இந்திய சமையலறைகளின் முக்கிய மசாலாப் பொருளாக விளங்கும் மஞ்சள் தூள்,  உணவுக்கு மஞ்சள் நிறத்தை வழங்கவும் கிரும்நாசினியாகவும் பொதுவாக நம் உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது. 


மஞ்சளில் கொட்டிக்கிடக்கும் ஆரோக்கியம் சார்ந்த நன்மைகள் ஏராளம். மஞ்சளில் உள்ள குர்குமின் (curcumin) எனும் கலவையே இதற்கு அதி முக்கியக் காரணம்.


இந்த மஞ்சள் நிற மஞ்சளை நாம் பரவலாக உணவில் உபயோகிக்கிறோம். ஆனால் வெள்ளை மஞ்சள் என ஒருவகை மஞ்சள் உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா?


பூலாங்கிழங்கு எனப்படும் இந்த வெள்ளை மஞ்சள், இந்தியாவை பூர்விகமாகக் கொண்டது.


அம்பா ஹல்தி எனப்படும் பூலாங்கிழங்கு


விஞ்ஞான ரீதியாக குர்குமா செடோரியா (curcuma zedoaria) என்று அழைக்கப்படும் பூலாங்கிழங்கு இஞ்சியின் தோற்றத்தை ஒத்தது. அரிய வகை மசாலாவான இந்த வெள்ளை மஞ்சள் கசப்பு சுவையைக் கொண்டதாகும்


இது பழுப்பு நிற தோலையும் பிரகாசமான ஆரஞ்சு நிறம் மற்றும் கடினமான உட்புறத்தையும் கொண்டுள்ளது. இது மஞ்சள் குடும்பத்தைச் சேர்ந்தது என்றாலும், பொதுவாக மாம்பழம் மற்றும் மஞ்சள் ஆகிய இரண்டின் மணத்தையும் இந்த வெள்ளை மஞ்சள் கொண்டுள்ளது. இதனாலேயே இந்தி பேசும் மாநிலங்களில் இந்த மஞ்சள்  ‘அம்பா ஹல்தி’ என அழைக்கப்படுகிறது.


பொதுவாக தூளாகவே அல்லது உலர்த்தப்பட்ட நிலையிலோ இது விற்பனை செய்யப்படும் பூலாங்கிழங்கு மஞ்சள், இஞ்சி இரண்டின் மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது கூடுதல் சிறப்பு!


எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது?


இந்திய சமையலறைகளில் பல மாநிலங்களில் ஊறுகாயாக பூலாங்கிழங்கு பயன்படுத்தப்படுகிறது. இந்தோனேசியாவில் உலர்ந்த மசாலாப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது, அங்கு சமையலில் குறிப்பாக கடல் உணவு வகை சமையலில் முக்கிய மசாலாவாக  பயன்படுத்தப்படுகிறது. 


 ஆரோக்கிய நன்மைகள்


டெல்லியைச் சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணர் லோகேந்திர தோமரின் கூற்றுப்படி, "பூலாங்கிழங்கு அரிதாகவே பயன்படுத்தப்படுகிறது,  மஞ்சள் மஞ்சளைப் போலவே ஆரோக்கியமாகதாகக் கருதப்படுகிறது. இது அழற்சி எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.  செரிமானம் மற்றும் சுவாசப் பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கிறது" எனத் தெரிவிக்கிறார்.


நம் உணவில் குறிப்பாக  செரிமான பிரச்சனைகளைத் தீர்க்க பூலாங்கிழங்கை பயன்படுத்தப்படலாம். குறிப்பாக இரைப்பை குடல் சார்ந்த பிரச்னைகள், வாய்வு, அஜீரணம் போன்றவற்றுக்கு உதவலாம்.


பல்வேறு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருப்பதால்,  இது ஃப்ரீ ரேடிக்கல்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது. இதிலுள்ள குர்குமின் கலவை ஒவ்வாமைகளை (allergy) எதிர்த்துப் போராட உதவுகிறது.


சுவாச மண்டலத்தை வலுப்படுத்த உதவுகிறது.  நுரையீரல் பிரச்னைகள், சுவாசக் கோளாறுகள், ஆஸ்துமா, இருமல் மற்றும் சளி ஆகியவற்றை எதிர்த்து பூலாங்கிழங்கு போராடுகிறது.


இதற்கு மேல் என்ன, பூலாங்கிழங்கை தேநீரிலோ, ஊறுகாயாகவோ, மசாலாப் பொருளாக உணவில் சேர்க்கத் தொடங்கி ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள்