உடல் எடை குறைப்புக்கு ஏதேதோ செய்யும் காலமிது. உடல் பருமன் நோய் உலகளவில் பெரிய அச்சுறுத்தலாகி வரும் சூழலில் உடல் எடையைக் குறைக்க எத்தனை எத்தனையோ டயட் ப்ளான்களும் மலிந்து வருகின்றன.


எடை குறைப்பு:


ஆனால் உடல் எடைக் குறைப்பு அவ்வளவு எளிதல்ல. 5 முதல் 10 சதவீத உடல் எடை குறைந்தாலே நம் உடலில் ரத்த அழுத்தம் சீராகும், கொழுப்பு சீராகும், ரத்த சர்க்கரை அளவு குறையும். அதனால் உடல் எடையை கட்டுக்குள் வைப்பது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு அடித்தளமாகும்.


உடல் எடைக் குறைப்பு நுட்பங்களில் ஒன்று வாழைப்பழ டயட். வாழைப்பழம் மட்டுமே சாப்பிட்டு உடல் எடையை குறைக்கலாம் எனக் கூறுகின்றனர். இதனை மோனோ டயட் எனக் கூறுகின்றனர்.


மோனோ டயட் என்றால் என்ன?


மோனோ டயட் அல்லது மோனோட்ரோபிக் டயட்டில், ஒரு நபர், பல நாட்கள் அல்லது வாரங்களுக்கு ஒரே ஒரு வகை உணவை மட்டுமே சாப்பிடுவார். இந்த வகை டயட் முறையில், எந்த ஒரு விதிகளோ அல்லது ஒழுங்குமுறையோ இல்லை. வாழைப்பழம் மோனோ டயட், முட்டை மோனோ டயட் என பல்வேறு வகை மோனோ டயட்கள் உள்ளன


மோனோ டயட்டின் நன்மைகள் என்ன?


2016 ஆம் ஆண்டு முதல் இந்த மோனோ டயட் பிரபலமானது, அப்போது ஒரு பிரபலமான நகைச்சுவை நடிகர் தனது எடை இழப்பு குறித்து ஒரு புத்தகத்தை எழுதினார், அதில் அவர் இரண்டு வாரங்கள் தொடர்ந்து உருளைக்கிழங்கை தவிர வேறு எதையும் உணவாக எடுத்துக்கொள்ளவில்லை என்றும், இதனால் அவர் 100 பவுண்டுகள் வரை எடையைக் குறைத்துள்ளதாகவும் எழுதியிருந்தார்.


இந்த உணவு கட்டுப்பாட்டிற்கு பெரிதாக வழிக்காட்டுதல்கள் இல்லை என்பதால் பின்பற்ற எளிமையான வழிமுறைகளாக இது உள்ளது. குறுகிய கால உடல் எடை இழப்பிற்கு இது உதவுகிறது, ஏனெனில் இந்த உணவுக் கட்டுப்பாடு சமயத்தில் நாம் பெரும்பாலான கலோரி நிறைந்த உணவுகளை தவிர்க்கிறோம், ஆனால் மற்றொரு பிரச்சனை என்னவென்றால் கலோரிகளை குறைப்பது போலவே அதிக ஊட்டச்சத்துள்ள உணவுகள், ஆரோக்கியமான உணவுகளையும் நாம் இந்த உணவு கட்டுப்பாட்டால் இழக்கிறோம்.


மோனோ டயட் ட்ரை பண்ணலாமா?


பல்வேறு மேக்ரோ மற்றும் நுண் ஊட்டச்சத்துகள் உடலுக்கு சேர்வதை இந்த வகை டயட் தடுக்கும் என்பதால் குறுகிய கால எடை குறைப்புக்கு வேண்டும் என்றால் ட்ரை பண்ணலாமே தவிர நீண்ட கால உடல் எடை பராமரிப்புக்கு இது போன்ற டயட் பரிந்துரைக்கப்படாது. அதைவிட முக்கியமானது இதனை இதுவரை எந்த ஒரு ஊட்டச்சத்து நிபுணரும், மருத்துவரும் அங்கீகரிக்கவில்லை.


வாழைப்பழமும் எடை குறைப்பும்..


வாழைப்பழத்தில் வைட்டமின்கள், மினரல்கள், மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இதனால் உடலின் அடிப்படை வளர்சிதை மாற்ற விகிதம் (பேசிக் மெட்டபாலிக் ரேட்- பி எம் ஆர்) மேம்படுகிறது. அடிப்படை வளர்சிதை மாற்ற விகிதம் அதிகரிக்கும்போது, உடல் எடை தானாக குறைகிறது. சாதாரணமாக உடல் எடை குறையும் நேரத்தை விட மிகவும் விரைவாகக் குறைகிறது.