரம், புளிப்பு, மசாலா நிறைந்த உணவு வகைகளைக் குறைத்துக்கொள்ளுங்கள். மேலும், தொடர்ந்து அஜீரணக் கோளாறு ஏற்பட்டால் மருத்துவரிடம் செல்லுங்கள்.


அஜீரணக் கோளாறுக்கு வீட்டு வைத்தியம்:


இஞ்சிச் சாறு:


நீங்கள் சாப்பிடும் உணவில் தவறாமல் இஞ்சி சேர்த்துக் கொள்ளலாம் அல்லது இஞ்சிச் சாறு அருந்தலாம். தண்ணீருடன் இஞ்சியை நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி அருந்தலாம். இஞ்சியில் ஆண்டி ஆக்சிடண்ட் இருப்பதால் அஜீரணத்தை குணப்படுத்த உதவும். இஞ்சியில் வலி மற்றும் அழற்சியை குணப்படுத்தும் தன்மை உள்ளது.


எலுமிச்சை:


எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம் இருக்கிறது. இது வயிற்றில் உள்ள கெட்ட அமிலத் தன்மையை நீக்க உதவி செய்கிறது. சாப்பிட்ட பிறகு எலுமிச்சை ஜூஸ் குடித்தால் வயிற்றெரிச்சல் மற்றும் வயிற்று வலி குறையும். இளங்சூடான நீரில் எலுமிச்சைச் சாறு மற்றும் தேன் கலந்து அருந்துவதாலும் அஜீரணக் கோளாறு நீங்கும்.


புதினா:


புதினா இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, வடிக்கடி குடிப்பதால் அஜீரணக் கோளாறு ஏற்படாமல் இருக்கும். சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன் இதைப் பருகலாம்.


பெருஞ்சீரகம்:


பெருஞ்சீரகத்தை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, ஆறவிட்டு அதை வடிகட்டி வைத்துக் கொண்டு, தாகம் எடுக்கும் நேரங்களில் குடிக்கலாம். இப்படி செய்வதால் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்கும். பெருச்சீரகத்தை சிறிதளவு எடுத்து அதை அப்படியே சாப்பிட்டாலும் நல்லது.


வெற்றிலை:


சாப்பிடவுடன் வெற்றிலைச் சாறு எடுத்து கொள்ளலாம். வெற்றிலையுடன் நான்கு மிளகு சேர்த்து மென்று தின்றால் அஜீரணம் சரியாகும். வெற்றிலையில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கின்றன.


ஓமம்:


அஜீரணக் கோளாறுக்கு ஓமம் மிகவும் சிறந்தது. ஒரு ஸ்பூன் அளவு ஓமத்தை எடுத்து, கையால் கசக்கி அதனை ஒரு டம்ளர் நீரில் கலந்து குடித்தால், அஜீரண கோளாறு நொடியில் பறந்துவிடும்.


கோடைக்காலத்தில்  மனதி வைத்து, நேரத்துக்கு ஆரோக்கியமுள்ள உணவுகளைச் சாப்பிட பழகிக்கொள்ளுகள்.


 


Gautam Gambhir About MS Dhoni : நம்பர் 3-ல் தோனி தான் கெத்து.. கோலியை சீண்டிய கம்பீர்!