ஹோட்டலுக்கு செல்லும் பலரும் சப்பாத்தி ஆர்டர் செய்வதுண்டு. அதற்கு முதல் காரணம் ஹோட்டல் சப்பாத்தியின் மிருதுவான தன்மையும் அதன் முழு வட்ட வடிவமும் தான். வீட்டில் செய்யும் சப்பாத்தி பெரும்பாலான வீடுகளில் அஷ்டகோணலாகவும் ஜவ்வு மிட்டாய் போலவும் இருந்துவிடுவது துரதிர்ஷ்டம் எல்லாம் இல்லை. மாவு பிணைவதில் தவறும் பக்குவம்தான். அதனால் ஹோட்டல் சப்பாத்தி போல் சாஃப்டா, வட்டமா வீட்டிலேயே செய்ய இந்த சின்னச்சின்ன டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க போதும்.


வெதுவெதுப்பான தண்ணீர் பயன்படுத்துங்கள்


சப்பாத்தி மாவு பிசைய வெதுவெதுப்பான தண்ணீர் பயன்படுத்துங்கள். இதுதான் மாவு மிருதுவாக வர முதல் ஸ்டெப். அதேபோல் மாவை கையில் ஒட்டும் பதத்தில் அல்லாமல் பிசைய வேண்டும். பிசைந்த மாவை குறைந்தது 20 நிமிடமாவது ஊறவிடுங்கள். வெதுவெதுப்பான நீர் பயன்படுத்தினால் 7 நிமிடங்கள் ஊற விடுங்கள்.


இப்போது சப்பாத்தியை தேய்த்து எடுக்கலாம்


நன்றாக ஊறிய மாவை சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்துக் கொள்ளுங்கள். அதை உருண்டையாக்கும் போது விரிசல் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் மாவை பதமாக பிசைந்துள்ளீர்களா என்பது உருண்டையை திரட்டும்போது தெரிந்துவிடும். உருண்டை எவ்வித விரிசலும் இல்லாமல் வந்தால் உங்கள் மாவு பதமாக இருக்கிறது என்று அர்த்தம். சப்பாத்தி 5 முதல் 7 இன்ச் விட்டத்தில் வருவதுபோலவும் ஒன்றரை முதல் இரண்டரை மில்லி மீட்டர் தடிமன் இருப்பது போலவும் தேய்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் சப்பாத்தியை தேய்ப்பதற்கு பச்சை கோதுமை மாவை பயன்படுத்தியிருந்தால் சப்பாத்தியை கல்லில் இடுவதற்கு முன்னர் மேலே உள்ள மாவை தட்டிவிட்டு இடுங்கள்.


நயமான கோதுமை மாவு


மாவு பிசையும் பதம், சப்பாத்தியை தேய்க்கும் விதம் எல்லாம் முக்கியம் தான். ஆனால் அதற்கெல்லாம் அடிப்படை கோதுமை மாவு. நல்ல நயமான சுத்தமான ஃப்ரெஷ்ஷான மாவு தான் உங்கள் சப்பாத்திக்கு மற்ற எல்லா பண்பையும் தரும். நீங்கள் மல்டி க்ரெயின் மாவு என்ற விருப்பங்களுக்குச் சென்றால் நீங்கள் எதிர்பார்க்கும் மிருது கிடைக்காது. அதனால் வெறும் கோதுமை மாவை மட்டும் பயன்படுத்துங்கள்.


எண்ணெய்க்குப் பதில் நெய் பயன்படுத்துங்கள்


சப்பாத்தியை இடும்போது எண்ணெய்குப் பதில் நெய் பயன்படுத்துங்கள். இது மிகவும் முக்கியமானது. சப்பாத்தி தேய்க்கும் பலகையில் கொஞ்சம் நெய் தேய்த்துக் கொள்ளுங்கள். இது சப்பாத்தி ஒட்டிக் கொள்ளாமல் இருக்க உதவும். மேலும் உங்கள் சப்பாத்தி நன்கு உப்பிவரவும் உதவும்.


நேரம் முக்கியம்


சப்பாத்தி நன்றாக வேக விட வேண்டும். அதே நேரத்தில் தீயையும் கவனமாகக் கையாள வேண்டும். சப்பாத்தியை இடுவதற்கு முன் பேன் நன்றாக சூடாகியிருக்க வேண்டும். 160 முதல் 180 டிகிரி வரை பேன் சூடாகியிருக்க வேண்டும். இந்தச் சூட்டில் இருக்கும் கல்லின் மீது சப்பாத்தியைப் போட்ட பின்னர் அது 10 முதல் 15 விநாடிகள் ஒருபுறம் வேக வேண்டும். மறுபுறம் திருப்பியவுடன் அது 30 முதல் 40 விநாடிகள் வேக வேண்டும். இந்த நேரம் கொடுத்தால் தான் சப்பாத்தி மிருதுவாக இருக்கும்.
 
இவ்வளவு தாங்க மிருதுவான, சுவையான சப்பாத்திக்கான தாரக மந்திரம். பொதுவாக எந்த ஒரு உணவும் அது முழுமையாக சமைப்பதற்கான நேரத்தை வழங்கினால் அந்த உணவு ருசியாக இருக்கும். சமையல் பொறுமை பழக நல்லதொரு யோகா!!!