தயிர் எலும்புகளுக்கும் மூட்டுகளுக்கும் வலு சேர்க்கும். தயிரால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் உண்டு. தயிரை சாப்பிடும் முறை அதில் உள்ள சத்துக்கள் நம் உடலுக்கு சிறப்பாக கிடைக்க வழி வகுக்கும். அந்த வகையில் தயிரையும் உலர் திராட்சையையும் சேர்த்து சாப்பிட்டால் அது உடலுக்கு பல்வேறு நன்மைகளை பயக்கும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.
தயிரின் நன்மைகள்...
அதற்கு முன்னதாக தயிரால் ஏற்படும் பொதுவான நன்மைகளை அறிவோம். தயிர் கைக்குழந்தை முதல் 100 வயது முதியவர் வரை எல்லோருக்கும் உகந்த உணவு. ஒவ்வாமை இருப்போர் விதிவிலக்கு. தயிர் என்பது லேக்டோபேசிலஸ் பாக்டீரியாவால் நொதிக்கப்பட்டு லேக்டிக் அமிலம் லேக்டோஸாக மாற்றப்படுகிறது.
இது ஜீரணத்தை தூண்டுகிறது. இதில் கலோரி குறைவு. அதேவேளையில் புரதச் சத்து நிறைவாக இருக்கிறது.
28 கிராம் தயிரில் 12 கிராம் புரதம் இருக்கிறது. தயிர் செல்களில் நீர்ச்சத்தை பாதுகாக்கிறது. அதனால் சிறுநீரக செயல்பாடு சீராகிறது. ரத்த சர்க்கரை அளவைக் குறைக்கிறது. அதனால் சர்க்கரை நோயாளிகள் தங்கள் டயட்டில் நிச்சயமாக தயிரை சேர்த்துக் கொள்ளலாம்.
தயிரை சாப்பிட சிறந்த நேரம் மதிய வேளை தான். இரவு நேரத்தில் தயிரை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஆனால் முடியாத பட்சத்தில், தயிருடன் சர்க்கரை அல்லது சிறிது மிளகுத் தூள் சேர்த்து சாப்பிடலாம். இதனால் செரிமானம் மேம்படும். தயிருடன் வாழைப்பழத்தை சேர்த்து சாப்பிடக்கூடாது. அதேப் போல் தயிருடன் சீஸ் சேர்த்தும் சாப்பிடக்கூடாது.
தயிருடன் நட்ஸ் சேர்த்து சாப்பிடவே கூடாது. ஏனெனில் இவை இரண்டிலுமே புரோட்டீன் அதிகம் இருப்பதால், அது செரிமான மண்டலத்திற்கு அதிக அழுத்தத்தைக் கொடுக்கும்.
அதே சமயத்தில் அசைவ உணவுகளான சிக்கன், மட்டன், மீன், காடை, கவுதாரி என எந்தவொரு அசைவ உணவுடனும் தயிரை சாப்பிடகூடாது. அதிலும் மிக முக்கியமாக மீனையும் தயிரையும் ஒன்றாக சாப்பிட்டால் தோல் வியாதி ஏற்படும்.
தயிருடன் உலர் திராட்சை சேர்த்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன?
தயிர், உலர் திராட்சை என இரண்டிலும் கால்சியம் உள்ளது. இவற்றை இணைத்து சாப்பிடும்போது ஆஸ்டியோபோரோஸிஸ் நோய் வரும் அபாயம் உள்ளவர்களுக்கு அது தவிர்க்கப்படும். எலும்பின் அடர்த்தியை அதிகரிக்கும். இதனால் எலும்புகள் வலுப்பெறும்.
மூட்டுகளுக்கும் வலு சேர்க்கும்..
உலர் திராட்சைகள் எப்படி மூட்டுகளுக்கு வலு சேர்க்கும் என்று பார்ப்போம். தயிர் மற்றும் உலர் திராட்சையை சேர்க்கும் போது முக்கியமான அவசியமான தாதுக்கள் உள்ளன. அதனால் இவற்றை சேர்த்து உண்ணும்போது மூட்டுகள் வலுப்பெறும்.
இது குறித்து பிரபல ஊட்டச்சத்து நிபுணர் ருஜுதா திவேகர் இவ்வாறு கூறியிருப்பார். தயிர் ப்ரோபயாடிக்காகவும், உலர் திராட்சைகள் அதன் கரையும் தன்மை கொண்ட நார்ச்சத்தால் ப்ரீபயாடிக்காக வேலை செய்யும். ப்ரோபயாடிக், ப்ரீபயாடிக் என்ற இரண்டும் இணையும்போது அவை குடலில் உள்ள அழற்சியை நீக்கி நல்ல பாக்டீரியக்கள் வளரச் செய்யும். அதனால் மூட்டுக்கள் வலுப்பெறுவதோடு பல், ஈறுகளும் வலுவாகும்.
இவ்வாறு ருஜுதா கூறியிருக்கிறார்.